- கல்வி சீர்திருத்தங்களுக்கான நிபுணர் குழு சுட்டிக்காட்டு
- 2025 முதல் 04 வயதில் முன்பள்ளி கல்வி கட்டாயம்
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் மாணவர்களின் பாடசாலை கல்விக் காலம் 12 வருடங்களாக வரையறுக்கப்படுவதுடன், 17 வருடங்களில் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்படுமென, கல்விச் சீர்திருத்தங்களுக்கான நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதுவரை மாணவர்கள் 19 அல்லது 20 வயதில் பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறுகின்றனர். எனவே அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் போது, 21 வயதை தாண்டியவர்களாக இருக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் பிரகாரம் 2025ஆம் ஆண்டு முதல் 04 வயதில் ஒவ்வொரு பிள்ளையையும் முன்பள்ளிக் கல்வியில் சேர்ப்பது கட்டாயமாக்கப்படும். அதற்காக முன்பள்ளிகளின் கட்டமைப்பை மறுசீரமைக்க கல்வி அமைச்சு செயல்பட்டு வருகிறது.
புதிய சீர்திருத்தங்களின் கீழ் 06 முதல் 09 ஆண்டுகள்வரையான இரண்டாம் நிலை கனிஷ்ட தரம் முறை, 06 முதல் 08 வருடம்வரை மாற்றப்படும். அத்துடன் 09 முதல்10 வரையான ஆண்டுகள் கல்விப் பொதுத் தராதரம் மற்றும் 11-12 ஆண்டுகள் உயர்தரம் என பிரிக்கப்படும். அதன்படி 17 வயதில் அவர்கள் தங்கள் பாடசாலைக் கல்வியை முடிக்கவும், அதேநேரத்தில் பல்கலைக்கழகங்களில் சேரவும் வாய்ப்புக் கிடைக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் முன்னோடித் திட்டமாக இந்த ஆண்டு முதல் செயல்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.