ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் மார்ச் 23ஆம் திகதியன்று குரோக்கஸ் நகர அரங்கில் மேற்கொள்ளப்பட்ட ஆயுததாரிகளின் தாக்குதல் பாரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்ற போதும் ரஷ்ய ஜனாதிபதியோ, ரஷ்ய மக்களோ அதனை ஏற்கத் தயாராக இல்லை என்றே தெரிகிறது. தாக்குதல்தாரிகள் உக்ரைனுக்குள் நுழைய முயன்றதும் அமெரிக்கா மட்டுமல்ல மேற்குலகம் தாக்குதலைக் கண்டுகொள்ளாமையும் அதன் தாற்பரியத்தை உணர்த்துகிறது.
இத்தாக்குதலுக்கு அமெரிக்கா காரணமெனவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஐ.எஸ் என்ற கோணத்தில் அதற்கான வாய்ப்புக்கள் அதிகமுண்டு. காரணம் இதேபோன்ற தாக்குதல்களை பயங்கரவாதம் எனக் கூறும் மேற்குலகம் இதனை பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை. விளாடிமிர் புட்டின் ஐந்தாவது தடவையாக ஜனாதிபதியானதை ஏற்றுக் கொள்ள முடியாத மேற்குலகம் அதனை அதிகம் விமர்சனம் செய்திருந்தது. அதனால் தாக்குதலுக்கும் மேற்குலகத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்பதை சாதாரணமாக இனங்காண முடியும். உலகம் ஒரே பொருளாதாரத்தில் பயணித்தாலும் இரு அரசியல் போக்குக்குள் இயங்குகின்றன என்பதை புரிந்து கொள்வதன் வாயிலாக அதனை விளங்கிக் கொள்ள முடியும். அத்தகைய ஒருவடிவத்திற்குள் இஸ்ரேல்- – அமெரிக்க முறுகலை புரிந்து கொள்ள இக்கட்டுரை முயலுகிறது.
காஸாவில் உடனடிப் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு சபை தீர்மானம் (26.03.2024) நிறைவேற்றியுள்ளது. அதில் அமெரிக்கா தனது வீட்டோவைப் பாவிக்காமை தொடர்பில் இஸ்ரேல் அதிக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இத்தீர்மானத்தின் படி பணயக்கைதிகள் அனைவரும் எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா மட்டுமே வாக்களிக்காது தவிர்த்துக் கொண்டது. ஏனைய நிரந்தர, தற்காலிக நாடுகள் வாக்களித்துள்ளன.
இத்தகைய நடவடிக்கை பற்றி அமெரிக்காவின் ஐ.நா. தூதுவர் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டா குறிப்பிடும் போது ரஷ்யாவும்- சீனாவும் ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவிக்காதவையாக இன்னும் உள்ளன. இராஜதந்திர ரீதியில் நீடித்த அமைதியை முன்னெடுப்பதில் ரஷ்யாவும்- சீனாவும் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் ஹமாஸ் அமைப்பை கண்டனத்திற்கு உட்படுத்தாதது குறித்து அமெரிக்கா ஏமாற்றம் அடைவதாக குறிப்பிட்டார். தீர்மானத்திலுள்ள அனைத்தையும் அமெரிக்கா ஏற்கவில்லை. அந்தக் காரணத்தினாலேயே அமெரிக்காவால் வாக்களிக்க முடியவில்லை. ஆனால் இந்த கட்டுப்பாடற்ற தீர்மானத்தில் சில முக்கிய நோக்கங்களை முழுமையாக ஆதரிக்கிறோம். அனைத்து பணயக் கைதிகளின் விடுதலையோடு போர் நிறுத்தம் வரவேண்டும் என்பது முக்கியம் என அமெரிக்கா நம்புகிறது எனக்குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத் தீர்மானத்தை வீட்டோ செய்ய அமெரிக்கா தவறியிருப்பது அந்த நாட்டின் தெளிவான பின்வாங்கலாகும் என்றார். அது மட்டுமன்றி கடந்தவாரம் இஸ்ரேலியப் பிரதிநிதி வெள்ளை மாளிகைக்கு மேற்கொள்ள இருந்த விஜயம் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படுவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனை பைடன் நிர்வாகம் எதிர்ப்பதாகவும் அமெரிக்கா ஏமாற்றமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை நான்கு தடவைகள் போர்நிறுத்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் அனைத்தும் கைவிடப்பட்டன. தற்போது மட்டுமே அத்தகைய தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்யாததனால் நிறைவேறியுள்ளது. ஆனால் போருக்கு ஆதரவும் தூண்டலும் வழங்கியதுடன் ஆயுத தளபாட விநியோகத்தை அதிகளவில் போருக்காக வழங்கிய அமெரிக்கா ஏன் திடீரென பின்வாங்குகிறது. அப்படியாயின் உண்மையாகவே போர்நிறுத்தத்தை அமெரிக்கா விரும்புகிறதா? அப்படியாயின் ஏன் என்ற கோள்வி பிரதானமானது. அதற்கான புரிதல் அவசியமானது.
முதலாவது, தற்போது முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கவில்லை என்பதை லிண்டா தோமஸ் குறிப்பிட்டதுடன் இதனை ஒர் இராஜதந்திர நகர்வாகவே கருதுவதாக வெளிப்படுத்தியுள்ளார். போர்க்களத்தில் வெற்றி கொள்ள முடியாததை பேச்சுவார்த்தை மேசையில் அமைதியாக வெற்றி கொள்வதே அமெரிக்காவின் இலக்காகத் தெரிகிறது. போர் பெரும்பாலும் இராஜதந்திரத்தின் முடிவாகக் கருதப்படும். அதேவேளை இராஜதந்திர முயற்சிகள் மோதல்களின் போக்கையும் சமாதான விதிமுறைகளையும் வடிவமைக்க தொடங்குகின்றன. போரைத் தடுப்பதற்கும் மோதல்களை தீர்ப்பதற்கும் நாடுகளுக்கிடையே அமைதியான உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இராஜதந்திரம் சக்திவாய்ந்த கருவியாக உள்ளது. போரைத் தடுக்கும் அல்லது தூண்டலை ஏற்படுத்தும் கூட்டணிகளை இராஜதந்திரம் தயார் செய்கிறது. இது எதிரணியின் கூட்டணியை தகர்க்கிறது. மற்றும் விரோத சக்திகளின் செயலற்ற தன்மைகளை நிலைநிறுத்துகிறது. இந்த வகைக்குள்ளேயே போர் இராஜதந்திரம் காணப்படுகிறது. இதனையே அமெரிக்கா நகர்த்த முயலுகிறதாகத் தெரிகிறது.
இரண்டாவது, அமெரிக்காவின் ஐ.நா. தூதுவர் பைடன் நிர்வாகம் என்றே அதிக இடங்களில் விளிக்க முயலுகிறார். அப்படியாயின் பைடனின் 2024 தேர்தல் தொடர்பில் இஸ்ரேல், -ஹமாஸ் போர் நிறுத்தம் உரையாடப்பட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அமெரிக்க மக்கள் அதிக தடவை ஜனாதிபதி பைடனிடம் ஹமாஸ்- – இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரிவருகின்றனர். பைடனின் தேர்தல் போட்டியாளரான டொலால் ட்ரம்ப் இஸ்ரேல்- – ஹமாஸ் போர் பற்றி அதிக குழப்பமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். உக்ரை – ரஷ்யப் போர் அமெரிக்காவுக்கு பாரிய நிதியிழப்பினை தந்துள்ளதாகவே குடியரசுக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படியான நிலையில் ஜனநாயகக் கட்சியின் இஸ்ரேல்- – ஹமாஸ் போர்ச் சூழலை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஜனநாயகக் கட்சியினர் ஹமாஸ்- – இஸ்ரேல் போரை தற்காலிகமாக மாற்றியமைக்க முடியாத நிலையில் தேர்தல் வெற்றியை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய நிலை ஏற்படும் எனக் கருதுகின்றனர்.
மூன்றாவது, ஹமாஸ்- – இஸ்ரேல் போர் உலகளாவிய ரீதியில் அமெரிக்கா மீதும் மேற்குலகத்தின் மீதும் அதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போரை நகர்த்துவதில் மேற்குலகமே காரணம் எனவும் மேற்குலகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபுகளும் நியாயாதி செய்முறைகளும் தோல்விகண்டு விட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு. நாடுகளும் நாடுகளின் தலைவர்களும் அத்தகைய விமர்சனத்தை அதிகம் முதன்மைப்படுத்துகிறார்கள். மேற்குலகத்தின் மனித உரிமைகளும், மனிதாபிமானச் சட்டவரைபுகளும், சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகளும் காஸாவில் காணாமல் செய்யப்படுவதில் மேற்குலகத்திற்கே அதிக பங்குள்ளதாக கணிப்பிடப்படுகிறது. அதனால் அத்தகைய மனிதாபிமான செயல்களை இஸ்ரேல் தடுப்பதாகக் கூறிக் கொள்வதன் வாயிலாக அத்தகைய விமர்சனத்தை மேற்கு தவிர்க்க முயலுகிறது. ஆயுத தளபாடங்களை இஸ்ரேலுக்கு வழங்கிய அதே வழிமுறையூடாகவே மேற்கு, பாலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொதிகளை வழங்க முயற்சித்தது. இத்தகைய இரட்டை நிலைப்பாட்டை உலகம் கண்டு கொள்வதில் அதிக விளிப்படைந்திருப்பதை திசைதிருப்புவதற்கே போர் நிறுத்தத் தீர்மானத்தை மேற்கு கையாண்டது. அதனையே அது இராஜதந்திரம் எனும் ஒற்றைவரியில் குறிப்பிட்டுள்ளது.
நான்காவது, இத்தகைய நகர்வினால் அமெரிக்கா பணயக் கைதிகளை மீட்க முயற்சிக்கிறது. அதனை ஒரு தேர்தல் பிரசாரமாக மாற்றும் உத்தியும் காணப்படுகிறது. காரணம் ஹமாஸ் கைது செய்த அமெரிக்க பிரஜைகளை அமெரிக்கா மீட்க முயற்சிக்கவில்லை என்ற விமர்சனம் பைடன் நிர்வாகத்தின் மீது உள்ளது. ஹமாஸ் அமைப்பும் அவர்களை விடுவிப்பதில் தெளிவான அரசியல் போக்கினைக் கொண்டதாக உள்ளது. யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கர்களும் ஹமாஸின் இலக்கில் முக்கியமானவர்களாக உள்ளனர். அதனை ஒரு தேர்தல் பிரசாரமாக எதிரணி வேட்பாளர் கொண்டு செல்ல வாய்ப்பு அதிகமுள்ளது. அதனால் அத்தகைய நகர்வை சாத்தியப்படுத்தும் உத்தியும் அமெரிக்கத் தரப்பிடம் உள்ளதாகவே தெரிகிறது.
ஐந்தாவது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் இஸ்ரேலிய செல்வந்தர்களுக்கு அதிகமான தொடர்பு உண்டு. பைடன் நிர்வாகமா அல்லது ட்ரம்ப் நிர்வாகமா என்பதை தீர்மானிப்பதில் யூத செல்வந்தர்களுக்கு பங்குள்ளது. அதனால் இத்தகைய நகர்வுகளுக்கு பின்னால் அமெரிக்காவுடன் அத்தகைய செல்வந்தர்களது பங்கு தவிர்க்க முடியாததாகவே அமைந்திருக்கும். அதனால் இது அமெரிக்க- – இஸ்ரேலிய கூட்டின் பிரதிபலிப்பாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இஸ்ரேலின் சர்வதேச அரசியல், அமெரிக்கா என்ற ஒற்றை நாட்டின் உறவிலிருந்தே தொடங்குகிறது. அப்படியாயின் அதனை இஸ்ரேல் இலகுவில் இழந்துவிடாது என்பது முக்கியமானதாகும். எப்போதும் உலக அரசியலின் போர்களும் சமாதான நகர்வுகளும் கூட்டுக்களின் பலத்திலேயே தங்கியுள்ளது. அத்தகைய கூட்டுப்பலம் அமெரிக்காவும் அதன் வழியாக எழுந்த நேட்டோவும் ஐரோப்பாவுமே இஸ்ரேலின் பலமாகும். எதிரணியான ரஷ்யா, சீனாவில் ஒருபோதும் இஸ்ரேல் இயங்க முடியாது.
எனவே அமெரிக்கா- – இஸ்ரேல் முறுகலோ மோதலோ நிரந்தரமான வடிவம் கிடையாது. இது தற்காலிக ஒத்துழைப்பு இராஜதந்திரத்தின் வடிவமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இரு நாடுகளும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. அதனை தகர்ப்பதென்பது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் அபாயகரமானது.