இரண்டாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சென்னையில் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, ஐந்து நாட்கள் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் (15) வெளியிட்டுள்ள அறிக்கையில், இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது.
தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, பண்பாடு, உயர்ந்த சிந்தனை, இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும். தமிழை, உயர்தனி செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞராவார். வளம் பெற்ற நம்மொழிக்கு செம்மொழித் தகுதியை பெற்றுத்தந்து, தமிழர்களின் நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ளார்.