Home » கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

-தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து-

by Damith Pushpika
March 17, 2024 6:57 am 0 comment

உலக தமிழ் சங்கத்தின் 31ஆம் ஆண்டு விழாவில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் சேவைக்காக வாழ்நாள் சாதனை விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஜானகி கல்லூரி அரங்கில் இடம்பெற்ற விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், விஞ்ஞானி வீர முத்துவேல், நல்லி குப்பசாமி செட்டியார் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு கடந்த காலங்களில் சமூக சேவைக்காக உலக சாதனைப் புத்தகத்தில் உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

உலகத்தில் பல தமிழ் அரசியல் தலைமைகள் இருக்கின்ற போதிலும் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் அரசியல் தலைமைக்கு சமூக சேவைக்காக உலக தமிழ் சங்கத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இளம் வயதில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த செந்தில் தொண்டமான், மாகாண அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பதுளை மற்றும் மொனராகலை பகுதிகளில் தோட்டபுற தமிழ் மக்களுக்கு 64 சதவீதம் மாத்திரம் வழங்கப்பட்ட மின்சாரத்தை குறுகிய காலத்தில் முழுமையாக 100 சதவீதம் வழங்கி சாதனை படைத்தார். ஊவா மாகாணத்தில் 40 வருடகாலமாக பதிவு செய்யப்படாமல் இருந்த 250 விளையாட்டுக் கழகங்களை இளைஞர்களின் நலன் கருதி ஒரே மாதத்தில் பதிவு செய்து இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தமை, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மலையகத்தை சேர்ந்த 15000 முதியோருக்கு முதியோர் கொடுப்பனவு வழங்கியமை, இலங்கை முழுவதும் பொருளாதார பின்னடைவில் உள்ள 40 இலட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசி,100 மெட்ரிக் டொன் மருந்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மாருக்கு 500 மெட்ரிக் டொன் பால் மா என்பவற்றை பெற்றுக்கொடுத்ததுடன் அதனை தானே முன்னின்று நாடுமுழுவதும் முழுமையாக விநியோகம் செய்து சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்தியமைக்காக இந்திய அரசு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வந்த சூழ்நிலையில் செந்தில் தொண்டமான் பாண்டிச்சேரி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை அரசாங்கத்திற்கு மருந்துகளை பெற்றுக் கொடுத்தார். 10000க்கும் மேற்பட்ட முதியோருக்கு மூக்கு கண்ணாடி, சக்கர நாற்காலி, செவிபுலனற்றோருக்கான கருவி போன்ற உபகரணங்கள் வழங்கி வைத்தார். மேலும் மலையக பெண்களுக்கு முதல் முறையாக பயிற்சியளித்து ஓட்டுநர் அடையாள அட்டைகள் செந்தில் தொண்டமானால் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கத்தால் இந்திய மீனவர்கள் 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பொழுது செந்தில் தொண்டமானின் முயற்சியால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர், கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களையும் 100க்கும் மேற்பட்ட படகுகளையும் செந்தில் தொண்டமான் தனது முயற்சியால் விடுவித்தார், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மலையக தமிழர் ஒருவர் ஊவா மாகாண பதில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டமையை எண்ணி மலையக மக்கள் பெருமிதம் கொண்ட அதே​ேவளை மலையக தமிழர் ஒருவர் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஆளுநராக நியமிக்கப்பட்டமையை எண்ணியும் மலையக மக்கள் பெருமிதம் கொண்டனர்.

2006ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பால் தடை விதிக்கப்பட்ட போது, போராட்டங்களை முன்னெடுத்து, சட்ட ரீதியாக இப்பிரச்சினையை அணுகி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்து தமிழ் கலாசரத்தை நிலைநாட்ட செந்தில் தொண்டமான் முக்கிய பங்கு வகித்தார். ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தியாவில் முதல் முறையாக செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்திய அரசால் தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டன. தமிழ் கலாசாரத்தை கடல் கடந்து நிலைநாட்டுவதற்காக பிரான்சில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பாராட்டுக்களை பெற்றார்.

40 வருடகாலமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக உரிமைகள் அற்ற சமூகமாக, முடங்கி கிடந்த நிலையில், அவர்களுக்கு செந்தில் தொண்டமான் முதல் முறையாக கடவுச் சீட்டுகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு, அம்மக்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்தார்.

மேலும் முதல் கட்டமாக 200 பேருக்கு கடவுச் சீட்டுகளை வழங்கி இவ்வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையில் வடகிழக்கில் காணி உரிமைக்காக யுத்தம் இடம்பெற்று, பல்லாயிரக் கணக்கான மக்கள் காணி இன்றி அவதியுறும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் செந்தில் தொண்டமானின் கடும் முயற்சியால் 06 மாதத்திற்குள் 2000க்கும் மேற்பட்டோருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கையில் வரலாறு காணாத வகையில் 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்களின் நடனம், 500 கோலங்களுடன் தமிழ் கலாசாரத்தை உலகறியச் செய்யும் வகையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக செந்தில் தொண்டமானால் பொங்கல் விழா திருகோணமலையில் நடத்தப்பட்டதோடு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தை தாண்டி சர்வதேசத்தில் முதல் முறையாக நடத்தப்பட்டு சாதனை படைத்தது.

மேலும், இலங்கை இந்திய தூதுவர்களுக்கு இணையாக இந்தியாவுக்கும் இலங்கைக்குமான பாலமாக செந்தில் தொண்டமான் செயற்பட்டு வருவதோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல இராஜதந்திர முடிவுகளில் செந்தில் தொண்டமானின் பங்களிப்பு காணப்படுகிறது.

இவ்வாறு சமூகத்திற்காக எண்ணிலடங்காத பல சேவைகளை முன்னெடுத்து வரும் தமிழ் தலைவர்களில் வலிமை மிக்க தலைவராக செந்தில் தொண்டமான் அடையாளம் காணப்பட்டு, வி.ஜே.பி சந்தோசத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்தியாவை உலகளவில் வியந்து பார்க்க வைத்த ஒரு தமிழராய் அறிவியலாளராய் சந்திராயன்- 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி தடம் பதித்த அறிவியலாளர் வீரமுத்து வேல் மற்றும் தனது இளம் வயது முதல் தற்போது வரை ஜவுளித்துறையில் சாதனைபடைத்து, தேசிய விருதுகளை வென்று,தொழிலதிபராக திகழ்ந்து, 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழும் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division