இஸ்ரேல் – ஹமாஸ் போர், பிராந்திய மற்றும் சர்வதேசத் தளத்தில் அதிக பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேற்குலகநாடுகளதும் அரபு நாடுகளதும் தொண்டு பணியாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் ஒருபுறம் அமைய, மறுபக்கத்தில் ஈரானின் சிரியாவில் அமைந்துள்ள தூதரகம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் பிராந்தியப் போர் பற்றிய உரையாடலைத் தொடக்கியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் பிராந்திய, சர்வதேசப் பரிமாணம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்த போதிலும் நடைமுறையில் இதுவரை இப்போர் அத்தகைய நிலையினைத் தொடவில்லை என்றே தோன்றுகிறது. அதற்கு மேற்குலகம் மட்டுமல்ல ஈரான் மற்றும் அராபிய நாடுகளும் பிரதான காரணமாகத் தெரிகிறது. இப்போர் இஸ்ரேல் – ஹமாஸ் முழுநீளப் போராகவே காணப்படுகிறது. அதுவே தற்போதைய அராபிய நாடுகளது உத்தியாகவும் அமைந்துள்ளது. அதனால் இஸ்ரேல் எதிர்பார்க்கப்பட்ட வாய்ப்புக்களை அடைய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீதான நெருக்கடியைத் தேடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகவுள்ளது.
01.04.2024 சிரியாவின் மெசே மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் இருந்த ஈரானிய தூதரகக் கட்டத்தை நோக்கிய இஸ்ரேலிய விமானங்கள் நடாத்திய தாக்குதலில் ஈரானின் ஏழு இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரானிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஈரானியப் படையின் மூத்த தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேடி அவரது துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹாடி ஹஜி ரஹிமி ஆகிய இரு பிரதான தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத் தாக்குதலில் சிரிய இராணுவமும் கொல்லப்பட்டதாகவும் சிரிய இராணுவம் அறிவித்துள்ளது.
03.04.2024 இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் தன்னார்வ தொண்டுப் பணியாளர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியா, பிரித்தானியா மற்றும் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுப் பிரஜைகளும் கூட என்பது குறிப்பிடத்தக்கதாகும். 100 தொன் உணவுப் பொதிகளை இறக்கும் போதே இச்சம்பவம் நடைபெற்றதாக தெரியவருகிறது. இத்தாக்குதலுக்கு உலகநாடுகள் மத்தியில் பாரிய கண்டனம் எழுந்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதலை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாடியுள்ளார். இரு தலைவர்களும் மனிதாபிமானப் பணியாளர் மீதான தாக்குதலையடுத்து அதற்கு தீர்வுகாணும் விதத்தில் கலந்துரையாடியுள்ளனர். ஏற்கனவே ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்திற்கு அமெரிக்கா வாக்களிக்காது நடுநிலை வகித்ததற்கு இஸ்ரேல் பாரிய கண்டனத்தை வெளிப்படுத்தியது. அதுமட்டுமன்றி, இஸ்ரேல் தனித்து இயங்கப் போவதாகவும் மேற்குநாடுகளது ஆதரவு தேவையற்றதெனவும் நெதன்யாகு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்குறித்த இரு சம்பவங்களும் இஸ்ரேலின் தாக்குதலை மட்டுமல்ல இஸ்ரேலின் அரசியலையும் தனிப்பட்ட ரீதியில் நெதன்யாகுவின் அரசியல் இருப்பையும் பாதித்துள்ளது. அதனை விரிவாக விளங்குதல் அவசியமானது.
முதலாவது, இஸ்ரேல் தனித்து விடப்படும் நிலைஅதிகம் உணரப்படுகிறது. அது ஒன்றும் இஸ்ரேலுக்கு புதியதல்ல. ஆனால் அராபிய நாடுகளின் தலைவர்கள் விழிப்படைந்துள்ள தற்போதைய சூழலில் இஸ்ரேல் மேற்கிலிருந்து தனிமைப்படுவது ஆபத்தானது. அதனை மேற்குலக நாடுகளின் தலைவர்கள் உணரும் நிலையில் இஸ்ரேலிய தலைவர்கள் இல்லை, என்பது அல்ல பிரச்சினை. மேற்குத் தலைவர்களையும் உலகத்தையும் யூதர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனிக்கும் உத்தியையே மேற்குடனான முரண்டுபிடித்தலில் இஸ்ரேல் அடைய முனைகிறது. மேற்குக்கும் – இஸ்ரேலுக்குமான உறவு பலமானது. அதனை இலகுவில் பலவீனப்படுத்தமுடியாது. அது இருதரப்பின் நலன்களில் தங்கியுள்ளது. அதனால் தற்போது எழுந்துள்ள முறிவு நிரந்தரமானதல்ல. அது உலகத்தை திட்டமிட்டு கையாளும் உத்தியாகும். தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்புகோரிய இஸ்ரேல் உலகளாவிய கண்டனத்திற்கு முகங்கொடுக்கத் தயாராகிவிட்டது. தரைவழித் தாக்குதல் அதிக பாதிப்பை இஸ்ரேலுக்குகொடுத்துள்ளது, என்பதை அதன் அணுகுமுறைகளிலிருந்து உணரமுடிகிறது.
இரண்டாவது, இஸ்ரேலின் ஈரானிய, சிரியத் தூதரகம் மீதான தாக்குதலை தொண்டுப் பணியாளர் மீதான தாக்குதல் மூலம் கையாண்டுள்ளதாகவே தெரிகிறது. அத்தகைய தாக்குதலை இஸ்ரேல் பல தடவை ஈரான் மீது நிகழ்த்தியுள்ளது. சிரியா மீதும் ஈரானிய ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் மீதும் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. தற்போதைய தாக்குதலை வெளிப்படையாகவே இஸ்ரேல் நிகழ்த்தியுள்ளதுடன் அதன் விளைவுகள் குறித்து எந்தவித இஸ்ரேல் வெளிப்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். ஆனாலும் ஈரானின் தூதரகத்தின் மீதான தாக்குதலின் போது ஈரானிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டமை ஈரான் இஸ்ரேல் மீதான கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதலை எப்படிக் கையாளுகின்றது என்பதைவெளிப்படுத்துகிறது. இது அராபிய நாடுகளின் தற்போதைய உத்தியாகவே தெரிகிறது. ஈரானின் மூத்த தளபதி சுலைமானி கொல்லப்பட்டபோதும் இத்தகைய நகர்வுக்கான முக்கியத்துவமே காணப்பட்டது. அதனை அமெரிக்கா வெளிப்படையாக தாம் மேற்கொண்டதாக அறிவித்தது. அதுவும் இஸ்ரேலிய, அமெரிக்க கூட்டுத் தாக்குதலாகவே காணப்பட்டது. அவ்வாறே ஈரானிய அணுவிஞ்ஞானி மீதான தாக்குதலும் இஸ்ரேலிய – அமெரிக்கக் கூட்டுத் தாக்குதலாகவே காணப்பட்டது. எனவே ஈரான் மீதான தாக்குதல் தொடர்ச்சியானதாகவும் இராணுவ தளபதிகளை இலக்கு வைத்தும் அமைந்துள்ளமை அதன் இராணுவ இருப்பை முழுமையாக சீர்குலைப்பதன் மூலம் இஸ்ரேலிய இருப்பைத் தக்கவைக்க திட்டுமிடுகிறது. இஸ்ரேலிய – அமெரிக்க கூட்டின் திட்டமிடல் அதிக சாதகமான நிலையையும் அத்தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவது, ஈரான் இப்போரில் ஈடுபடுமாயின் இஸ்ரேல் அதிகமான வாய்ப்புக்களை தனதாக்கும் என்பது மட்டுமல்லாது மேற்கின் ஒத்துழைப்பு இலகுவாக கிடைக்குமென இஸ்ரேல் கருதுகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கு மட்டுமல்ல யூதர்களும் நெதன்யாகுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடும் நிலை ஏற்படும் என இஸ்ரேலியத் தரப்பு கருதுகிறது. ஈரான் மட்டுமல்ல ஏனைய அராபிய நாடுகளும் போரில் ஈடுபடுவது இஸ்ரேலுக்கு இலாபகரமானதென மேற்கு நாடுகளும் கருதுகின்றன. போரை நீண்ட காலத்திற்கு இழுத்தடித்துவிட்டு அராபிய நாடுகளைத் தாக்குவதும் இஸ்ரேல் – மேற்குலகத்தின் உத்தியாக உள்ளது. ஆனால் அராபிய நாடுகள் கிளர்ச்சிக் குழுக்களை வைத்துக் கொண்டு போரை நகர்த்தத் திட்டமிடுகின்றன. அதனாலேயே இரு தரப்பும் போரில் சமவலுவுடைய உத்திகளால் நகர்கின்றன. ஆனால் இரு தரப்பும் எதிரிகளின் வாய்ப்புக்களுக்காக காத்திருக்கின்றன என்பது யதார்த்தமானதாகவே உள்ளது.
நான்காவது, ஈரானை இப்போரில் ஈடுபடுத்துவதென்பது தனித்து ஈரானைத் தோற்கடிப்பதல்ல. மாறாக மேற்காசியாவின் அரசியல்- இராணுவ வலிமையை அமெரிக்க- இஸ்ரேல் கூட்டு தக்கவைப்பதற்கான உத்தியாகவே உள்ளது. செங்கடலை மையப்படுத்திய போர் என்பது மேற்குலகத்தின் வர்த்தக இருப்பை பாதிக்கும் விடயமாக மாறியுள்ளது. அதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின் ஈரான் பலவீனப்படுவதன் வாயிலாக கிளர்ச்சிக் குழுக்களை தோற்கடிக்க முடியுமெனக் கருதுகின்றன. அவ்வாறு கிளர்ச்சிக் குழுக்கள் வீழ்வதன் மூலமே செங்கடல் மற்றும் சுயஸ்கால்வாய்ப் பகுதி மேற்கின் கைகளுக்குள் பாதுகாப்பனதாக இருக்கும். அதனால் இஸ்ரேல் தாக்குதல் ஈரானை நோக்கியதாக உள்ளது. ஈரானை நிலஅடிப்படையில் கைப்பற்றுவதென்பது கடினமான இலக்காகும். அதனால் அதன் இராணுவ வலிமைமீது இலக்குக் கொண்டு அமெரிக்காவும்- இஸ்ரேலும் நகர்கின்றன.
ஐந்தாவது, ஐ.நா முதல் அமெரிக்கா வரை இஸ்ரேல் மீதான கண்டனம் முதன்மையடைந்துள்ளதென்பதைக் காட்டிலும் பிரித்தானியாவின் ஆயுத தளபாட விநியோகம் பற்றிய எச்சரிக்கையே இஸ்ரேலை அதிகம் பாதித்துள்ளது. அதற்காக இஸ்ரேலுக்கான ஆயுதவிநியோகத்தை பிரித்தானியா முழுமையாக கைவிடும் என்று கூறிவிடமுடியாது. மாறாக இஸ்ரேலை நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கான உத்தியாகவே பிரித்தானிய எச்சரிக்கை அமைந்துள்ளது. அமெரிக்காவின் தேர்தலும் ஆட்சி மீதான நெருக்கடியும் அத்தகைய எச்சரிக்கைகளை உருவாக்கியிருக்கிறதே அன்றி முழுமையான தோற்கடிப்புக்கானதோ அல்லது மனிதாபிமான நகர்வுக்கான நடவடிக்கையோ கிடையாது. தமது நாடுகளில் எழவுள்ள எதிர்ப்பினை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டமிடலுடனேயே மேற்குலகத் தலைவர்கள் இயங்குகின்றனர்.
எனவே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலானது அதன் போர் உணர்வை மட்டுமல்ல அதன் தாக்குதலின் முதன்மையைக் கோடிட்டுக்காட்ட உதவுகிறது. எல்லாத் தளத்திலும் போரை இஸ்ரேலிய – அமெரிக்க கூட்டுத் திட்டமிட்டு நகர்த்துகிறது. இதில் இஸ்ரேல் மீதான கண்டனங்களும் எச்சரிக்கைகளும் இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகவே தெரிகிறது. அதன் மூலம் போரை நீடிக்கவும் அதனால் ஈரான் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கும் சக்திகளைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையை மேற்குலகம் கடைப்பிடிக்க திட்டமிடுகிறது.
அதன் பிரதிபலிப்பே இஸ்ரேலிய ஆட்சியாளர் மீதான அழுத்தமாகும். இதனால் இஸ்ரேல் ஒன்றும் தனிமைப்படுவதோ மனிதாபிமான நகர்வுகள் பாலஸ்தீன மக்களுக்கு சாதகமானதாக அமையும் என்றோ கருதிவிட முடியாது.