யாழ். மயிலிட்டி துறைமுகத்துக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (30) கள விஜயம் செய்து, அங்குள்ள நிலைமையை ஆராய்ந்ததுடன், மயிலிட்டி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வையும் வழங்கினார். மயிலிட்டி துறைமுகத்தில் நீண்ட நாட்களாக தரித்து வைக்கப்படும் மீன்பிடிப் படகுகள் மற்றும் இழுவைமடிப் படகுகளால், தமது படகுகளை கரைசேர்ப்பதிலும் எரிபொருள் நிரப்புவதிலும் சிரமத்தை எதிர்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர்.
மயிலிட்டி இறங்குதுறைக்கு தென்னிலங்கையிலிருந்து வரும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள், அத்துறைமுகத்தில் பல நாட்கள் தரித்து நிற்கின்றன. இதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளும் மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமது தொழிலை மேற்கொள்வதில் போதிய இடவசதியின்றி இருப்பதாக அமைச்சரிடம் மயிலிட்டி பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரியப்படுத்தினர்.
இந்நிலையில் மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்ற அமைச்சர், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட தேவைகளுக்காக துறைமுகத்துக்கு வரும் மீன்பிடிக் கலன்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டதும், இறங்குதுறை தவிர்ந்த கடல் பகுதியில் தரித்து நிற்பதற்கும் இந்திய இழுவைமடிப் படகுகளை சற்றுத்தள்ளி நங்கூரமிடுவதற்குமான உரிய பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.