“சுயநலத்துக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்துக்காக நான் என்றும் எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது. அது மட்டுமல்லாது அவ்வாறான நிலையிலிருந்து மக்கள் பணிகளை செய்வதை விரும்புவதும் கிடையாது. மாறாக, அனைத்தும் மக்களுக்கும் வழங்கப்படும் பயன்கள் உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுகின்றேன” என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட நிதி ஒதுக்கீட்டில் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகள் தொடர்பாக ஆராயும் முன்னாயத்தக் கூட்டம் நேற்று யாழ்., கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து அவர் கருத்து தெரிவித்த போது,
“மக்களுக்காக கிடைக்கின்ற நிதியை திட்டங்களாக நடைமுறைப்படுத்துவதை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இக்கூட்டம் நடைபெறுகின்றது.
இதேவேளை, அரச கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விசேட நிதி வழங்க முன்வந்துள்ளார். அந்த வகையில் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை மக்களுக்கானதாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
இது திணிப்போ அல்லது அரசியல் நோக்குடையதோ என்று எண்ண வேண்டாம். நான் என்றும் சுயநலத்துக்காக அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ, திணிப்பதோ கிடையாது. மாறாக, அரசியல் இலாபத்துக்காக செயற்றிட்டங்களை முன்னெடுப்பதையும் விரும்புவதில்லை.
அனைத்தும் மக்களுக்கும் பயன்கள் உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்தே இவற்றை பார்க்க வேண்டும்.
கடந்த 03 வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அது 320 மில்லியன் ரூபாவாக எமது மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் கிடைத்துள்ள இந்த நிதியூடாக மக்களுக்கு உச்சபட்சமான பலனை கிடைக்க செய்வதே எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்” எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர், சமுர்த்தி உதவி ஆணையாளர், பிரதேச செயலர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.