உணவின் தரம் குறித்து இக்காலத்தில் அநேகர் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று அக்காலத்தில் எமது முன்னோர் கூறியிருக்கின்றனர். ஆரோக்கியமான உணவுப்பழக்கமானது எமது உடலுக்கு மருந்தைப் போன்று தொழிற்பட்டு, வியாதிகள் வராமல் தடுக்கின்றது என்பதே இதன் பொருளாகும்.
அக்காலத்தில் எமது முன்னோர் மத்தியில் கொடிய வியாதிகள் இருந்ததில்லை. நீரிழிவு, இருதய வியாதிகள், புற்றுநோய், மனஅழுத்தம் போன்ற பல்வேறு வியாதிகளையெல்லாம் அக்காலத்தில் மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆயுள்வரை அவர்கள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்கள். முதுமை காரணமாகவே மரணத்தைத் தழுவினார்கள்.
இக்காலத்தில் மக்கள் மத்தியில் வியாதிகள் அதிகரித்து விட்டன. புதிய புதிய வியாதிகளால் இளவயதினரே பீடிக்கப்படுகின்றார்கள். நீரிழிவு, இருதய வியாதிகள், சிறுநீரக செயலிழப்பு என்றெல்லாம் இளவயதினர் கூட பாதிக்கப்படுகின்றார்கள். இக்காலத்தில் அரச வைத்தியசாலைகள் மாத்திரமன்றி, தனியார் வைத்தியசாலைகளும் நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன.
மக்கள் தமது வீட்டில் இயற்கை உணவுகளை சமைத்து உண்டு வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு வியாதிகள் இருந்ததில்லை. ‘வீட்டு உணவுக் கலாசாரம்’ என்பது ‘ஹோட்டல் உணவுக் கலாசாரம்’ ஆக படிப்படியாக மாறத் தொடங்கியதும், வியாதிகளும் படிப்படியாக உருவெடுத்தன. அதிலும் இளவயதினர் மத்தியில் இக்காலத்தில் தொற்றாநோய்கள் பெருகி வருவதுதான் கவலைக்குரிய விடயமாகும்.
இளவயதினர் மத்தியில் இக்காலத்தில் நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு, இருதய வியாதிகள் போன்ற பல்வேறு வியாதிகள் பெருகுவதற்கு தற்கால நவீன உணவுக் கலாசாரமே காரணமென்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். அதாவது உணவுக்கும் தொற்றாவியாதிகளுக்கும் தொடர்புண்டு என்பதுதான் மருத்துவர்களின் கருத்தாகும்.
ஹோட்டல் உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல என்பது உலகளாவிய ரீதியில் மருத்துவர்களின் கருத்தாகும். அவ்வுணவுகளில் பயன்படுத்தப்படுகின்ற பதார்த்தங்கள் மற்றும் சமையல் முறைகள் ஆகியன மனித ஆரோக்கியத்துக்கு உகந்தவையா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
இக்காலத்தில் மக்கள் சுவையை மாத்திரமே கவனத்தில் கொள்கின்றனர். அத்தகைய சுவைக்காக உணவில் சேர்க்கப்படுகின்ற இரசாயனப் பொருட்களின் ஆபத்து குறித்து மக்கள் சிந்திப்பதில்லை. நச்சு இரசாயனங்களால் உடலில் ஏற்படுகின்ற கொடிய நோய்கள் குறித்தும் மக்கள் பொருட்படுத்துவதில்லை.
இன்றைய நவீன விரைவுணவுகளால் மக்களுக்கு ஏற்படுகின்ற உடல் உபாதைகள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்தும் எச்சரித்துக் கொண்டே வருகின்றனர். ஆனாலும் மக்கள் அதுகுறித்து கவனம் செலுத்துவதாக இல்லை. நமது ஆரோக்கியம் பற்றி மாத்திரமன்றி, எமது குடும்பத்தினரின் ஆரோக்கியம் குறித்தும் நாம் ஒவ்வொருவரும் கவனம் செலுத்துவது இன்றியமையாதது.