Home » திரைப்பட கலைஞர்களுக்கு “சதராவதீபனி” விருது

திரைப்பட கலைஞர்களுக்கு “சதராவதீபனி” விருது

by Damith Pushpika
March 24, 2024 6:43 am 0 comment

தொலைக்காட்சி இன்று சினிமாவை பின்தள்ளிவிட்டுச் சென்றிருந்தாலும், ரசிகர்களின் மனத்தில் வசீகரத்தை ஏற்படுத்தி 20ஆம் நூற்றாண்டின் மிகவும் கவர்ச்சிகரமான கலை ஊடகமாக இருந்தது திரைப்படமும் – சினிமாவும்தான். சினிமா ஒரு கலை என்பதோடு பலம்மிக்க தொழில் துறையுமாகும். இலங்கையின் உத்தியோகபூர்வ திரைப்படத்தின் ஆரம்பம் 1947ஆம் ஆண்டு என்றிருந்தாலும், அது விமர்சனமிக்க கதையாகும்.

எவ்வாறாயினும், இலங்கையில் முதன்முறையாக, ‘திரைப்படத்தில் விஞ்ஞான தொழில்நுட்பம், அழகியல் மற்றும் நுண்கலை ஆகியவற்றின் இணைவு இலங்கை கலைஞர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அவ்வாறான கலைஞர்களை கௌரவிப்பது கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அவ்வாறான கௌரவிப்புக்கள் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்டாலும், நாட்டின் நான்கு சினிமா கலைஞர்களுக்கு கௌரவமளிக்கும் ‘சதராவதீபனி’ எனப்படும் மூத்த சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது குறிப்பாகப் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். அதேபோன்று, இந்த கௌரவிப்பு நிகழ்வின் போது, தொழில்நுட்ப பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பந்து புலமைப்பரிசில் விழாவும் இடம்பெற்றது.

‘சதராவதீபனி’ என அழைக்கப்படும் மூத்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாலினி பொன்சேகா, ஸ்வர்ணா மல்லவாராச்சி, அனோஜா வீரசிங்க மற்றும் ரவீந்திர ரந்தெனிய ஆகிய நான்கு சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு ‘சதராவதீபனி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் எண்ணக்கருவின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னணி சினிமா கலைஞர்களுக்கு ‘சதராவதீபனி’ விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வுமே இவ்வாறு இடம்பெற்றது. சிங்கள சினிமாவில் என்றும் மறக்க முடியாத முன்மாதிரியான சேவையை ஆற்றிய நான்கு கலைஞர்கள் கௌரவ விருது பெற்றனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களும் கலந்து கொண்டிருந்தனர். நிரம்பியிருந்த பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் முன்வரிசை மஞ்சள் நிற அங்கிகளால் நிரம்பியிருந்தது. அது விதால மகாவிஹார சியாமோபாலி மஹா நிகாயே மல்வத்து மகா விகாரையின் கலாநிதி நியாங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்ஷித விஜிதசிறி அனுநாயக்க தேரர் தலைமையில் மகா சங்கரத்தினரின் வருகையினாலாகும். அத்துடன் கலைத்துறைக்கு முன்மாதிரியான சேவையாற்றிய பல கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது அன்றைய தினம் கௌரவிக்கப்படும் தமது சகோதர சகோதரிகளை வாழ்த்துவதற்காகும்.

மேலும், நாடளாவிய ரீதியிலிருந்து பாடசாலை மாணவர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்களுக்கும் அன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. அதற்குக் காரணம் அவர்களுக்கு இரண்டு வருட புலமைப்பரிசில் உதவித்தொகை கிடைத்ததேயாகும்.

க.பொ.த உயர்தர தொழில்நுட்ப பாடப்பிரிவில் கல்வி கற்கும் 250 மாணவர்களுக்கு இதன்போது புலமைப்பரிசில்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் குழுவிற்கு இந்நிகழ்வின் போது ‘பிரக்ஞா பந்து’ புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் தலைமையில் இந்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், கலாநிதி பந்துல குணவர்தன இயக்கிய உன்னதமான திரைப்படங்களுக்கு தமது தனித்துவமான நடிப்பாற்றலை வழங்கிய சிறந்த திரைப்பட கலைஞர்களான மாலினி பொன்சேகா, ஸ்வர்ணா மல்லவாராச்சி, அனோஜா வீரசிங்க மற்றும் ரவீந்திர ரந்தெனிய ஆகியோருக்கு ‘சதராவதீபனி’ விருதுகள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் சிறப்புரையை கலாநிதி பிரனீத் அபேசுந்தர நிகழ்த்தியதுடன், பல உள்ளூர் பாரம்பரிய மற்றும் புதிய படைப்புக் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்வு களைகட்டியிருந்தது.

இந்தியா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள், அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும், எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்வர்ணா மல்லவாராச்சி

60ஆம் ஆண்டுகளில் பாடசாலை மாணவியாக ஸ்வர்ணா மல்லவாராச்சி, ஸ்ரீ குணசிங்கவின் சத்சமுதுரவில் சோமா என்ற பாத்திரத்தில் நடித்தார். சகாப்தத்தின் சமூகப் பின்னணியில் இளம் காதல் தொடர்பைப் பிரதிபலிக்கும் ‘ஹந்தானே கதா’ மற்றும் பாடசாலை மாணவர்கள் குழு தயாரித்த ‘நிம் வலல்லா’ திரைப்படத்தில் அவரது பாத்திரச் சித்தரிப்பு வலுவாக இருந்தது. துங்மன் ஹண்திய, அஹஸ் ஹவ்வ போன்ற திரைப்படங்கள் அவரது திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத அத்தியாயங்களாகும்.

ஹொந்தம வெலாவ, மாத்தர ஆச்சி போன்ற படைப்புக்களில் வேறுபட்ட பரிமாணத்தில் நடித்த அவர், பிறகு 1973இல் வெளிநாடு சென்றார். ஐரோப்பிய அனுபவம், – அறிவு மற்றும் – புத்திசாலித்தனமான புரிதலுடன் நாடு திரும்பிய ஸ்வர்ணா, தர்மசிறி பண்டாரநாயக்கவின் ஹன்ச விலேக் படத்தில் நடித்தார். வசந்த ஒபேசேகரவின் ‘தடயம’ திரைப்படத்தில், ரன்மாலியின் பாத்திரத்தை மிகத் திறமையுடன் சித்தரித்தார். சுத்திலாகே கதாவ திரைப்படத்தில் சுத்தி – கடல்நீரில் ஹீன் மெனிகா, கெடபதக சாயாவில் நந்தா, பபதுக (நோனாஹாமி), ஆனந்த ராத்திரி (ஐரீன்) போன்றன அவரது நடிப்பாற்றலைப் பிரதிபலித்த திரைப்படங்களாகும். பராக்கிரம நீரியெல்லாவின் அயோமாவில் அவர் லலனியாக நடித்தார். சுத்திலாகே கதாவ – அயோமா பந்துல குணவர்தன தயாரித்த திரைப்படமாகும். நடிப்பில் சிறந்து விளங்கியதால் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றார்.

மாலினி பொன்சேகா

நம் நாட்டு சினிமாவின் ராணி என்று போற்றப்படுபவர் மாலினி பொன்சேகா. பாடசாலை மேடையில் ஆங்கில நாடகத்தில் நடித்து, நடிப்புத் துறையில் பிரவேசித்தார். அமல் பிசோ, இவ பவ தெதி லொவ, குத்தில, எரபது மல் பொட்டு பிபிலா, ஹிரு அவரட கியாதோ, அகல் வெஸ்ஸ, சுயுரென் ஆ லிந்த, நுவன பொதிய, பக கபஸ், நிதிகும்பா, லியதம்பரா போன்ற நாடகங்களில் பல வேடங்களில் நடித்துள்ள அவருக்கு திஸ்ஸ லியனசூரிய மற்றும் ஜோ அபேவிக்ரம ஆகியோர் புஞ்சி பபா என்ற திரைப்படத்தில் மாலிவியின் வேடத்தில் நடிக்க அழைக்கப்பட்டதன் மூலம் சினிமா உலகில் நுழைந்தார். அவர் தனது முதல் திரைப்பட நடிப்பிலேயே சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். அன்று முதல் இன்று வரைக்கும் தனது நடிப்பாற்றலால் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விருதுகளை வெல்லும் அதிர்ஷ்டம் கிடைத்தது.

பராக்கிரம நிரியெல்ல இயக்கி பந்துல குணவர்தன தயாரித்த சிரிமெதுர அத்தகைய மற்றொரு பிரபலமான திரைப்படமாகும். நாட்டுப்புற சினிமாவில் தனது அசாதாரண நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய மாலினி, சர்வதேசப் பாராட்டைப் பெற்ற முதல் இலங்கை நடிகை என்ற பெருமையைப் பெற்றார். அது ரஷ்யாவில் மொஸ்கோவில் இடம்பெற்ற திரைப்பட விழாவாகும். எயா தென் லொகு லமயெக் என்பதே அந்த திரைப்படமாகும். கதாபாத்திரம் சுசீலா. சரசவிய, தீபசிகா, ஓ.சி.ஐ.சி., ஜனாதிபதி, ரணதிசர, ஸ்வர்ண சங்கா, சுமதி போன்ற அதிக விருதுகளை வெல்லும் வாய்ப்பு மாலினிக்கு கிடைத்தது. சசர சேதனா என்ற அதிரடி திரைப்படத்தை இயக்கியுள்ள அவர், பல டெலி நாடகங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய ஒரு சிறந்த கலைஞர் ஆவார். தனது பன்முகத் திறமைகளைப் பிரதிபலித்த மாலினி பொன்சேகா, ஜாதி, மத, மொழி பாகுபாடின்றி, நாட்டுப்புற சினிமா மற்றும் கிளாசிக் திரைப்படங்களில் நடித்து இலங்கை மக்களை மகிழ்வித்த முன்னணிக் கலைஞர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

அனோஜா வீரசிங்க

பதுளை மாவட்டத்திலிருந்து கொழும்புக்கு வந்த அனோஜா வீரசிங்க, பிரபலமானதைப் போன்று தொழில்முறை சினிமாவையும் வென்ற தனித்துவமிக்க நடிகையாகும். அவர் முதலில் யசபாலித நாணயக்காரவின் டக் டிக் டுக் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றியதோடு, சாரங்கா, கெலேமல் ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்தார். 11வது சர்வதேச புது தில்லி திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். கெலிமண்டல இவர் தயாரித்த திரைப்படமாகும். அப்படத்தை இயக்கியவர் டி. பி. நிஹால்சிங்கவாகும். ஜாக்சன் அண்டனி இயக்கிய ஜூலியட் பாத்திரம் அவரது மைல்கல் படமாக அமைந்தது.

அதேபோன்று, பராக்கிரம நிரியெல்லவ இயக்கி, பந்துல குணவர்தன தயாரித்த சிரிமெதுர திரைப்படத்தில் அவரது நடிப்பு, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை வென்றதாக அமைந்தது.

அவர் பிரிட்டனில் உள்ள லெம்டா நிறுவனத்தில் இணைந்து கலை, இசை மற்றும் நடிப்பு குரல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று மீண்டும் இலங்கை திரும்பி புதிய தலைமுறையினருக்கு பெரிதும் கைகொடுத்துக் கொண்டிருந்தார். டெலி நாடகங்கள் மற்றும் மேடை நாடகங்களிலும் நடித்த அவர்,குறிப்பாக தேவையுள்ள, உதவிகள் தேவைப்படும் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான ஆலோசனைச் சேவைகளை வழங்கி வழிகாட்டும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

ரவீந்திர ரன்தெனிய

உள்ளூர் சினிமாவில் உருவாகிய ஐந்து சிறந்த நடிகர்களைப் பெயரிட்டால் அவர்களுள் ரவீந்திர ரன்தெனியவை இணைத்துக் கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை என மூத்த திரைப்பட விமர்சகர் காமினி வெரகம தெரிவித்தார். கலாநிதி நுவன் நயனஜித் இலங்கை சினிமா வரலாறு என்ற தனது நூலில் இக்கலைஞர்களின் திறமைகளைப் பற்றிய பெறுமதிமிக்க மதிப்புக்களைப் பதிவு செய்துள்ளார். ரவீந்திர ரன்தெனிய தனது நடிப்புத் திறமையையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்திய ஒரு கலைஞராகும். கொட்டாஞ்சேனை சென் பெனடிக் பாடசாலையில் விஜய குமாரணதுங்க கல்வி கற்ற காலத்திலேயே கல்வி பயின்ற இவர் பாடசாலை மேடையில் ‘சீகிரி காஸ்யப்பன்’ நாடகத்தில் நடித்தார். அதன் பின்னர் 1972ஆம் ஆண்டு லயனல் வென்ட் நடிப்புக் கல்லூரியில் ஜம்ம ஜாகொடவிடம் கற்ற அவர் மேடை நாடக நடிப்பில் பிரவேசித்தார். ஜோ அபேவிக்ரம மற்றும் மணிக் சந்தர சாகர ஆகியோர் இவரின் நடிப்புத் திறமையை மதிப்பீடு செய்து தமது திரைப்படத்தில் நடிக்க அவரைத் தேர்ந்தெடுத்தனர். தரங்கா, தேச நிஷா, துஹுலு மலக், சிறிபால மற்றும் ரன்மெனிகா, வீரபுரன் அப்பு, பொடி மல்லி, சத்வேனி தவச, ஆராதனா, தடயம போன்ற திரைப்படங்கள் அவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. தடயம, மாயா, ஜனேலய, யசோமா போன்ற திரைப்படங்கள் வீர பாத்திரங்களுக்கு நல்ல உதாரணமான திரைப்படங்களாகும். வீரம் மிக்க கதாபாத்திரங்கள் மட்டுமின்றி எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் திறமை அவருக்கு இருந்தது. பராக்கிரம நிரியெல்ல இயக்கிய பந்துல குணவர்தன தயாரித்த சிரிமெதுர திரைப்படத்தில் சம்பத் ஹாமுவின் பாத்திரம் ஒரு தனித்துவமான நடிப்பாகும். அனந்த ராத்திரியா, அக்ஷரய, செய்லம, சந்தகட பஹன ஆகிய திரைப்படங்கள் அவரது நடிப்பு வாழ்க்கையின் மைல்கற்களாகும். தொடர் விருதுகளை வென்ற ரவீந்திர ரன்தெனிய, மக்கள் மத்தியில் பிரபலமடைந்த கலைப் படைப்புகளில் தனது மேதைமையை வெளிப்படுத்திய உன்னத ஆளுமையாகும். தம்ம ஜாகொடவின் வெஸ் முஹூனு, தர்மசிறி விக்கிரமரத்னவின் ஹபுங் கட்டய் பத் தெகய், ஆர்.ஆர். சமரகோனின் இடம, டோனி ரணசிங்கவின் ஜூலியஸ் சீசர் போன்றன ரவீந்திர ரன்தெனிய நடித்த எமது மனங்களை வென்ற மேடை நாடகங்களாகும்.

மேலே குறிப்பிட்ட நான்கு கலைஞர்களும் இலங்கை சினிமாவில் பிரபலமானவர்கள். (Celebrity) அத்துடன அவர்கள் லெஜண்ட்ஸ்களாகும். (Legends) அவ்வாறான கலைஞர்களின் படைப்புத் திறன்களை ஒன்றிணைத்த பந்துல குணவர்தனவின் திரைப்படத் தயாரிப்பு பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும். அவர் நீண்ட காலமாக உழைத்து சம்பாதித்த செல்வத்தை அவராகவே சிறந்த சினிமா படைப்புக்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்தியுள்ளார்.

“நானும் அவரது மாணவன்தான். அனேக மாணவர்களுக்கு அவர் இலவசமாக பொருளியல், வர்த்தகப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார். அவரது இந்த சமூகநலச் செயல் எமக்கு சிறந்த முன்மாதிரியைாகும். 83ஆம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவங்களில் நாசகார சந்தர்ப்பவாதிகளும் அரக்க குணமுடையோரும் இன, மத வேறுபாடுகளைத் தூண்டிவிட்டு, எமது நாட்டிலிருந்து மிகவும் பெறுமதிமிக்க சினிமா திரையரங்குகள், ஸ்டூடியோக்கள், மனித உயிர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்புகளுக்கு தீ வைத்ததை நாம் பார்த்திருக்கிறோம். திரைப்படம் என்பது ஒரு கூட்டுக் கலை முயற்சியாகும். ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் என்பது நமது நாட்டிற்கும் தேசத்திற்கும் சொந்தமான கலாசார ஆவணங்களைக் கொண்ட ஒரு பரம்பரைக் கதையாகும். அவற்றைப் பாதுகாப்பது அரசினது மட்டுமல்லாது பொது மக்களினதும் மற்றும் செல்வந்தர்களினதும் பொறுப்பாகும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள விருது பெறும் நடிகர், நடிகைகளின் நடிப்பை ரசிப்பதன் மூலம், இலங்கை சினிமா கலாசாரத்தில் பயனுள்ள சமூக வளர்ச்சியை உருவாக்க முடியும். அனேக நாடுகளில், திரைப்பட அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் பாதுகாப்பகங்கள் நிறுவப்பட்டு பாதுகாக்கப்படுவது, அவை ஒரு நாட்டின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் என்பதனாலாகும்” என இவ்விடயம் தொடர்பில் தனது முக்சிய உரையை ஆற்றிய கலாநிதி பிரணீத் அபேசுந்தர கூறினார்.

சதராவாதீபனி மற்றும் பந்து புலமைப்பரிசில் வழங்குதல் என்பது மற்றொரு விருது விழா மாத்திரமின்றி, நாட்டு சினிமாவுக்கும் கல்விக்கும் வழங்கப்பட்ட மற்றொரு தனித்துவமான ஆரம்பமாக இதனைச் சுட்டிக்காட்ட முடியும். இரண்டு வருடங்கள் தொழில்நுட்பப் பிரிவில் கற்கும் மாணவர்கள் தமது கல்வியில் உயர்ந்த இடத்திற்குச் செல்வதோடு, எமது நாட்டுச் சினிமாவில் சிறப்புமிகு சேவையாற்றிய அந்தக் கலைஞர்கள் மட்டுமல்ல, மற்றைய கலைஞர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division