அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசமானது விவசாயச் செய்கைக்குப் பெயர்போன பிரதேசங்களில் ஒன்றாகும். நிந்தவூர் பிரதேசத்தின் விவசாயிகளும், பொதுமக்களும் கடந்த 15 வருட காலமாக யானைகளின் அட்டகாசம் மற்றும் அத்துமீறிய உட்பிரவேசம் காரணமாக, பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்திருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையில், இந்தப் பிரதேச விவசாயிகளுக்கான ஒரு நிரந்தர தீர்வினைப் பெறுவதற்கான ஒரு முயற்சி கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அது உரிய முறையில் வெற்றிகரமாக அமையவில்லை. அதே நேரம் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அரசாங்கத்தினுடைய நிதிப்பங்களிப்பென்பது சாத்தியமற்ற நிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த யானைத் தாக்குலில் இருந்து விடுபட, நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் 14 விவசாய அமைப்புக்களை உள்ளடக்கியதான செங்கப்படை விவசாய அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், யானை பாதுகாப்பு மையம் மற்றும் யானை வேலி நிர்மாண வேலைத்திட்டமானது கடந்த ஜூலை மாதம் நிந்தவூர் மாலிண்ட திடலில், செங்கப்படை விவசாய அமைப்புக்களின் சம்மேளன தலைவர் சட்டத்தரணி ஏ.எம். நசீல் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம. நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். லத்தீப், நிந்தவூர் பிரதேச மின் அத்தியட்சகர் எம். நஜிமுடீன், நீர்ப்பாசன பொறியியலாளர் முஹமட் அஸ்கி, ஓய்வு பெற்ற நீர்ப்பாசன பொறியியலாளர் எம். அஸீஸ் உள்ளிட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.
இந்த இடமானது நிந்தவூர் பிரதேசத்தின் தெற்கே அமைந்துள்ள களியோடை ஆற்றின் – பள்ளக்காடு பிரதேசத்தின் ஊடாக யானைகள் உட்பிரவேசிக்கும் இடம் என்பதனால், முதலில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் இந்த இடமானது தெரிவு செய்யப்பட்டிருந்து.
இந்நிலையிலேயே பல பொருளாதார சேதங்களும் உயிர்ச்சேதங்களும் இடம்பெற்று வருகின்ற நிலையில், இப்பிரதேச விவசாயிகளும், பொதுமக்களும் அரசியல்வாதிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இருந்த போதும் கடந்த 15 வருடங்களாக இது தீராத பிரச்சினையாக தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்நிலையிலேயே விவசாயிகள் தாமாக முன்வந்து யானைகளின் தாக்குதல்களிலிருந்து விடுபடுவதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் பற்றி கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டிருந்தும், அதற்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்தபோதும், இவ்வாறான ஒரு திட்டத்தினை விவசாய அமைப்புக்களின் சம்மேளனம் நிந்தவூர் பிரதேச செயலகத்திடம் முன்வைத்தபோது, பிரதேச செயலாளர் ஏ.எம். லத்தீப்பினால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சகல ஏற்பாடுகளும் பிரதேச செயலாளரினால் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த திட்டத்தின் முதற்கட்ட வேலைகளில் யானை பாதுகாப்பு மைய நிலையத்திற்கான நிரந்தர கட்டடம் ஒன்றினை உருவாக்கி, அதன் மூலம் யானைகளின் வருகையினைக் கட்டுப்படுத்துவதற்காக, நிந்தவூர் பிரதேச செயலகமானது 40 பேர்ச் காணியினை வழங்கியுள்ளது. இதில் 20 பேர்ச் காணியில் முதற்கட்ட வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதுடன், இவை 03 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் சுமார் 6,500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில், தலா ஒவ்வொரு ஏக்கருக்கும் ஆயிரம் ரூபாய் வீதம், காணிச்சொந்தக்காரர்கள் தங்களது நிதிப்பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள். இதில் சுமார் 09 கிலோமீற்றர் தூரத்தில் யானை தடுப்பு வேலியினை அமைக்கும் நடவடிக்கைக்கான முழுமையான வழிகாட்டல்களையும், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பிரதேச செயலகம் வழங்கியிருந்த நிலையில், முதற்கட்டமாக 3.5 கிலோமீற்றர் தூரத்திற்கே யானை தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இது இத்திட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் றாபி)