காஸா மீதான போர் ஐந்து மாதங்களையும் தாண்டி நீடித்த வண்ணமுள்ளது. அதன் விளைவாக சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது காஸா. அங்கு ஏற்பட்டுள்ள அழிவுகளும் சேதங்களும் கொஞ்சநஞ்சமல்ல. 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஸா மக்களை பலிகொண்டுள்ள இந்த யுத்தத்தினால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
காஸாவிலுள்ள பலஸ்தீனியர்களில் 85 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடங்களை இழந்து கூடாரங்களிலும் அடிப்படை வசதிகளற்ற முகாம்களிலும் தங்கியுள்ளனர். அவர்கள் முகம்கொடுத்துள்ள பட்டினி, பஞ்சம் உள்ளிட்ட மனிதாபிமான நெருக்கடிகள் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன.
அதனால் காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபை உட்பட உலகின் பல நாடுகளும் வலியுறுத்தல்களையும் கோரிக்கைகளையும் விடுத்து வருகின்றன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஆரம்பமான இந்த யுத்தத்தை நிறுத்தும் வகையில் கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் அமெரிக்க ஒத்துழைப்போடு முன்னெடுத்த முயற்சிகளின் பயனாக கடந்த வருடம் (2023) நவம்பர் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையும் கைதிகள் பரிமாற்றத்தின் நிமித்தம் யுத்தநிறுத்தம் நடைமுறையில் இருந்தது. ஆனால் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்பட முன்னரே டிசம்பர் முதலாம் திகதி யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்தது இஸ்ரேல்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மீண்டும் யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை கட்டாரும் எகிப்தும் அமெரிக்க ஒத்துழைப்புடன் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு பிரான்ஸின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த ரமழான் மாத நோன்பு காலம் ஆரம்பமாவதற்கு முன்னர் இருதரப்புக்கும் இடையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தவென கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் ரமழான் காலம் ஆரம்பமான போதிலும் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் இன்னும் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இல்லை.
உலகில் ஏனைய பிராந்திய முஸ்லிம்களைப் போன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் ரமழான் நோன்பு காலத்தை காஸாவிலுள்ள முஸ்லிம்களும் வரவேற்றனர். காஸாவில் மின்சாரம் இல்லை. குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்துக்கும் பற்றாக்குறையும் பெற்றுக்கொள்ள முடியாமையும் நிலவும் சூழலிலும், அந்த மக்கள் ரமழானை மகிழ்ச்சியோடு வரவேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரம் கடும் நெருக்கடிகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்துள்ள போதிலும், காஸா மக்கள் நோன்பு நோற்று இறைவணக்கங்களில் அதிகம் ஈடுபடக் கூடியவர்களாக உள்ளனர். இந்த யுத்தம் காரணமாக பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் ஐவேளைத் தொழுகை, இரவுத் தொழுகைகளை பள்ளிவாசல்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் நிறைவேற்றுகின்றனர். நோன்பு துறப்பதைக் கூட கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் வெளிச்சம் இல்லாத நிலையில் விளக்குகளின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த யுத்தம் காரணமாக காஸாவினுள் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்வது, அவற்றை விநியோகிப்பது என்பன பாதுகாப்பு உத்தரவாதமற்ற நிலையில் உள்ளன. இதனை ஐ.நா. நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக வடக்கு காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை எடுத்துச் சென்ற ட்ரக் வண்டிகள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. அத்தோடு மனிதாபிமான உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்தவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக பலர் கொல்லப்பட்டும் இன்னும் பலர் காயமடைந்துமுள்ளனர்.
மேலும் மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிக்கும் நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கடந்த புதனன்று கூட ரபாவிலுள்ள ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணிகளுக்கான முகவரகத்தினது மனிதாபிமான உதவி மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நிறுவனமே தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், ‘மனிதாபிமான நிவாரணப் பணியாளர்களின் பாதுகாப்பை இஸ்ரேல் உறுதிப்படுத்த வேண்டும்’ என்றுள்ளார்.
இவ்வாறான நிலையில்தான் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஐ.நா. நிறுவனங்கள், ‘காஸா மீதான யுத்தம் தொடருமாயின் அங்கு மனிதாபிமான நிவாரணப் பணிகளை பாதுகாப்பான சூழலில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் அங்கு பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடும். சிறுவர்கள் போஷாக்கின்மைக்கு உள்ளாவர். இவற்றின் விளைவாக மக்கள் செத்து மடியும் அவலம் ஏற்படும்’ என்று குறிப்பிடத் தொடங்கின.
ஆனால் இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இதன் விளைவாக கடந்த ஜனவரியில் முதலாவது குழந்தை போஷாக்கின்மையால் உயிரிழந்தது. ஆனால் இந்த யுத்தம் ஆரம்பமானது முதல் கடந்த செவ்வாய்க்கிழமை வரையும் 25 சிறுவர்கள் போஷாக்கின்மை மற்றும் உடலில் நீரிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று காஸா சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி ஐ.நா. விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பகுதியினர் குழந்தைகளாவர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான அமைப்பின் பிரதித் தலைவர் ரமேஷ் ராஜசிங்கம், வடக்கு காஸாவில் இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆறு குழந்தைகளில் ஒருவர் போஷாக்கின்மைக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இது பெரும் கவலைக்கும் வேதனைக்குமுரிய நிலை என்றுள்ளன சர்வதேச மனிதாபிமான உதவி நிறுவனங்கள்.
காஸாவுக்குள் கொண்டு செல்லப்படுவதற்கு நூற்றுக்கணக்கான ட்ரக் வண்டிகளில் மனிதாபிமான உதவிகள் காத்திருக்கின்றன. ஆனால் அங்கு நிலவும் பாதுகாப்பு உத்தரவாதமில்லாத சூழலால் அந்த ட்ரக் வண்டிகளால் காஸாவுக்குள் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில் காஸா மக்களின் மனிதாபிமான நெருக்கடி குறித்து கவனம் செலுத்தியுள்ள ஜோர்தான், விமானங்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஆகாயமார்க்கமாகப் போடும் வேலைத்திட்டத்தை கடந்த நவம்பர் 06 ஆம் திகதி முதல் ஆரம்பித்தது. அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை வரையும் 35 தடவை விமானங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை காஸாவில் போட்டுள்ள ஜோர்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, பெல்ஜியம், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட 10 நேச நாடுகளுடன் இணைந்தும் 36 தடவைகளுக்கும் மேற்பட்ட படி உணவுப் பொதிகளை காஸாப் பிரதேசங்களில் வீசியுள்ளது.
இவ்வாறு உணவுப் பொருட்களை ஆகாயத்திலிருந்து வீசுவதும் பாதுகாப்பற்றதாகவே உள்ளது. அந்த உணவுப் பொருட்களை எடுக்கச் சென்றவர்கள் மீது அவை விழுந்து சிலர் உயிரிழந்துள்ளதுடன், சிலர் காயமடைந்துமுள்ளனர். கடந்த 08 ஆம் திகதி கூட ஐவர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.
வடக்கு காஸாவில் சுமார் 7 இலட்சம் மக்களும் ரபா உள்ளிட்ட பிரதேசங்களில் 14 இலட்சம் மக்களும் யுத்தத்திற்கு மத்தியில் சிக்குண்டுள்ளனர். இவ்வளவு தொகை மக்களின் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தேவையை விமானங்கள் மூலம் வீசி நிறைவு செய்ய முடியாது.
அதனால் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. தவறும்பட்சத்தில் உணவு, குடிநீரின்றி பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் துர்ப்பாக்கி நிலை காஸாவில் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும். அது நவீன உலகையே வெட்கித் தனிகுனியச் செய்துவிடும். காஸாவில் ஏற்பட்டுள்ள மனித அவலத்தின் பாரதூரத்தை உலகின் பல நாடுகள் கருத்தில் கொண்டுள்ளன.
அமெரிக்கா கூட கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி மூன்று விமானங்கள் மூலம் முதன்முறையாக ரபாவிலும் வடக்கு காஸாவிலும் 66 உணவுக் பொதிகளை போட்டுள்ளது. அத்தோடு நில்லாது காஸாவுக்கு மனிதாபிமான நிவாரணப் பணிகளை முன்னெடுக்கவென தற்காலிக நீர்த்தடுப்பணை ஒன்றை காஸாவை அண்டிய மத்திய தரைக்கடற்பரப்பில் அமைக்கவும் அமெரிக்கா நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஆனால் இந்நீர்தடுப்பணை அமைப்பதற்கு ஆட்சேபனைகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதேவேளை சைப்பிரில் இருந்து 200 தொன் அத்தியாவசியப் பொருட்களை கொண்ட கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை முதற்தடவையாக காஸாவுக்கு புறப்பட்டுள்ளது. காஸா மக்களின் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் கடல் வழிப்பாதையை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் சைப்பிரஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுகின்றன.
மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உடனடி யுத்த நிறுத்தமே சரியான தீர்வாக இருக்கும். அதுவே அனைத்து தரப்பினரதும் வேண்டுகோள் ஆகும்.
மர்லின் மரிக்கார்