ஒரு நாட்டின் எதிர்கால சந்ததியினராக விளங்குகின்ற பிள்ளைச் செல்வங்களுக்கு தேவையான திறன்களை கற்றுக் கொடுப்பதும், அவர்களை பயனுள்ளதும், பொறுப்பு வாய்ந்த பிரஜைகளாக மாற்றக்கூடிய விழுமியங்களை அவர்களுக்கு புகட்டுவதையும் விட உன்னதமான விஷயங்கள் வேறு உள்ளதா என்பது கேள்விக்குறியே, அவ்வாறு சமூக நலனுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒரு பாடசாலையானது நூற்றாண்டை அண்மித்து அப்பணியை சிறப்பாக திறம்பட செய்திருந்தால், அப்பாடசாலையில் நாம் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் அதனை கொண்டாடி மகிழ வேண்டியது இலங்கையர்களாக எம் அனைவரது கடமையாகும். ஆங்கிலேய காலனித்துவத்தின் கீழ் இலங்கைத் தலைநகரில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது சைவ பாடசாலையான கொழும்பு விவேகானந்தா கல்லூரி தனது 98ஆவது அகவையில் இன்று தடம் பதிக்கின்றது.
தமிழ் மக்கள் கல்வி நடவடிக்கைகளில் மேம்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தமிழை வளர்ப்பதில் அருந்தொண்டாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் அடியொற்றி வடகொழும்பில் விவேகானந்தா சபையினரால் 1926ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி நிறுவப்பெற்றதே விவேகானந்தா கல்லூரியாகும். 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த சமயத்தலைவரான சுவாமி விவேகானந்தர் காலடி தடம் விவேகானந்தா சபையில் பதிந்ததை கௌரவப்படுத்தும் நோக்கில் விவேகானந்தா சபையால் இப்பாடசாலைக்கு சுவாமி விவேகானந்தரின் பெயர் சூட்டப்பட்டது.
மனிதனை ஆக்குவதே கல்வியின் நோக்கம் என்ற சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிக்கமைய “ஆகுக, ஆக்குக” என்ற ஒப்பற்ற குறிக்கோள் வார்த்தையை கல்லூரி தன்னில் கொண்டுள்ளது.
இந்து பாடசாலைகளில் வயதில் மூத்த பாடசாலையாக விளங்கும் இக்கல்லூரியின் ஆரம்ப நிகழ்வில் சுவாமி விபுலானந்தரும், சுவாமி சச்சிதானந்தனும் கலந்து சிறப்பித்தனர். இரண்டு ஆசிரியர்களையும் இருபத்தைந்து மாணவர்களையும் கொண்டு கொழும்பு விவேகானந்தா சபையால் இற்றைக்கு 98 வருடங்களுக்கு முன்னர் விவேகானந்தா ஆரம்ப பாடசாலையாகவே ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு 13, புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள பாடசாலையில் ஆண்களும் பெண்களும் இணைந்தே கல்வி பயில்கின்றனர். ஆரம்பப் பாடசாலையான விவேகானந்தா கல்லூரி, 1953இல் க.பொ.த (சா/த) வகுப்பு வரை தரமுயர்த்தப்பட்டது. கல்லூரியை 1962ஆம் ஆண்டு அரசாங்கம் தனது பொறுப்பில் எடுத்தது. அரசாங்கம் கல்லூரியை பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதற்குள், அதாவது 1963 இல் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு க.பொ.த (உ/த)வகுப்பு வரை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. 1996இல் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு இன்று 2,200 மாணவர்களையும், 103 ஆசிரியர்களையும் கொண்டுள்ள கல்லூரியின் தற்போதைய அதிபராக மூக்கப்பிள்ளை மூவேந்தன் பணியாற்றுகின்றார். கல்லூரியின் 98ஆவது ஆண்டு அகவையை முன்னிட்டு அதிபர் கருத்து தெரிவிக்கையில்
“ஆண், பெண் இருபாலாரும் இணைந்து கல்வி கற்பதே எமது எமது பாடசாலையின் தனித்துவ பண்புகளில் ஒன்றாக விளங்குகின்றது. கல்வி, ஒழுக்கம், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் கல்லூரி சிறப்பாக விளங்க வேண்டும். எமது கல்லூரி மாணவர்கள் தேசிய, சர்வதேச மட்டத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அத்துடன் பழைய மாணவர்களையும், பெற்றோர்களையும் இணைத்துக்கொண்டு பாடசாலையை வேகமான அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்வதே எமது நோக்கம்” என குறிப்பிட்டார். கல்லூரியின் 98ஆவது ஆண்டு விழா தொடர்பில் கருத்து தெரிவித்த பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் மீனாட்சி சுந்தரம் “98 ஆண்டுகளாக எமது கல்லூரி நாட்டு மக்களின் கல்வி செயற்பாடுகளுக்கு ஆற்றிய சேவை அளப்பரியது. எமது கல்லூரியின் சிறப்பு அகிலமெங்கும் பரவ வேண்டும். பாடசாலைக்கும், மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை பழைய மாணவர் சங்கம் தொடர்ந்தும் செய்யும்” என கூறினார்.
பேனா சுரேஸ் - பழைய மாணவன்