இலங்கை – இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று கடந்த வியாழன் (28) புதுடில்லியில் நடைபெற்றது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ராவின் (Vinay Kwatra) அழைப்பின் பேரில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்டக் குழுவின் பங்கேற்புடன் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிறப்பு வரவேற்பளித்ததுடன், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலைக்கு திரும்பி வருவதால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூலோபாய பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் இணக்கம் காணப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் இயலுமை இரு நாடுகளுக்கும் உள்ளதெனவும் தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கு நன்றி கூறிய சாகல ரத்நாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தார்
இலங்கையின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த, துரித முன்னேற்றம் அடைய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, அதற்காக இந்தியாவுடன் தற்போதுள்ள பொருளாதார ஒத்துழைப்பையும் பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இதன்போது இந்திய – இலங்கை வரலாற்று தொடர்புகளை நினைவுகூர்ந்த சாகல ரத்நாயக்க, இலங்கையின் அயல் நாடான இந்தியாவுடனான வலுவான தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு திட்டங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து இருதரப்பும் கவனம் செலுத்தியதுடன், ஒவ்வொரு காலாண்டிலும் அதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.