கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்குமிடையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மலையகத்துக்காக புதிய சுற்றுலா சொகுசு வசதிகள் கொண்ட நான்கு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி இந்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அன்றையதினம் கொழும்பு, கோட்டை மற்றும் பதுளை, பதுளை மற்றும் கொழும்பு, கோட்டைக்குமிடையில் ‘துன்ஹிந்த ஒடிசி’ எனும் இரண்டு புதிய ரயில் சேவைகள் ஈடுபடவுள்ளன.
இதேவேளை, ரயிலில் பயணிக்கும் பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டுகளிக்கும் வகையில் ‘கெலிப்சோ’ ரயில் சேவை கண்டி மற்றும் பதுளை, பதுளை மற்றும் கண்டிவரை ஆரம்பிக்கப்படவுள்ளது.
பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக சிறப்பு பெட்டிகளுடன் கூடிய ‘கெலிப்சோ’ ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதுடன், அந்த ரயிலில் மலைநாட்டின் இயற்கைக் காட்சிகளை மிகவும் தெளிவாகக் கண்டுகளிக்கும் வகையில் இருக்கை வசதிகள் ரயில் ஜன்னல்களை நோக்கியதாக அமைந்துள்ளது.
இதனால் பயணிகள் அனைவரும் இயற்கைக் காட்சிகளை கண்டு களித்துக்கொண்டு தமது பயணத்தை தொடர முடியும்.