சத்திய மார்க்கத்தின் சத்தான மாதம்
அசத்தியம் துடைக்க அவதரித்த மாதம்
சொர்க்கவாசல்கள் திறந்திடும் சந்தன மாதம்
சோபிதங்கள் நிறைந்த சிறப்பான மாதம்
பாவங்கள் துடைத்துப் பரிசுத்தம்
வார்த்திட
பர்ழு சுன்னத்துப் பன்மடங்கு நன்மையாக
சொர்க்க வாடையில் வாசலும் நிறைந்திட
சோதனைகள் தாங்கி இறையச்சம் உயர்ந்திட
ரமழான் எங்களை ரம்மியமாய் அடைந்ததே
இரணத்தின் தாத்பரியம் உணர்த்திடப் பிறந்ததே
ஏழைகளின் வலியைப் பசியால் சொன்னதே
இம்மையில் இறைவனின் அருளாக வந்ததே
தீயபழக்கம் அழித்துத் தீன்மார்க்கம் செழிக்க
தேடும் பிழைபொறுப்புத் துஆக்கள் அங்கீகரிக்க
தேவைகள் யாவும் தொழுது கேட்க
தனித்துவமான போதனைகளில் உள்ளம் திளைக்க
ஒன்பதாம் மாதம் ஒழுக்கத்தின் தாயகம்
ஓதலின் கண்ணியம் விளம்பிடும் மாதம்
ஆயிரம் மாதங்களை நிகர்த்திடும் இரவுடன்
அருகிலே எங்களைத் தீண்டிட வந்ததே
சாத்தான்களை விலங்கிட்டு
சாத்வீக மணம்பரப்பி
சமத்துவத்தின் மகத்துவம் சகத்தினில் விதைத்து
இச்சையடக்கி இன்சொல் வளர்த்து
இரவுதோறும் நின்றிறையைத் துதித்து
ஆன்மிகமும் அருளும் அள்ளித் தந்திட
அல்லாஹ்வை நெருங்கி நரகவிடுதலை கேட்டிட
இனிய ரமழான் இப்பூவுலகம் நுழைந்ததே
இம்மையில் எண்ணிலா நன்மைகள் எழுந்ததே