உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கும் கருத்து அரசியல் அரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பது தனக்குத் தெரியும் எனக் கூறியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது நாட்டின் தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேன, இதற்கு முன்னர் தாக்குதல் பற்றித் தனக்கு முற்கூட்டியே எதுவும் தெரியாது எனக் கூறிவந்த நிலையில், தற்பொழுது பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தனக்குத் தெரியும் எனக் கூறியுள்ளார்.
முன்னுக்குப்பின் முரணான கருத்தாக இக்கூற்றுகள் இருந்தாலும் இது தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது. அவருடைய இந்தக் கருத்தைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்திருந்தார்.
இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தனர். சுமார் ஐந்து மணிநேரம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024ஆம் ஆண்டு தேர்தலுக்குரிய ஆண்டு என்பது உறுதியாகியுள்ள நிலையில், கடந்த தேர்தலில் முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்திய இந்த உயிர்த்த ஞாயிறு விவகாரம் மீண்டும் ஒருமுறை தேர்தல் களத்திற்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அதாவது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் 39 வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலாக 253 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.
மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளடங்கலாக பல்வேறு இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. சஹரான் என்ற அடிப்படைவாத கொள்கை கொண்ட தீவிரவாதி தலைமையிலான குழுவினர் இதனை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்ததுடன், இத்தாக்குதல் குறித்து முற்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தத் தாக்குதல் சம்பவம் நாட்டின் தேசிய பாதுகாப்புக் குறித்த கேள்வியை எழுப்பியதுடன், இதனை அடிப்படையாகக் கொண்டே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2020 தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி அரசியல் இலாபம் தேடுவதற்கு சிலர் முயற்சித்ததாகவும் அந்தக் காலத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்ததுடன், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்திருந்தார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கிறிஸ்தவ மக்களால் முன்வைக்கப்பட்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டு பிரசாரத்தை முன்னெடுத்திருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர் பதவிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து அதிக பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதில் குற்றவாளிகள் யார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
இவ்வாறான பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டுக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நஷ்டஈடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று இந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பலருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் தொடர்பான தீர்ப்பிலேயே உச்சநீதிமன்றம் இவ்வாறு அறிவித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி தவிரவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நஷ்டஈடுகளை அறவிட்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழாம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
குறித்த மனுக்களை விசாரணை செய்த நீதியரசர்கள் குழாமில் அடங்கியிருந்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தனர். உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷங்ரில்லா ஹோட்டல் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பிரதிவாதிகளில் ஒருவராகப் பெயரிடப்பட்டிருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்குகளை முன்னெடுத்து செல்ல முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்தது. பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக அரசமைப்பின் 35 (1) உறுப்புரை பிரகாரம் வழக்கொன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஏனையவர்கள் நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பானது நாட்டில் நீதியையும் நியாயத்தையும் பாராட்டும் அனைவருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவோ அல்லது எத்தகைய உயர்ந்த பதவியை வகித்தாலும் குற்றம் செய்தால் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென்ற செய்தி இந்த தீர்ப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பேராயர் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றம் முன்னர் வழங்கிய காலக்கெடுவுக்குள் 15 மில்லியன் ரூபாவை மாத்திரம் மைத்திரிபால சிறிசேன செலுத்தியிருந்ததுடன், எஞ்சிய பணத்தைச் செலுத்துவதற்கு காலக்கெடு கோரியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை கருத்துத் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கான கூட்டணிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையிலான இழுபறிகள் ஏற்பட்டிருக்கும் தருணத்தில் இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்திருப்பது தொடர்பில் அரசியல் அவதானிகள் சந்தேகங்களை முன்வைக்கின்றனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில் குறிப்பிட்டதொரு கட்சியின் எழுச்சியைத் தடுப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என்ற பார்வையிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கிறிஸ்தவ சமூகத்தின் மத்தியில் இன்னமும் கவலை காணப்படுவதுடன், பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் வெளிப்படுத்தப்படாமை குறித்தும் அவர்கள் தொடர்ந்தும் ஆதங்கங்களை முன்வைத்தே வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் வெறுமனே அரசியல் துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படாமல் உண்மை கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதியுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில், தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லையென்பது துரதிர்ஷ்டவசமானதே. எனவே, இவ்விடயத்தில் உண்மையை வெளிக்கொண்டுவருவதற்கு பாரபட்சமன்றி செயற்பட வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளாக உள்ளது.