அரசியலமைப்புக்கு அமைய செப்டெம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா அல்லது அதற்கு முன்னர் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படுமா என்பதே அரசியல் வட்டாரத்தில் தற்போது நிலவுகின்ற பாரியதொரு கேள்வியாக உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்புக்களைத் தொடர்ந்தே இந்தக் கேள்வி வலுவடைந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்த பசில் ராஜபக்ஷ இதுவரையில் இரண்டு தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளார். முதலாவது சந்திப்பின் போது பாராளுமன்றத் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதை பசில் ராஜபக்ஷ உறுதியாக வலியுறுத்தியிருந்ததாகவும், இரண்டாவது சந்திப்பில் எந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை இருதரப்பும் தத்தமது கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் தீர்மானத்துக்கு வருவது என்றும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பதாகவும், எனினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் பசில் ராஜபக்ஷ உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவது குறித்து அமைச்சரவையிலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள பின்னணியில், தற்பொழுது பொதுத்தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும் என்ற அழுத்தம் பசில் தரப்பிலிருந்து அரசுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமாயின், அதில் வெற்றிபெறும் தரப்பு அடுத்து நடைபெறக்கூடிய பொதுத்தேர்தலில் அதிக ஆசனங்களுடன் வெற்றிபெறும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் என்பதால் முதலில் பாராளுமன்றத் தேர்தலுக்கான அழைப்பை பசில் விடுப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜக்ஷ வெற்றிபெற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இவ்வாறான கணிப்பீட்டையே பசில் மீண்டும் மேற்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இதற்கு முன்னரும் இவ்வாறான மூலோபாயமே பயன்படுத்தப்பட்டிருந்தது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்தே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார்.
2000ஆம் ஆண்டில் இரண்டாவது தடவையாக சந்திரிகா வெற்றி பெற்ற பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் தலைமையிலான கூட்டணிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தன.
இவ்வாறான பின்னணியில் பொதுஜன பெரமுன தற்பொழுது பாரிய பின்னடைவுகளைச் சந்தித்திருப்பதால் பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு, தமது ஆதரவு இல்லாத ஒரு நபர் ஜனாதிபதியானால், அதன் பின்னர் நடைபெறக்கூடிய பொதுத்தேர்தலில் தீர்மானிக்கும் சந்தியாகத் தாம் இருக்க முடியாது என்ற கணிப்பீடு அவரினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது.
இவ்வாறான கருத்துகளை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனது சிந்தனைப் போக்கைப் பின்பற்றுமாறு பசில் ராஜபக்ஷ முயற்சிப்பதாக சிலர் கூறுகின்றனர்.
அதேநேரம், பொதுஜன பெரமுனவிற்குள் பிளவுகள் மேலும் மோசமடைவதைத் தடுக்கும் முயற்சி இது என வேறு சிலர் கூறுகின்றனர். பொதுத்தேர்தலுக்கான முற்கூட்டிய பசில் ராஜபக்ஷவின் அழைப்பு இரண்டு செயன்முறைகள் மூலம் சாத்தியமாகலாம்.
முதலாவதாக, எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கும் அரசியலமைப்பு அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. இரண்டாவதாக, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட பொதுஜன பெரமுனவினால் இது பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றி அதன் ஊடாகப் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்.
பசில் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய முதலாவது முறை பின்பற்றப்பட்டாலும், இரண்டாவது முறையின் அடிப்படையில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக உள்ளது.
இதற்குக் காரணம் பொதுஜன பெரமுனவின் ஊடாக முதல் தடவையாகப் பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள் பலர் இருக்கின்றனர். பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முழுமையாக முடிவடையாத நிலையில் கலைக்கப்படுமாயின், அவர்களுக்கான ஓய்வூதியங்கள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.
ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காகப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவுக்கு வழங்கிய உறுதிமொழி, பாராளுமன்றம் முற்கூட்டியே கலைக்கப்படாது என்பதாகும்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு இன்னும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் யோசனையை அவரது கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார மறுத்துள்ளார். பண்டாரவின் கருத்துக்கள் ஜனாதிபதியின் சிந்தனையை பிரதிபலிக்கின்றனவா என்பது சிந்திக்க வேண்டியதொரு விடயமாகும்.
அரசியலமைப்பின்படி இந்த வருடம் செப்டெம்பர் 16ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதாவது முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என ரங்கே பண்டார கூறியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கை முடக்கும் ஒரு நடவடிக்கையாக பொதுஜன பெரமுன பொதுத்தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்பதாக சிலர் கருதுகின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் பிரசாரம் அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதை முதன்மையாக்க கொண்டதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு அந்தக் கட்சி தனது பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது.
சமூக ஊடகங்களிலும் மாறுபட்ட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தற்பொழுது கனடாவுக்குச் சென்று அங்குள்ள இலங்கையர்களைச் சந்தித்து வருகின்றார்.
மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அலை இருப்பதாக சில ஊடகங்களால் வலிந்து காண்பிக்கப்படும் பின்னணியில் பொதுத்தேர்தல் முதலில் நடத்தப்பட்டாலேயே தங்களால் சமமான போட்டியில் ஈடுபட முடியும் என தேசிய மக்கள் சக்திக்கு எதிரானவர்கள் கணித்துள்ளனர். இதன்காரணமாகவே பொதுத்தேர்தலுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இது இவ்விதமிருக்க, பொதுத்தேர்தல் தொடர்பான சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவரும் யோசனை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு 165 பேர் வாக்குகள் மூலமும், எஞ்சியவர்கள் தேசியப் பட்டியலின் ஊடாகவும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே இந்த உத்தேச திருத்தமாகும்.
பொதுத்தேர்தல் நடத்தப்பட முன்னர் இத்திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படியாயின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த முடியுமா என்ற கேள்வியும் இங்கு உள்ளது.
பி.ஹர்ஷன்