87
அவன் கன கச்சிதமாக
அணிந்து வந்திருப்பது
அவனுடைய முகமுமல்ல
நான் அச்சொட்டாக
அணிந்து சென்றிருப்பது
என்னுடைய முகமுமல்ல
என்னை ஏமாற்றுவதற்கு
அவன் வேறொரு முகத்தை
அணிந்து வந்திருப்பது போல்
நானும் அவனை சமாளிக்க
புதியதொரு முகத்தை
உடன் தயாரித்து
அணிந்து சென்றுள்ளேன்
ஆனால் எங்கள் இருவருக்கும்
நிச்சயம் தெரியாமலில்லை
நாங்கள் அணிந்திருப்பது
அசலான முகமில்லையென்று
இருந்தும் சூழ் நிலைக்கேற்றவாறு
வேசங்கள் தரிப்பதையே
நிஜமென்று நம்பி தொலைக்க
நிர்ப்பந்திக்கிறது காலம்
இங்கு யாரிடமும் முகங்களில்லை
விதம் விதமான
முக மூடிகள்தான் இருக்கின்றன