இலங்கையர்களாகிய நாம்,எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுடன், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சக்திகளிடமும் சிக்காமல், அறிவுபூர்வமாக நாட்டின் பாதுகாப்பு, சமாதானம், அபிவிருத்திக்காக அர்ப்பணிக்க வேண்டியது அவசியமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்ததாவது,
“இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மதக் கடமைகளில் ஈடுபடுகின்றனர்.
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்ட ஒரு நாடென்ற வகையில், தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம்.
பல்லின சமூகங்கள் வாழும் நாடென்ற வகையில் இலங்கை தற்போது எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்..
இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் உயிர்த்த ஞாயிறு காலம், ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலை கண்டிருந்தது. அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களிலிருந்து மறையாது. அதேநேரம் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் சட்டம் அமுல்படுத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன், இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும் வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் அர்ப்பணிக்கும்.
அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மகிழ்ச்சியான உயிர்த்த தினமாகட்டுமென்று பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.