உலக கண் பரிசோதனை வாரத்தை முன்னிட்டு விஷன் கெயார் நிறுவனம் “விசன் கொயர் கண் பரிசோதனை மற்றும் அறிவூட்டல் உபகரணத் தொகுதியை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயற்பாடானது பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை அமைப்புகள் மத்தியில் கண் சுகாதார விழிப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
உலக கண் பரிசோதனை வாரத்தின் கருப்பொருளான “உலகளாவிய கண் பராமரிப்புக்கான கண் பரிசோதனைத் துறையின் ஈடுபாட்டை மேம்படுத்தல் என்பதற்கு சமாந்தரமாக இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக சமூகங்களின் அமைவிடம் அல்லது சமூகப் பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் விரிவான கண் பராமரிப்பு சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. அனைவரும் அணுகக்கூடிய, நியாயமான கண் பராமரிப்பு என்ற விஷன் கெயாரின் அர்ப்பணிப்புக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக மேற்படி திட்டம் அமைந்துள்ளது.
மேற்படி நிகழ்வு கொழும்பு 2, விஷன் கொயர் நிறுவனத்தில் நடைபெற்றதுடன் ஆரம்ப நிகழ்வில் 100இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கென வடிவமைக்கப்பட்ட “விஷன் கெயார் அறிவூட்டல் தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த உபகரணத் தொகுதியில் முழுமையான கண் பரிசோதனைக் கருவிகள், அறிவூட்டல் சாதனங்கள் மற்றும் பாடசாலை மட்டத்தில் செயற்திறன் மிக்க கண் சுகாதார நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் உட்பட அத்தியாவசியமான அங்கங்ளைக் கொண்ட விசேட கட்டளைத் தொகுதி வழங்கப்பட்டது.