ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மருதானையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஐ.தே.க.வின் மே தினக் கூட்டத்தை சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. ஆயினும், பொதுமக்களின் வசதி கருதி மே தினக் கூட்டத்தை மருதானை டவர் மண்டபத்துக்கு அருகில் நடத்துவதற்கு வசதியாக அமையுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த ஆலோசனைக்கமைய ஐ.தே.க.வின் மே தினக் கூட்டத்தை மருதானையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.க.வின் மே தின ஏற்பாட்டுக்குழு தொடர்பான நடவடிக்கைகளுக்கு வலய ரீதியாக ஆயிரம் அமைப்பாளர்கள் பங்குபற்றவுள்ளதுடன், அமைப்பாளர் ஒவ்வொருவரும் சுமார் 60 பேருடன் மே தினக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.