றமழான் மாதம் வந்தது
றஹ்மத்தாய் அருளும் பொழியுது
அமலைப் பெருக்கி மகிழ்ந்திடவே
ஆற்றலைத் தந்திடு யா அல்லாஹ்
கோடையும் வெப்பமும் கோலோச்சும்
கொந்தளிப்பு காலம் இதுதானோ
ஆடையாய் பொறுமையைப் போர்த்திடவே
ஆற்றலைத் தந்திடு யா அல்லாஹ்
—
பாக்கியங்கள் சூழும் மாதமிது – தீய
பழக்கங்கள் ஒழியும் காலமிது
ஆர்வமாய் அமல்களை ஒளிர வைக்க
ஆற்றலைத் தந்திடு யா அல்லாஹ்
சோர்வுகள் எமைச் சூழ்ந்தாலும்
சோதனைகள் எமைச் சுட்டாலும்
அனைத்தையும் கடந்து அருளைப் பெற
ஆற்றலைத் தந்திடு யா அல்லாஹ்
நோன்பை நோற்று மாண்பைப் பெற
நோய் நொடியில்லா நிலையைப் பெற
ஆவலாய் அமலில் மூழ்கிடவே
ஆற்றலைத் தந்திடு யா அல்லாஹ்
றமழான் முழுக்க நோன்பிருந்து
றஹ்மத் மஃபிரத்தைப் பெற்றிங்கு
ஆரோக்கியமாய் நாளும் வாழ்ந்திடவே
ஆற்றலைத் தந்திடு யா அல்லாஹ்
ஏழைவரியை முறையாக
எள்ளளவும் குறையாமல் முழுதாக – மன
அல்லல் களைந்தே கொடுத்திட
ஆற்றலைத் தந்திடு யா அல்லாஹ்
பர்ழு ஸுன்னத் பேணியே நாளும்
பகலிரவாய் இபாதத்தில் திளைத்தே நாமும்
ஆர்வம் கொண்டே நன்மை புரிந்திட
ஆற்றலைத் தந்திடு யா அல்லாஹ்
இச்சைகளை இறக்கி இபாதத்தில் திளைக்க
சர்ச்சைகளை ஒழித்து சகவாசம் நிலைக்க
அடைவுகளைப் பெற்று ஆனந்தம் கொள்ள
ஆற்றலைத் தந்திடு யா அல்லாஹ்
இறுதிப்பத்தின் ஒற்றையிலே
உறுதியாய் வரும் லைலதுல் கத்ரிலே
அலுப்பைக் களைந்து அமலைத் தொடர்ந்திட
ஆற்றலைத் தந்திடு யா அல்லாஹ்.