இந்த வருடம் செப்டெம்பர் மாதத்துக்கும் ஒக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் அரசியல் களம் பரபரப்பு நிறைந்ததாக மாறி வருகிறது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதியான போதிலும் அதற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமா என்ற ஊகமும் பலரினால் முன்வைக்கப்படுகிறது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கின்றது.
அதேநேரம், பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என அதன் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் பிரேரணையை நிறைவேற்றினாலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்.
முன்கூட்டியே பொதுத்தேர்தலொன்றை நடத்துவதாயின், அதுபற்றித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திடமும், ஜனாதிபதியிடமும் இருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்க முடியும். அதாவது ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்ததும் உரிய நேரத்தில் தேர்தலுக்கான திகதியை ஆணைக்குழுவினால் அறிவிக்க முடியும்.
இதுவரையான நிலைவரப்படி ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கான அறிகுறிகளே முதலில் காணப்படுகின்றன. பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ கடந்த வாரம் இலங்கைக்கு வந்ததும், அவருக்கு அளிக்கப்பட்ட அமோக வரவேற்பும் அரசியலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள பசில் ராஜபக்ஷ, கடந்த வருடம் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு தனது குடும்பத்தினருடன் நேரத்தைக் களிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
கடந்த டிசம்பர் மாதத்தின் பின்னர் தற்பொழுதே அவர் மீண்டும் நாட்டுக்குத் திரும்பியுள்ளார். டிசம்பரில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததுடன், அவரே அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற செய்திகளும் பரவியிருந்தன.
இது பற்றிய அறிவிப்புக்கள் எதுவும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாகவும், பொருத்தமானவர் களமிறக்கப்படுவார் என்றும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் கூறியிருந்தனர்.
இதுபோன்ற அரசியல் பின்னணியில் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அக்கட்சியின் அரசியல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு திரும்பியவுடன் பசில் ராஜபக்ஷ தனது சகோதரனும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருந்தார்.
இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்னவென்பது பகிரங்கப்படுத்தப்படாவிட்டாலும், தேர்தல் பற்றிய முக்கிய விடயங்களே இச்சந்திப்பில் முக்கிய இடம்பிடித்திருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல் 2025ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டிய போதிலும், அதனை முற்கூட்டியே நடத்துவது பற்றியும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகிறது. ராஜபக்ஷக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நடைபெறக் கூடிய தேர்தல்கள் சவால் மிக்கவையாக இருக்கலாம் என்பதே அரசியல் அவதானிகளின் பொதுவான கருத்து.
இதற்குக் காரணம் கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக மக்கள் மத்தியில் எந்தவொரு கட்சியும் தற்போது கொண்டுள்ள செல்வாக்கை ஊகிக்க முடியாதிருக்கின்றது.
எனவே, தற்போதைய களநிலைமையில் எந்தத் தேர்தல் தமக்கு சாதகமானதோ அதனைநோக்கிச் செல்வதற்கான வாய்ப்புக்களே கட்சிகளுக்கு உள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் இவ்வருடம் ஒக்டோபர் வரையும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிப் பதவியில் இருப்பார்.
தேவைப்பட்டால் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றவர்களைக் கொண்டு புதிய அரசாங்கத்தை அமைக்கக்கூடிய நிலையில் அவர் இருப்பார். அப்படியானதொரு சந்தர்ப்பம் அமைந்தால் முன்னர் தம்முடன் இருந்த தற்போதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களையும் இணைத்து தேசிய அரசாங்கமொன்றுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பங்களும் கோடிட்டுக் காட்டப்படுகின்றன.
இந்த அணுகுமுறையை ஆதரிக்கும் பொதுஜன பெரமுனவில் உள்ள ஒரு தரப்பினர், பொதுத்தேர்தலின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அத்தகைய அரசாங்கம் அமைக்கப்படுமானால், அது ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளுக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கக்கூடும் என்று வாதிடுகின்றனர்.
அத்துடன் அவர்கள் அவருக்காகக் களத்தில் இறங்கிப் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கும் தயாராக இருக்கின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அத்தகைய நடவடிக்கைக்கு இணங்குவாரா என்பது இந்தக் கட்டத்தில் தெளிவாக இல்லை.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதன் முதலாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார். அதாவது கடந்த வாரம் குளியாப்பிட்டியில் ஆரம்பமான அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பங்கெடுத்திருந்தார்.
அங்கு உரையாற்றியிருந்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தை விமர்சித்திருந்தார்.
“இன்று ஐக்கிய மக்கள் சக்தி சிறுதரப்பினரிடம் சிக்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் அங்கு இல்லை. சஜித் பிரேமதாச தனது கட்சியின் உறுப்பினர்களை புறக்கணித்து வருகிறார், வெளியாட்களின் பேச்சைக் கேட்கின்றார்.
பொருளாதார நிபுணரான ஹர்ஷ.டி சில்வா கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளை ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் சந்திப்புக்களில் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். எனினும், அதற்குத் தாம் தயாராக இல்லையென சஜித் பிரேமதாச என்னிடம் கூறியிருந்தார்” என்று ஜனாதிபதி குளியாப்பிட்டிய கூட்டத்தில் கூறியிருந்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைவராக இருந்து பின்னர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள நிலையில், புதியவர்களின் செயற்பாடுகளால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் பலர் விரக்தியடைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற இழுபறிகளின் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தலை இலக்காகக் கொண்ட அரசியல் கூட்டங்களை ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தைக் கண்டித்து ஒரு சில எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியிருந்த ஐக்கிய மக்கள் சக்தியினால் தொடர்ச்சியான அரசியல் கூட்டங்களை இதுவரை முன்னெடுக்க முடியவில்லை.
இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் தன்னைப் பிரதானப்படுத்தி பல்வேறு கூட்டங்களில் பங்கெடுத்து வருகின்றார்.
மறுபக்கத்தில், மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கின்றனர் என்ற கணிப்பைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்கனவே ஆரம்பித்த கட்சியின் கூட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என அக்கட்சி ஏற்கனவே அறிவித்து அதன் அடிப்படையில் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றது. இதற்கிடையில் பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்று சுயாதீனமாகச் செயற்பட்டுவரும் குழுவினரின் நிலைமையே இக்கட்டான நிலைக்குச் சென்றுள்ளது. எந்தத் தரப்பினருடனும் இணையவும் முடியாமல், கூட்டணிகளை அமைக்க முடியாமலும் அவர்கள் திண்டாட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கோட்டாபயவின் புத்தகம்:
தேர்தலை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளின் நகர்வுகளுக்கு மத்தியில் கடந்த வாரத்தில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த மற்றுமொரு நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட ‘என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி’ என்ற புத்தகமாகும்.
இந்தப் புத்தகம் அரசியல் வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், அதன் வெளியீடு மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் புத்தகக் கடைகளில் புத்தகம் வரும்வரை எந்த முன்கூட்டிய விளம்பரமும் இருக்கவில்லை.
புத்தகம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தன. ஜனாதிபதியாக தாம் எடுத்த முடிவுகளுக்குக் காரணங்களை விளக்கியிருக்கும் அவர், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் விபரித்துள்ளார்.
சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அவரது புத்தகம், அவர் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த நிகழ்வுகள் பற்றிய அவரது கண்ணோட்டத்தை வழங்குவதற்கும், சில சர்ச்சைக்குரிய விவகாரங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்த ‘பதிவை நேராக அமைப்பதற்கும்’ ஒரு முயற்சியே தவிர வேறில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
எதிர்காலத்தில் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை அத்தரப்புக்களிடமிருந்து முன்வைக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில், அரசியல் காய்நகர்த்தல்கள் மற்றும் கூட்டணி அமைப்புக்கள் தொடர்பிலான பரபரப்பான களம் அடுத்துவரும் வாரங்களில் மேலும் சூடுபிடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.