நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களை காலத்திற்குப் பொருத்தமானதாக திருத்துவதற்கு அல்லது அவற்றில் மாற்றம் செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
அந்த வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம் உள்ளிட்ட சில சட்டங்கள் சர்ச்சைக்குரியவையாக சில தரப்புகளின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளதை குறிப்பிட வேண்டும்.
இந்தச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதுடன் அவை எந்த விதத்திலும் எதிர்காலத்தில் எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அல்லது அநீதியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடக்கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.
அந்த வகையில் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் சட்டத் திருத்தங்கள் மூலம் அதற்கு மேலும் வாய்ப்புகள் அளிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இக்காலங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களை நோக்கும்போது குறிப்பாக 22 வயதுக்கு குறைந்த வயதுடையவர்களாலேயே அதிகளவு குற்றச் செயல்கள் புரியப்படுவதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் சட்டத்திருத்தங்கள் அவற்றுக்கு வாய்ப்பாக அமைகின்றனவா என்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
பாலியல் வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் எனப் பல பெயர்களில் நாம் அந்த குற்றங்களை குறிப்பிட்டாலும் இளைஞர், -யுவதிகள், அல்லது சிறுவர், – சிறுமிகள் தொடர்பான குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. ஊடகங்கள் மூலம் நாம் காண, கேட்கமுடிவதை விட வெளிவராத இவ்வாறான குற்றச் செயல்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். அவற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் எதிர்பார்த்த அளவு அதன் மூலம் பலன் கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறியே.
இத்தகைய பின்னணியில் தான் பெண்களுக்கான பாலியலில் ஈடுபடும் வயதை 16 லிருந்து 14 ஆக குறைப்பதற்கு ஒரு சட்டத் திருத்தம் மூலம் முன் மொழிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இது நடைமுறைக்கு வருமானால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்ற அச்சம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளதை குறைத்து மதிப்பிட முடியாது.
குற்றச் செயல்களை குறைக்கலாம் என்ற நோக்கில் இத்தகைய சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர முன்மொழிவுகள் வைக்கப்பட்டிருக்கலாம். எனினும் மறுபுறம் அந்த நோக்கம் தவறி இத்தகைய திருத்தங்களே குற்றச் செயல்களை மேலும் அதிகரிக்கவும் அதன் மூலமான விளைவுகளை அதிகரிக்கவும் வழி வகுத்து விடக்கூடாது.
தண்டனைச் சட்டக் கோவையின் 19ஆவது அத்தியாயத்தை திருத்துவதற்கு முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன.
2024 பெப்ரவரி 9 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அதற்கான சட்டமூலத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த ஒன்றியம் அது தொடர்பில் கூடி கலந்துரையாடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் நீதியமைச்சருக்கு கடிதம் மூலம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்தும் இதற்கு எதிரான கருத்துக்களே வெளியிடப்பட்டு வருகின்றன.
1995ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது பாலியல் வல்லுறவாக கருதப்படும்.
அதேவேளை, நீதியமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயதெல்லை 14 வயது வரை குறைக்கப்படவுள்ளது.
சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் தண்டனைச் சட்டக் கோவையின் 364ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் நான் கடுமையான கவலையை தெரிவிக்கின்றேன்.
ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் 364ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம் முன்வைத்துள்ளேன்.
அந்த வகையில் தண்டனைச் சட்டக் கோவையின் 364ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் அதனால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக நீதியை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற பெண்உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதுடன் அதுதொடர்பில் மேலதிகத் தகவல்கள் அல்லது மாற்று முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எமது ஒன்றியம் எந்த நேரத்திலும் தயாராக உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட புதிய திருத்தம் பெண்களுக்கும் குறிப்பாக சிறுமிகளுக்கும் கடுமையான அநீதியை ஏற்படுத்துகிறது. அவசரமாக இதனை மாற்ற நடவடிக்கை வேண்டும்.
2024 பெப்ரவரி 13ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டத்தின் பிரிவு 363 மற்றும் 364, பிரிவுக்கான திருத்தச் சட்டத்தின் மூலம் உடலுறவுக்கான பெண்களின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை குறைத்தது போலவே 363க்கான திருத்தத்தின் மூலம் ஆண், பெண் பலாத்காரத்தை ஒரே பிரிவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கு பெண்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரிவு 363 பெண்களுக்கு மட்டுமேயான தனி அத்தியாயமாக இருக்க வேண்டும். ஆண் தரப்பில் நடக்கும் பலாத்கார செயல்கள் ஏற்கனவே 365 பி 1 இன் கீழ் சொல்லப்பட்டுள்ளன. ஆண் தரப்புக்கு ஏற்படும் பாரபட்சத்தை வேறாக குறிப்பிடுவதில் சிக்கல் இல்லை எனினும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பலாத்காரங்களை ஒரே பிரிவில் இணைப்பதற்கு பெண்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கும் நாடு என்ற வகையில் நாம் பெண்களின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை மற்றும் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்த முன்மொழிவுகள் மற்றும் அரசாங்கத்தினால் கலந்துரையாடலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் முக்கியமான விடயங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் உறுதியான நிலைப்பாட்டுடன் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் நிபுணர்களை அழைத்து கலந்துரையாடி இந்த தவறான தீர்மானங்களை கைவிட வேண்டும்.
சுகாதாரத் திணைக்களத்தின் முறையான அறிவுறுத்தல்களைப் பெற்று இது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுவதால் இந்த பாரதூரமான விடயங்களில் கவனம் செலுத்தி காலம் தாழ்த்தாது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
குற்றவியல் சட்டத்தின் திருத்தங்களின் மூலம் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் பெண் பிள்ளைகளின் வயதை 14 ஆக குறைக்க குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும்.
மேற்படி வயதெல்லை மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக காணப்பட்டால் தண்டனையை தளர்த்த வேண்டும் என குற்றவியல் சட்ட திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்
இந்த சட்டமூலத்தின் மூலம், பாலியல் செயற்பாட்டிற்காக சிறுமிகளின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பது, 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது, அத்துடன் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 ஆ மற்றும் பெண் பலாத்காரத்தை ஒன்றாக வைப்பதற்குப் பதிலாக, பெண் பலாத்காரத்துக்கு எதிரான தனிச்சட்டங்களும் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி சட்டங்களும், தனித் திருத்தங்கள் மூலம் ஆண்களுக்கு இருக்க வேண்டிய சட்டங்களும் மிகவும் முக்கியமான விடயங்களாக காணப்படுகின்றன.
மிகவும் முக்கியமான இந்த கோரிக்கையை நீதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவேன். இது ஒரு சிக்கலான பிரச்சினை என்பதுடன் கலந்துரையாட வேண்டிய விடயம். அதனை முன்னெடுப்பதில் இரண்டு நிலைப்பாடுகள் கிடையாது. இந்த விடயம் இன்னும் சரியாக சூடு பிடிக்கவில்லை என்பதால் இதற்கான ஆதரவு குரல்களை விட எதிர்ப்புகளே அதிகரிக்க முடியும்.
இதன் நியாயங்கள் முறையாக கவனத்தில் கொள்ளப்பட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் காலதாமதம் இன்றி உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது தாழ்மையான கருத்து.