நாட்டில் சமீப காலமாக தேர்தல் தொடர்பான பரபரப்பு நிலவி வருகின்றது. தேர்தல் தொடர்பான உறுதியான அறிவிப்பு எதுவும் வெளிவராத போதிலும், அரசியல் கட்சிகள் அனைத்தும் தற்போது உஷார் நிலையில் இயங்கி வருவதைக் காண முடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றப் பொதுத்தேர்தலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடமும், பொதுத்தேர்தல் அடுத்த வருடமும் நடைபெறக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், முதலில் நடைபெறவிருப்பது எந்தத் தேர்தல் என்பது தொடர்பாக உறுதியாக எதிர்வுகூற முடியாதிருக்கின்றது.
ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடைபெறுமென்று அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கின்றன. எனவேதான் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தவாறு பிரதான அரசியல் கட்சிகள் தற்போது மும்முரமாக இயங்கத் தொடங்கியுள்ளன. எனினும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடப் போகின்றவர்களின் பெயர் விபரங்கள் இன்னுமே உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
நிலைமை இவ்வாறிருக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றவர்களின் தகுதி, திறமை, ஆளுமை, ஆற்றல், கல்வித் தராதரம் தொடர்பாக சமீப காலமாக பொதுவெளியில் பல்வேறு தரப்பினராலும் அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுவதைக் காண முடிகின்றது. மூத்த அரசியல்வாதிகள் பலர் வெளிப்படையாகவே பொதுவெளியில் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான அபிப்பிராயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான கருத்துகளே பொதுவெளியில் அதிகளவில் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர்களாகப் போட்டியிடுவோரில் முழுமையான தகுதிகளைக் கொண்டவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே விளங்குவதாக மூத்த அரசியல்வாதிகள் பலரும் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டின் தலைமைத்துவத்தை துணிச்சலுடன் பொறுப்பேற்று, இத்தனை குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெடுத்தவரென்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான பெருநம்பிக்கை ஆகும்.
நாட்டை மீட்டெடுப்பதற்காக அவர் நடைமுறைப்படுத்திய துரித திட்டங்கள், அத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக புத்திஜீவிகள் பலரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
அதுமாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டுள்ள செல்வாக்கு, நெருக்கம் ஆகியவற்றின் விளைவாக இலங்கைக்குக் கிடைத்து வருகின்ற நன்மைகள் குறித்தும் ஆதாரங்களுடன் விபரங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இத்தனை விரைவாக மீண்டெழுந்திருக்கும் எமது நாடு, மீண்டும் அதலபாதாளத்துக்குள் வீழ்ந்து விடலாகாது என்ற முன்னெச்சரிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ஆகவேதான் நாட்டின் தலைமைத்துவத்துக்கு அடுத்த தடவையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மிகப்பொருத்தமானவரென்று கற்றோர் மத்தியில் அபிப்பிராயம் நிலவுகின்றது.
வெறுமனே மேடைப்பேச்சுக்களால் மக்களை வசீகரிக்கின்ற அரசியல் தந்திரம் இக்காலத்தில் பயன் தருவதில்லை. நவீன தகவல் தொடர்பாடலின் முன்னேற்றம் காரணமாக அரசியல்வாதிகளைப் பகுத்தறிகின்ற திறமையையும் மக்கள் பெற்றிருக்கின்றனர். நாட்டின் தலைமைத்துவத்தை ஆற்றல் நிறைந்த ஒருவராலேயே முன்னெடுத்துச் செல்ல முடியுமென்பது இக்காலத்தில் மக்களுக்குப் புரிந்திருக்கின்றது.