துக்கத்தின் கண்ணீரைத்
துடைத்துத் துடைத்தே
தன்னைத் துக்கவாளியாக்கிய
மனிதர்கள் மீதான ஆத்திரத்தில்
துடிக்கிறது கைக்குட்டையின் மனசு
எவனுக்கு என்ன நேர்ந்தாலும்
அவனது கண்ணீர்
அவனுக்கே ஆற்றாமை
அவனது ஆற்றாமைக் கழிவுகளை
சேகரிக்க நானென்ன
கண்ணீர் வங்கியா என்கிறது
கைக்குட்டை
உங்கள் கண்ணீரை
நீங்கள் துடைக்க நான்.
என் கண்ணீரைத் துடைக்க
உங்கள் விரலில்லையே ஏன்?
கேட்கிறது கைக்குட்டை
நீங்கள் விசும்பும்
கண்ணீரின்போதே அருவியாகும்
நாசி நதிவெள்ளம் துடைத்தெமை
நாசமாக்கும் அநாகரிகம்
பிழையென்று தீர்ப்புச் சொல்ல
எங்கே உங்கள் நாட்டாமை?
நாகரிகம் வளர்த்தவர்கள் என்று
சொல்லிச்சொல்லியே
எங்களில் நாசி துடைத்து
சட்டைப் பைகளில்
மறைத்து வைக்கும் அநாகரிகங்களே..
இதுவா நாகரீகம்?
துண்டுத் துணி என்பதற்காகத்
துணிந்து துவம்சம் செய்யும்
துரியோதனன்களே நாங்கள்
உங்கள் மானம் மறைக்கும்
காவல்தெய்வங்களின்
கைக்குழந்தையல்லாவா
குழந்தையும் தெய்வமும்
ஒன்றெனக்கூறும் நீங்கள்
உங்கள் தெய்வத்திற்கு
கோயிலில் பாலாபிஷேகமும்
எங்களுக்கு கழிவாபிஷேகமும்
தானா
உங்கள் சனாதனம்?
திடீர் காயங்களுக்கு முதலுதவி
திடீர் தூறலுக்கு பாதுகாப்பு கவசம்
காதலின் அடையாளமாய்
நினைவு பரிசு ஆத்திர அவசரத்துக்கு
அவ்வப்போது கையுதவியாய்
இருந்துமென்ன
காரியம் முடிந்தவுடன்
கைகழுவிப் போகும் உங்கள் முன்
களங்கப்பட்டுமல்லவா நிற்கிறோம்
கள்ளனை நம்பினாலும்
குள்ளனை நம்பக்கூடாதென
சொல்லும் நீங்களே
கைக் ‘குட்டை’ எம்மை
நம்பிக்கையோடு வைத்து
முரண்படுகிறீர்கள்.
உங்கள் வியர்வையில் நனைந்து
மூச்சுத்திணறும்
எம்மைக் காற்றோட்டமில்லாக்
கைப்பைகளிலும்
காற்சட்டைப் பைகளிலும் அடைத்துக்
கைதியை விடவும் மோசமாய்
நடத்தி அவமானம் செய்கிறீர்கள்.
ஒட்டுத் துணியென எம்மை
ஒட்டி நடனமாடும்
கவர்ச்சி நடிகைகளின்
மானத்தைத் தாங்கிப்
பிடிக்கப் போராடும் போராளிகள் நாம்
வறுமைக்குப் பிறந்த
வாரிசுகளின் இடைத் தோள்களில்
போர்த்தப்படும்
பொன்னாடை நாங்கள்
பட்டுச் சேலைகளில்
உங்கள் மனைவியர் ஜொலிக்க
வெட்டுத் துணிபோலிருக்கும்
எம்மால்தான்
ஒரு கிரீடம் அணிவிக்கப்படுகிறது
இனியும் எம்மைக்
குட்டையெனக் கேவலப்படுத்தாதீர்கள்
நாங்கள் உங்கள்
குட்டையைக் குழப்பினால்
நாங்கள் கந்தலாவதற்குள்
உங்கள் கதை கந்தலாகுமென்பதை
கவனத்தில் கொள்ளுங்கள்
சின்னச் சின்ன எங்களைச்
நினைவுச்சின்னமாக
உங்கள் சின்ன வீடுகளில்
சிதறவிட்டு விட்டுவருகையில்
உங்கள் அந்தரங்கம் அறிந்து
அவமானம் கொள்கிறோம்
ஒலிவாங்கி முன்
பழைய பொய்களை மூடிப்
புதிய பொய்களை பேச
எத்தனிக்கையில் வழியும் அசடு துடைத்து
ஆசுவாசம் கொடுத்தும்
எம்மைப்பற்றி ஓரிரு
வார்த்தைகள் கூடப்
பேசாக் கசடர் நீங்கள்.
மான அவமானங்கள் மறைக்க உதவிச்
சன்மானம் கேட்கவில்லை
தன்மானத்தையாவது
அவமானப்படுத்தாதீர்கள் மனிதர்களே
உங்கள் சமுதாயம் ஏற்படுத்தும்
வேதனைகளில் நீங்கள் விடும்
கண்ணீர் துடைக்க அன்பாய் ஒரு விரல்
கிடைக்காத போதும்
விரலாய் நாங்களிருப்போம்