ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்ததினத்தையிட்டு பொலன்னறுவை மாவட்டத்தில் கிராமப்புற வீதிகளை புனரமைக்கும் அபிவிருத்தி திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது. பொலன்னறுவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரையில் மத வழிபாடுகள் நடைபெற்று வீதி அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. நாடளாவிய ரீதியில் கவனிப்பாராற்று கிடக்கும் கிராமப்புற வீதிகளை புனரமைக்கும் நோக்கில் இந்த வருடத்துக்கான (2024) வரவு, செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,000 கோடி ரூபா நிதியிலிருந்து பொலன்னறுவையில் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தியவெதும கவடா சந்தியிலிருந்து 34ஆவது யாய வீதி, அரலகங்வில சிலுமினசேய விகாரைக்கு செல்லும் வீதி, வெஹேரகல கெகுலுவல மல்தெனிய வீதி, கட்டுவன்வில சேனபுர வீதி, திவுலங்கடவல மீனவர் கிராம வீதி, ஹிங்குராங்கொடை பாலுவெவ வீதி ஆகிய வீதிகள் புனரமைப்படவுள்ளன.
இந்த வீதி புனரமைப்பு பணிகளை கிராமிய வீதி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் நெடுஞ்சாலைகள் வீதி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் ஆரம்பித்து வைப்பதுடன், இதற்கான நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.