எல்லையின்றி வளங்களை அள்ளித்தரும் கடல் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வைப்பதாகத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயலால் வடக்கின் கடல்வளம் அழிக்கப்படுவதுடன், இங்குள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களுக்கும் சேதம் ஏற்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக, பல வருடங்களாக இப்பிரச்சினைகளை எமது கடற்றொழில்துறை எதிர்நோக்குவதுடன், வடமாகாண கடல் பிராந்தியத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடலில் சுற்றாடல், உயிரினங்கள், மீன் சினை முட்டைகள், பவளப்பாறைகளும் அழிக்கப்படுகின்றன.
பாரிய இந்திய இழுவைப்படகுகளின் தொடர்ச்சியான வருகையால், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாத் பைண்டர் அமைப்பு மற்றும் மனிதநேய கலந்துரையாடலுக்கான மத்திய நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட காலநிலை மாற்றம், மனிதநேய முகாமைத்துவம் மற்றும் பொதுக்கொள்கை தொடர்பான வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்த போது, இலங்கை கடற்றொழிலாளர்கள் குறிப்பாக, சிறியளவிலான கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும அவலநிலை இம்மாநாட்டில் அவதானம் செலுத்தப்படுவதில் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் எனது நன்றியை தெரிவிக்கிறேன். எமது நாட்டுக்கு புராதன பெருமை மிகுந்த கடலுடன் தொடர்புடைய வரலாறு உள்ளது. ஏராளமான மீன் வளங்களையும் அது எமது கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வருகிறது. இருந்தாலும் கடலானது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய சவால்களையும் அது ஏற்படுத்தி வருகிறது. மீன்கள் அருகி வருவது தொடர்பாக நாம் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அதிகளவில் மீன் பிடித்தல், சமுத்திரம் வெப்பமடைதல், கடல் மாசடைதல், கடல் சுற்றாடல் பாதிப்படைதல், அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குப்படுத்தப்படாத சட்டவிரோத கடற்றொழில் முறைகள் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஐ.நா. உணவு மற்றும் விவசாய கடற்றொழில் அமைப்பின் (FAO) அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இது எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மட்டும் பாதிக்கவில்லை. கடலின் ஒட்டுமொத்த சுற்றாடலின் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்பிரச்சினையை வெற்றி கொள்வதற்காக நான், நீர் வேளாண்மை மற்றும் கடல் வேளாண்மை மூலம் மீன் உற்பத்தியை அதிகரிப்தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். சுற்றாடல் நலன் சார்ந்த நடவடிக்கைகளால் கடலுணவு உற்பத்திகள் அதிகரித்துள்ளன. அதற்கு புறம்பாக கடந்த பல வருடங்களாக பாரிய பிரச்சினைகளை எமது கடற்றொழில் சந்தித்து வருகிறது.
எமது நாடு இந்துசமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்தின் கேந்திர நிலையத்தில் அமைந்திருப்பதால் கடல் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகிறோம். சட்டவிரோத ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடற்கொள்ளை என்பன நாம் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல்களாகும். துரதிஷ்டவசமாக ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை இவ்விடயத்தில் நாம் செயற்படுவதற்கு தடையாக உள்ளது. காலநிலை மாற்றம் தற்போது மற்றொரு அச்சுறுத்தலாகும். கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால் எமது கரையோர கடற்றொழில் சமூகம் பாதிக்கப்படும் அதேவேளை, கடல் வெப்பமடைதல் கடலின் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நிலைபேறான கடற்றொழிலை உறுதிப்படுத்துவதற்கும் கடலரிப்பை தடுப்பதற்கும் செயல்திறன்மிக்க அணுகுமுறை தேவை. இலங்கை பொருளதாரத்தில் முதுகெலும்பாக கடற்றொழிலை மாற்றுவதற்காக நீலப்பொருளாதார திட்டத்தை அமுல்படுத்துவதற்கான கொள்கைகளை நாம் வகுத்துள்ளதுடன், அதற்காக நிபுணர் குழுவையும் நியமித்துள்ளோம். இதேவேளை சட்டவிரோத மற்றும் அறிக்கையிடப்படாத கடற்றொழில் முறைகளை தடுப்பதற்காக எனது அமைச்சு புதிய கடற்றொழில் வரைபை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இச்சவால்கள் வெற்றி கொள்ள முடியாதவை அல்ல. கூட்டு நடவடிக்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் வளமான எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேற முடியும். இதன் பொருட்டு நாம் கடல் உட்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம், பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்தல், நிலைபேறான கடற்றொழில் நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் நவீன தொழில்நுட்ப முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய மூலோபாயங்களை இனங்கண்டுள்ளோம். தூரநோக்கு மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய செயற்பாடுகளால் இச்சவால்களை எம்மால் வெற்றிகொள்ள முடியும். எமது கடலை பாதுகாப்பதன் மூலமும் நிலைபேறான கடல் வளத்தை உறுதிப்படுத்துவதன் வாயிலாகவும் புதுமைகளை உள்வாங்குவதன் ஊடாகவும் இச்சவால்களை எமது வளமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளாக இதனை நாம் மாற்றிக் கொள்ளலாம். இச்சவால்கள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு இங்கு கூடியிருப்போரிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.