சில்ஹட்டில் பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் முதல் இன்னிங்ஸில் தலா 102 ஓட்டங்களை பெற்றனர். ஆனால் இலங்கை அணி மொத்தமான 280 ஓட்டங்களையே பெற்றது.
அதாவது இந்த வீரர்களின் ஓட்டங்களை தவிர்த்துப் பார்த்தால் இலங்கை அணி 76 ஓட்டங்களையே பெற்றிருந்தது. என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு வீரர்கள் இரண்டைச் சதம் பெற்று அணி ஒன்று இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற மிகக் குறைவான ஓட்டத்தை பெற்ற வரிசையில் இது இரண்டாவது இடத்தையே பெற்றது.
2009 மார்ச்சில் ஹமில்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மொத்தம் 279 ஓட்டங்களை பெற்றபோதும் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் டானியல் விட்டோரி இருவரும் சதம் பெற்றிருந்தனர்.
2014 இல் போர்ட் எலிசமத்தில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றபோதும் மர்லன் சாமுவேல்ஸ் மற்றும் கிரேக் பிரத்வெயிட் சதம் பெற்றிருந்தனர். அணி ஒன்று தனது இன்னிங்ஸ் ஒன்றை முழுமையாக ஆடாத பட்சத்திலும் மிகக் குறைந்த ஓட்டங்களில் இருவர் சதம் பெற்ற போட்டி 1984 இல் நடைபெற்றது. ஹைதராபத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 230 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தோற்கடித்தது. அப்போது முதாசர் நாசர் மற்றும் ஜாவிட் மியன்டாட்ட சதம் பெற்றிருந்தனர்.
எனினும் சில்ஹட் டெஸ்டில் கமிந்து மற்றும் தனஞ்சய 200 ஓட்ட இணைப்பாட்டத்தை பதிவு செய்திருந்த நிலையில் அந்த அணி பெற்ற 280 ஓட்டங்களும் டெஸ்ட் இன்னிங்ஸில் குறைவாக இருந்தது. இதற்கு முன்னர் 1985 இல் கிங்ஸ்டனில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 283 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஜெப் ஹோவார்த் மற்றும் ஜெப் கிரூ இரண்டாவது விக்கெட்டுக்காக 210 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.
இதில் தனஞ்சய மற்றும் கமிந்து இருவரும் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது டெஸ்ட் வரலாற்றில் ஒரே அணியில் இரு வீரர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்ற மூன்றாவது சந்தர்ப்பமாக பதிவானது. இதற்கு முன் 1974 ஆம் ஆண்டு வெளிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் இயன் மற்றும் ஜோர்ஜ் சப்பல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றதோடு 2014 ஆம் ஆண்டு அபூதாபியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் மற்றும் அஸார் அலி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்தனர்.
வேகப்பந்தில் அரிய சாதனை
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டுவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. கசுன் ராஜித்த, விஷ்வ பெர்னாண்டோவுடன் லஹிரு குமாரவும் இடம்பெற்றிருந்தனர். சில்ஹட் மைதானம் வேகப்பந்துக்கு சாதகமாக இருந்ததை இந்த மூவரும் உச்சபட்சமாக பயன்படுத்தினர். அதாவது இந்த டெஸ்டில் பங்களாதேஷ் அணியின் 20 விக்கெட்டுகளையும் இந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே வீழ்த்தினர்.
இலங்கை டெஸ்ட் வரலாற்றில் 38 ஆண்டுகளின் பின்னரே மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் போட்டி ஒன்றில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள். இதற்கு முன்னர் இவ்வாறு நிகழ்ந்தது. 1986 இல் கொழும்பில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலாகும். அந்தப் போட்டியில் அஷன்த டி மேல், ரவி ரத்னாயக்க மற்றும் கோசல குருப்புவாரச்சி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதிர்ஷ்டமா? துரதிருஷ்டமா?
ஒருநாள் சர்வேதச கிரிக்கெட் வாழ்வில் தனது அதிகூடிய ஓட்டங்களை தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பெற்றால் எப்படி இருக்கும். அதனை துரதிருஷ்டமா? அதிர்ஷ்டமா? என்று கூறுவது சிரமம். ஏனென்றால் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடியிருக்கிறோமே என்று மகிழ்ச்சி அடையவும் முடியும், நன்றாக ஆடுகிறோமே இன்னும் ஆடியிருக்கலாமே என்று ஆதங்கப்படவும் கூடும்.
இப்படி ஒரு சாதனைக்கு சொந்தக்காரராக நியூசிலாந்தின் ஜேம்ஸ் மார்ஷை குறிப்பிடலாம். 2008 ஜூலையில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் 161 ஓட்டங்களை பெற்றார். இதன்போது அவர் பிரன்டன் மக்கலமுடன் சேர்ந்து ஆரம்ப விக்கெட்டுக்கு 274 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். மக்கலம் 166 ஓட்டங்களை பெற்று முதல் வீரராக ஆட்டமிழந்து சென்றார்.
இதுதான் மார்ஷின் கடைசி ஒருநாள் இன்னிங்ஸ் இதற்கு முன்னர் அவர் ஆடிய ஒன்பது இன்னிங்ஸ்களில் எட்டில் 0 மற்றும் 14 ஓட்டங்களுக்கு இடையிலேயே பெற்றதோடு 2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 50 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
தவிர, தனது கடைசி ஒருநாள் போட்டியில் தனது அதிகூடிய ஓட்டமாக அரைச்சதம் பெற்ற ஒரே வீரராக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அத்னன் முப்தி உள்ளார். அவர் 2018 ஓகஸ்டில் கோலாலம்பூரில் நடந்த நேபாளத்திற்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை பெற்றார்.
இவர்கள் தவிர 13 வீரர்கள் தனது கடைசி ஒருநாள் போட்டியிலேயே அதிகூடிய ஓட்டங்களை பெற்றிருக்கிறார்கள். இதில் ஸ்கொட்லாந்தின் ஜோன் பிளைன் (41) மற்றும் இங்கிலாந்தின் டெர்மொட் ரீவ் ஆகியோரும் அடங்குவர்.