தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி தனது 48ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் (29) இரவு காலமானார். அவரது விருப்பப்படி அவரது இரண்டு கண்களும் தானம் செய்யப்பட்டன.
சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் எனும் பொலிஸ் பாத்திரத்தில் நடித்ததை தொடர்ந்து பிரபல்யமானார். இதன் பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இளைய தளபதி விஜயின் ‘பைரவா’ படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். ‘அவர் மறைந்த பின்னரும் மற்றவர்களுக்கு அவர் பார்வையை வழங்குகிறார்’ என, டேனியல் பாலாஜி தொடர்பாக அவரது இரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவு திரையுலகினரை கவலைக்கு உள்ளாக்கியுள்ளதுடன், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டேனியல் பாலாஜி, சென்னையில் பிறந்தார். சென்னை தரமணியிலுள்ள திரைப்பட நிறுவனத்தில் திரைப்பட தயாரிப்பு படிப்பை முடித்துள்ளார்.