- இலங்கை கல்விப் பல்கலைக் கழகம் ஜூன் மாதம் திறப்பு
- 2033 இல் 242,000 ஆசிரியர்களும் கல்வித்துறையில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றப்படுவர்
கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் 2033ஆம் ஆண்டுக்குள் அரசாங்க பாடசாலைகளிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் பயிற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றும் நோக்குடன் இலங்கை கல்விப் பல்கலைக்கழகம் (Sri Lanka University of Education) எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் திறக்கப்படுமென கல்விச் சீர்திருத்த நிபுணத்துவ குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள முதல் கல்வி தொடர்பான பல்கலைக்கழகம் இதுவாகும். இப்பல்லைக்கழகம் திறக்கப்பட்டதன் பின்னர் 2033 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் ஆரம்ப தரம் முதல் உயர்தரம்வரை கற்பிக்கும் அனைத்து 242,000 ஆசிரியர்களும் கல்வித்துறையில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தின் ஆலோனையின்படி இயங்கும் இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமையகம் மஹரகமவில் ஸ்தாபிக்கப்படுமென்றும், தற்போது இயங்கிவரும் 19 கல்வியியற் கல்லூரிகளும் இப்பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகத்தின் பிரதான தலைமையகத்துடன் தொடர்புடையதாக விஞ்ஞான தொழில்நுட்பம், கல்வி, விசேட கல்வி, தகவல் தொடர்பாடல் மற்றும் உடற்கல்வி உள்ளிட்ட 08 பீடங்கள் இயங்கும். மேலும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆய்வுத் துறைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு தேவையான கட்டட வசதிகளுக்காக தற்போதுள்ள கட்டடங்கள் பயன்படுத்தப்படுமெனவும், இதற்காக 2024 ஆம் ஆண்டு 01 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
தற்போது ஆண்டுக்கு 8,000 புதிய ஆசிரியர்கள் அரசாங்க பாடசலைகளுக்கு உள்வாங்கப்படுவதோடு, எதிர்காலத்தில் அந்த ஆசிரியர்கள் அனைவரும் உயர் கல்வி அறிவு பெற்ற பட்டதாரிகளாக பாடசலைக் கல்விக் கட்டமைப்பில் சேர்க்கப்படுவர். இந்த பல்கலைக்கழகம் பாராளுமன்றத்தில் சட்டமூலமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஜூன் மாத இறுதிக்குள் திறக்கப்படுமென்றும் கல்விச் சீர்திருத்த நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.