- A,B,C தர சித்தி என்பது 2026 முதல் இரத்து
- GCE O/L பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் GCE A/L க்கு வாய்ப்பு
கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்துக்காக பாடவிதானங்கள் 07ஆக மட்டுப்படுத்தப்பட்டு, பரீட்சையில் A,B,C தரத்தில் சித்தியடைவது எனும் தரப்படுத்தல் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, எந்த ஒரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படாதவாறு G.P.A எனும் Grade Point Average செயற்பாட்டுக் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே 2026ஆம் ஆண்டு முதல் விஞ்ஞானம், கணிதம், தாய்மொழி, ஆங்கிலம், சமயம் மற்றும் வாழ்க்கைநெறிக் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கு மட்டுமே கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்துக்கு பரீட்சைத் திணைக்களம் பரீட்சைகளை நடத்தும்.
இவை தவிர விரும்பும் பட்சத்தில் மேலும் மூன்று பாடங்களுக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு வாய்ப்புள்ளது. இதற்கான பரீட்சைகள் 350 பாடசாலை மதிப்பீடு மற்றும் கல்வி வலயங்கள் மூலம் நடத்தப்படும்.
இந்தத் திட்டம் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இந்தப் புதிய மாற்றங்கள் உள்வாங்கப்படும்.
அவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் A,B,C எனும் அளவுகோலில் மதிப்பீட்டு தகுதிச் சான்றிதழ் வழங்காதென்பதுடன், GPA எனும் Grade Point Average க்கு உட்பட்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கான பாடங்களை தெரிவு செய்ய மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாகும்.
இந்தப் புதிய முறையின் கீழ் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் எந்த மாணவரும் தோல்வியடைய மாட்டார்களென்பதுடன், ஒவ்வொரு மாணவரும் குறிப்பிட்ட மதிப்பு எண்ணுடன் சித்தியடைய பெறுவார்கள்.
இதற்கமைய 2027ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம் மூலம் உயர்தரத்தில் மாணவர்களுக்கு தற்போதுள்ள பாடங்களுக்கு மேலதிகமாக கலை, விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட 06 பாடப்பிரிவுகளுடன் மேலதிகமாக கல்வி எனும் புதிய பாடம் சேர்க்கப்படும்.
குறைந்த செயற்றிறன் அளவு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்விக் கற்கைகள் சேர்க்கப்படவுள்ளன.
இதன் மூலம் ஒரு வருடத்தில் கல்வி பொதுத் தராதரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் உயர்தரத்தில் கற்கும் வாய்ப்பு கிடைக்குமென, கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்தார்.