தனது எண்பத்து ஓராவது (81) வயதில் கடந்த வியாழனன்று இறையடிசேர்ந்த அக்கரைப்பற்று ஐந்தைப் பிறப்பிடமாகக்கொண்ட ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் கே.எம். நஜிமுதீனின் மரணத்தையொட்டி அமெரிக்கா போல்டர் கொலராடோ பல்கலைக்கழக மானுடவியல்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் டென்னிஸ் பி. மெக்கில்வ்ரே தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார். “இலங்கையின் கிழக்குக் கரையோர தமிழ் முஸ்லிம் சமூகங்களின் பாரம்பரிய கலாசாரம்” தொடர்பாக இங்கு கள ஆய்வொன்றினை பேராசிரியர் டென்னிஸ் பி. மெக்கில்வ்ரே(Dennis McGilvray)அக்கரைப்பற்றில் இருசமூகங்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டே மேற்கொண்டார். அவ்வேளை அவருக்கு பல்வேறு வகைகளிலும் ஒத்தசைகளை வழங்கி, பேராசிரியருக்கு உறுதுணையாக இருந்தவர் உதவிக் கல்விப்பணிப்பாளர் மர்ஹூம் நஜிமுதீன்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு கவலையடைந்த பேராசிரியர் டென்னிஸ் பி. மெக்கில்வ்ரே அவரது கள ஆய்வின்போது அவருடன் பயணித்த ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரும் மர்ஹூம் நஜிமுதீனின் நெருங்கிய உறவினருமான நிலாம் என அழைக்கப்படும் எம்.என்.எஸ். ஹமீதுக்கு தனது அனுதாபசெய்தியை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளார்.
அந்த செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “அன்புள்ள நிலாம், நஜிமுதீனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு, அவர்களின் இழப்புக்காக, எனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவியுங்கள், மேலும் இந்தச் செய்தியையும், அதனுடன் இணைந்த புகைப்படங்களையும் , அக்கரைப்பற்றில், என்னைப் போலவே, அவரை அறிந்த, நேசித்த மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். 1970 இல், எனது களப்பணியின் ஆரம்பத்திலிருந்தே, நாங்கள் அவரை “நஜுமு” என்று அழைத்தோம். அவர் எப்போதும் எனது அக்கரைப்பற்று நண்பர்கள் குழுவில், ஒருவராக இருந்தார். நான் வட்டார வழக்குத் தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொள்ளச் சிரமப்பட்டபோது, மற்றவர்களைப் போலவே, அவரும் ஒவ்வொரு நாளும், தானாக முன்வந்து, எனக்கு உதவுவார் [கொச்சை], மேலும் பல ஆண்டுகளாக எனது மானுடவியல் ஆராய்ச்சி திட்டங்களில் பெறுமானமுள்ள ஒரு பங்காளியும் ஆனார். ஒரு பண்பட்ட ஆசிரியராக, நஜுமு எனது கல்வி ஆராய்ச்சிப் பணிகளில் உண்மையான ஆர்வம் காட்டினார், மேலும் உள்ளூர் சமூக வடிவங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தமிழ் சொற்கள் மற்றும் அதன் வெளிப்பாடுகளின் அர்த்தத்தை விளக்குவதற்கும், அவர் எப்போதும் மிக விருப்பமுடையவராக இருந்தார்.
2010-/2015 காலப்பகுதியில் ‘தாய்வழி’ திருமணங்கள், வீடுகள் மற்றும் வயல் நிலங்களில் பெண்களின் உரிமை குறித்த எனது நேர்காணல்களுக்கும் கணக்கெடுப்புகளுக்கும், அவர் செய்த முக்கிய உதவிக்கு, நான் குறிப்பாக நன்றியுள்ளவனாக இருந்தேன். அதன் பிறகு, நிலாமின் உதவியுடன் நான் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய மேலும் பல கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளித்தார். நஜுமு மட்டும் மின்னஞ்சலைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருந்தால், நான் தினமும் அவரைக் கேள்விகளால் துளைத்திருப்பேன்!
அக்கரைப்பற்று பற்றி நான் எழுதிய அனைத்திற்கும், நன்றியில் அவரை மேற்கோள் காட்டியுள்ளேன்; மேலும் அக்கரைப்பற்று பற்றி நான் எழுதிய அனைத்திற்கும் கூட அவரது புகைப்படத்தை எனது கட்டுரை ஒன்றில் வெளியிட்டுள்ளேன். எனது ஆராய்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நஜுமு எப்போதும் நெருங்கிய நண்பராக இருந்தார். இறால் குழம்பும், எருமைப் பால் தயிரும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும்; எனவே அவர் வீட்டில் இந்த உணவுகளை எனக்கு எப்போதும் பரிமாறுவதை உறுதி செய்தார். அவரது விருந்தோம்பலுக்குப் பிரதிபலன் செய்வது எனக்கு கடினமாக இருந்தது. ஆனால் ஒருமுறை ஜோன் பாயெஸ் எழுதிய நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய ஓடியோ கெஸட்டை அவருக்குக் கொடுத்தேன். இந்த YouTube வீடியோவில் நீங்கள் கேட்கக்கூடிய ‘பிரியாவிடை ஏஞ்சலினா’ என்பது அவருக்கு மிகவும் பிடித்தமானது:
நான் அக்கரைப்பற்றுக்கு வந்தவுடன் எப்போதும் என்னை முதலில் வரவேற்பதும் கடைசியாக வழியனுப்புவதும் நஜிமுதீன்தான். அடுத்த முறை என்னை வரவேற்க, அவர் இருக்க மாட்டார் என்பதை நினைந்து வருந்துகிறேன், ஆழ்ந்த அன்புடன் டெனிஸ் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
கலாபூஷணம் எம்.ஏ.பகுர்டீன் -