Home » பொருளாதார வளர்ச்சிக்கு வலுவாக பயன்படுத்த வேண்டும்
நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்தி

பொருளாதார வளர்ச்சிக்கு வலுவாக பயன்படுத்த வேண்டும்

நாட்டில் அனைவரது கடமையென்றும் ஜனாதிபதி தெரிவிப்பு

by Damith Pushpika
March 24, 2024 6:50 am 0 comment

இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

உலகின் உயர்வான சுகாதார சேவையை கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்தி அதனை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் DRIVE இலகு கடன் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை ஆரம்ப வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் புதிய கட்டடத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்காக நேற்று முன்தினம் (22) நடைபெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

வைத்திய மற்றும் தாதியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம் தேசிய வர்த்தக முகாமைத்துவ பாடசாலையான (NSBM) மற்றும் பசுமை பல்கலைக்கழகத்துக்கான வைத்தியசாலையொன்றை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் லயிசியம் வைத்தியசாலையும் அதற்கான கோரிக்கையை விடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களையும் வைத்தியத் துறைக்குள் உள்வாங்கி நவீன வைத்திய முறைமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

யாழ். பருத்தித்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தமைக்காக நெதர்லாந்து அரசாங்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.

வைத்தியசாலையில் நிர்மாணிக்க்பட்டுள்ள நினைவுப்படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை மேற்பார்வை செய்த பின்னர் வைத்தியசாலை பணிக்குழுவினருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொப்ச் (Bonnie Horbach) மற்றும் VAMED முகாமைத்துவப் பணிப்பாளர் Paul de Bruin ஆகியோருக்கு ஜனாதிபதியால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இதன்போது நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வைத்தியசாலையின் பணிக்குழாத்தினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division