எத்தனையோ மனிதர்கள் கண்டேன்
எல்லோரும் புனிதரெனக் கொண்டேன்
அத்தனையும் பொய்யென புரிந்தேன்
அவர் முகமூடி மனிதரென அறிந்தேன்
உடையி லெல்லோரும் உத்தமர்
உண்மையி லவர் வித்தகர்
சாடையி லெல்லோரும் மனிதர்
சத்தியமா யாருமில்லை புனிதர்
உதட்டிலே உட்கார்ந்திருக்கும் சிரிப்பு
உள்நெஞ்சிலே உறைந்திருக்கும் வெறுப்பு
உதிரத்திலே ஒட்டியிருக்கும் சிறப்பு
உள்ளத்தி லிருப்பதெல்லாம் மறுப்பு
நம்முட னிருக்கையில் நட்பு
நாலடி தள்ளினா லது தப்பு
அன்புட னிருப்பதாய் ஒரு நினைப்பு
அதிலிருப்ப தெல்லாம் வெறும் நடிப்பு
-கூட்டுறவி லிருப்பதாய் சொல்வர்
காட்டிக் கொடுத்தே பிறகு கொல்வர்
வீட்டுறவே புனிதமென போதிப்பர்
வேதனைகள் செய்ததை சோதிப்பர்
பெருமைக ளேதுமில்லை யென்பர்
பெரும் பதவிகள் பல வேண்டி நிற்பர்
அரசிய லெல்லாம் அசிங்க மென்பர்
அதற்குப் பின்னால் அசிங்கப்படுவர்
சபைகளில் சார்ந்து பேசுவர்
சந்திகளில் சேர்ந்து ஏசுவர்
கபட மில்லையென உரைப்பர்
கசடை நெஞ்சினுள் புதைப்பர்
முகத்துக்கு முன்னால் புகழ்வர்
முதுகுக்குப் பின்னால் இகழ்வர்
அகத்தினு ளெல்லாம் மறைப்பர்
அப்பாவிகள் போலாவி பிழைப்பர்
வினாடிக்கொரு முகம் காட்டுவர்
வேஷத்தால் வாழ்வுக் குரமூட்டுவர்
கண்ணாடிகள் பல மாட்டுவர்
கலர் கலரா யுலகை மாற்றுவர்
எல்லா மிங்கே வெறும் வேஷம்
இதனா லுலகிலே பெரும் நாசம்
எல்லோருக்கு மிங்கே இரட்டைமுகம்
இதனா லிருளா யாகுது யுகம்