எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சட்டங்களை இயற்றுவதில் கட்சி பேதமின்றி செயல்படுவது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாக அமைய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றாடல் தொடர்பான பாராளுமன்ற அமைப்பின் வகிபாகம் மற்றும் நோக்கங்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் சனத்தொகையில் 50 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் நாட்டின் தாழ்நிலங்களிலும் கரையோரப் பகுதிகளிலும் வசிப்பதால், வெப்பநிலை அதிகரிப்பு ஒரு பெரிய பிரச்சினையாகும்.
பாரிஸ் ஒப்பந்தத்தின் இணக்கப்பாட்டுக்கமைவாக 2030ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 70 சதவீதமாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதேபோன்று 2050ஆம் ஆண்டுக்குள் (Carbon Dioxide Emissions) கரிமவாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ப்பட வேண்டுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா கூறுகையில், உலகில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகளினால் எமது நாடு பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ள போதிலும், உலகளாவிய சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்வதன் மூலம் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடியுமென்றார்.
மக்களின் வாழ்வியலையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் காலநிலை மாற்றத்தை நிர்வகிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிறுவனங்களுடன் சரியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 10 தொடக்கம் 15 வருட காலப்பகுதியில் விண்வெளிப் படலத்துக்கு (Space Membrane) ஏற்பட்ட பாதிப்பை தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர், அதிக வெப்பம் காரணமாகவும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களை நாடு சந்திக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறினார்.