- மக்களவைத் தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தம்!
- 97 கோடி மக்கள் வாக்களிப்பு; 10.5 இலட்சம் வாக்குச்சாவடிகள்!
இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெறும்.
ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19- ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும்.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதுமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துவிட்டன.
ஏப்ரல் 19 ஆம் திகதி நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.
மீதமுள்ள இடங்களுக்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26 அன்றும், மூன்றாம் கட்டம் மே 7 அன்றும், நான்காம் கட்டம் மே 13, ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு மே 20 அன்றும், ஆறாம் கட்டம் மே 25 அன்றும், இறுதியாக ஏழாம் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1 அன்றும் நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் அட்டவணைப்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆ-ம் திகதி வாக்களிக்கும் மக்கள், தேர்தல் முடிவைத் தெரிந்து கொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஜூன் 4- ஆம் திகதியன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
இவற்றில் குறிப்பாக கர்நாடகா, மணிப்பூர் மாநிலங்களுக்கு இரண்டாம் கட்டத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஐந்தாம் கட்டத்திலும், நாட்டின் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு ஏழாம் கட்டத்திலும் வாக்குப் பதிவுகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
“2024 மக்களவைத் தேர்தலில் 10.5 இலட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். அவற்றில் 55 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள், பொலிசார் உட்பட 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் 97 கோடி மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். இவர்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47.15 கோடி. மேலும் 1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். 21 முதல் 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 19.7 கோடி பேர். 82 இலட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 சதவீத குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதிகள் செய்து தரப்படவுள்ளன.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் 543 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் மக்களவைத் தேர்தல் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால், இந்திய அரசியல் களத்தில் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்கள் ஆரம்பமாகி விட்டன.
தொகுதிகளின் அடிப்படையில், உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 48, மேற்கு வங்கத்தில் 42, பீகாரில் 40 மற்றும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன.
இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், சி.பி.எம், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி என ஆறு தேசியக் கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன.
இந்தத் தேர்தல் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) இந்தியா கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகத்தான் பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் தேர்தலில் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் அத்தகைய ஒற்றைத் தலைமை இல்லை.
தேசியக் கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பி.ஏ. சங்கமாவின் தேசிய மக்கள் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் என்.சி.பி, ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் எச்டி தேவகவுடாவின் ஜனதா தளம் ஆகியவை அடங்குகின்றன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தவிர இடதுசாரிக் கட்சிகள், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, தி.மு.க, ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, உத்தவ் தாக்கரே குழுவின் சிவசேனா, சரத் பவாரின் என்.சி.பி, ஆம் ஆத்மி கட்சி உட்பட ஏராளமான கட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்த தெளிவான அறிவிப்புகளை இதுவரை வெளியிடவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 83 ஆவது பிரிவின்படி, மக்களவைத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின்படி, அதிகபட்ச மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 552 ஆக இருக்கலாம். தற்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 545. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 இடங்களுக்கு பொதுத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இதைத் தவிர்த்து, மக்களவையில் ஆங்கிலோ-_இந்திய சமுதாய மக்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் இரண்டு பேரை பரிந்துரைக்கலாம்.
மொத்த தொகுதிகளில் 131 மக்களவைத் தொகுதிகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 131 இடங்களில் 84 இடங்கள் பட்டியல் சாதியினருக்கும், 47 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் மட்டுமே இந்தத் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட முடியும்.
பெரும்பான்மையை நிரூபிப்பதானால் எந்தவொரு கட்சிக்கும் குறைந்தது 272 இடங்கள் தேவை. பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைந்தாலும் மற்றைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம். அரசியல் கட்சிகளின் கூட்டணி தேர்தலுக்கு முன்பும், முடிவுகளுக்குப் பிறகும்கூட நடக்கலாம்.
மக்களவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, எதிர்க்கட்சி மொத்த இடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களைக் கொண்டிருக்க வேண்டும். 2014 பொதுத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸினால் 44 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. 2019இல் கூட காங்கிரசால் 55 இடங்களைப் பெற முடியவில்லை.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தேசியக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. ஆளும் கட்சியான பா.ஜ.க, 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை மார்ச் 2ஆம் திகதி வெளியிட்டது.
அதில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவர் மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவார்.
இந்திய தேசிய காங்கிரசின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 8ஆம் திகதி வெளியிடப்பட்டது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் வயநாடு தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நிைலவரம் என்ன?
தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் பிறகட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.