சர்வதேச பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான CG Corp Global உடன் கைகோர்த்துள்ள யூனியன் வங்கி, தனது புதிய மூலோபாய நோக்கம் மற்றும் மாற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய வர்த்தக இலச்சினையை அறிமுகம் செய்திருந்தது. இலங்கையின் நம்பிக்கையை வென்ற நிதிச் சேவைகளை வழங்கும் வர்த்தக நாமமாக தனது 29 வருட கால உறுதியான வரலாற்றுப் பயணத்தில் மற்றுமொரு அங்கமாக, வங்கியின் உறுதியான அடையாளத்தை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் அடையாளம், குறியீடு மற்றும் வர்ணங்கள் ஆகியவற்றைக் கொண்டு புதிய இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னர் காணப்பட்ட வர்த்தக இலச்சினையை தழுவியதாக வாடிக்கையாளர்களுக்கு பரீட்சியமான வகையில் இந்த புதிய இலச்சினை அமைந்துள்ளது.
புதிய இலச்சினை வெளியிடும் பிரத்தியேகமான வாடிக்கையாளர் தொடர்பாடல் நிகழ்வில் CG Corp Global தவிசாளர் கலாநிதி. பினோத் சௌத்ரி பங்கேற்று, இந்த புதிய இலச்சினையை வெளியிட்டிருந்தார். இந்நிகழ்வில் யூனியன் வங்கி தவிசாளர் நிர்வாணா சௌத்ரி, பிரதி தவிசாளர் ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ ஆகியோருடன், இதர முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.