மரபுவழி இலக்கியப் புலமையுடையவர் காப்பியக் கோ ஜின்னா ஷரிபுத்தீன். யாப்பிலக்கணப் பரிச்சயமுடையவர். தமிழின் செழுமை மிக்க பாவடிவங்களான வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்பவற்றில் தேர்ச்சி பெற்றுக் கொண்டு ஆறு தசாப்தங்களாக தொடர்ந்து எழுதிவருபவர். காவியங்கள்(11), சிறுவர் இலக்கிய நூல்கள்(5), கவிதை நூல்கள்(6), மொழிமாற்றக் கவிதை நூல்கள்(2), நாவல்கள்(2), சிறு கதை நூல்கள்(2) என்று பல பனுவல்களை தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தந்து புகழ் பூத்திருப்பவர் காப்பியக்கோ.
அவரின் புதிய முயற்சியாக 214 பக்கங்களில் அண்மையில் வெளிவந்திருக்கின்றது “ஜின்னாவின் 550 குறும்பாக்கள்” Limerik, எட்வயர் லியர் என்பவரை தந்தையாகக் கொண்ட அயர்லாந்து நாட்டுக்குரியதான பாவடிவம். இலங்கைக் கவிஞர் மஹாகவி து. உருத்திர மூர்த்தி ‘குறும்பா’ என்ற பெயரில் அதனைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்.
தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த வரவுப் பாவடிவமான குறும்பாவிலும் அக்கறை செலுத்தி அதிக எண்ணிக்கையிலான குறும்பாக்களை (550) ஒரே நூலில் தந்திருக்கின்றார் காப்பியக்கோ.
குறும்பா குறித்து, காப்பியக்கோ ஜின்னாஹ்,
“குறும்பாவுக் கிரண்டு பொருள் உண்டு
குறுகியதாய் இருப்பதில் ஒன்று
குறும்புகலந் திருப்பதுவும்
குதூகலத்தைத் தருவதுவும்
குறும்பாவில் இருப்பினதே நன்று!”
என்று குறிப்பிடுகின்றார்.
ஆயினும், மஹாகவியினுடைய வரைபுச் சட்டகத்திற்குள்
(காய்,காய், தேமா,
காய் காய் தேமா
காய் காய்
காய் காய்
காய் காய் தேமா) நின்று நல்ல கருத்துள்ள குறும் (குறுமையான) பாக்களைத் தருவதிலேயே அவர் அதிக கவனஞ் செலுத்தியிருப்பதை பாக்களை படிக்கின்ற போது தெரிய வருகின்றது.
இதனையே அவர் தனது முன்னுரையிலும் ” குறும்பா என்பது குறும்புகளை மையப்படுத்தி வாசகனைச் சிந்திக்கச் செய்வதாக இருத்தல் வேண்டும் என்ற நிலைப் பாட்டில் இருந்து விலகி, நல்ல கருத்துக்களைத் தருவதாகவும் இருத்தல் வேண்டுமெனும் எண்ணத்தை வித்தாக்கி இப்பாக்களை எழுதியுள்ளேன்”
என்று குறிப்பிடுகின்றார்.
அவர் கூறுவது போல, நல்ல கருத்துக்கள் மிளிர்கின்ற குறும் பாக்கள் நூலில் பரந்து காணப்படுகின்றன.
“நல்லவற்றை மட்டிலுமே சொல்லு
நாவடக்கிப் பேசிமனம் வெல்லு
கல்லாதார் முன்னிலையில்
கருத்துரைக்க வேண்டாங்காண்
தொல்லைவரும் உடைபடலாம் பல்லு!”
“காட்டுக்கே அரசனென்ற போதும்
கூடிவர லாகும்பல் தீதும்
மேட்டிமையாய் எண்ணாதீர்
மிக்கபலம் கொண்டவரும்
கோட்டைவிட லாம்நீதி ஓதும்!”
என்னும் பாக்களை எடுத்துக் காட்டுகளாகக் குறிப்பிட முடியும்
இவை தவிர, குறும்பா வடிவத்தைப் பயன்படுத்தி “கொரோனா” வையும் பாடியிருக்கின்றார் அவர். 186 குறும் பாக்களில் “கொரோனா – நெடுங்கவிதை” தந்திருக்கின்றார்.
“கண்ணுக்குத் தெரியாத ஜந்து
கண்மூக்கு வாய்வழியே வந்து
எண்ணுமுன்னே பாய்கின்ற
இராமபாணம் போற்சுவாசம்
புண்ணுறவே அழிக்குமதை வெந்து!
சீனாவின் “வூஹானி”ல் பற்றி
தொடர்ந்ததுவே உலகனைத்தும் தொற்றி
ஆனான தேசமெல்லாம்
அச்சத்தால் நடுநடுங்க
தானாகப் பரவியதே முற்றி!”
என்று தொடர்கிறது காவியக் கவிஞனின் கொரோனா – நெடுங்கவிதை.
பாராட்டுக்கள் அவருக்கு.
குறும் பாவில் இலங்கும் காப்பியக்கோ, முழுவதும் குறும்புகள் நிறைந்த – அங்கதச் சுவை ததும்பும் குறும்பா நூலொன்றையும் தரவேண்டும் என்பதே இலக்கிய நெஞ்சங்களின் வேண்டுதலும் எதிர்பார்ப்புமாகும்.
காப்பியக் கோவின் இலக்கியப் பணி தொடர வாழ்த்துகள்.
நூலின் விலை :-ரூபா1000
வெளியீடு:-அன்னை வெளியீட்டகம்,மருதமுனை.
க.பாலமுனை பாறூக்
பாவேந்தல் பாலமுனை பாறூக்