இரு புனிதஸ்தலங்களின் சேவகர் மன்னர் சல்மானின் உம்ராவுக்கான விருந்தினர்களில் 10 இலங்கையர்களையும் உள்ளடக்கிய நான்காவதும் கடைசியுமான குழு, உண்மையில் அதிர்ஷ்டசாலிகளே.
2024ஆம் ஆண்டுக்கான மன்னர் சல்மானின் விருந்தினர்களாக உம்ரா யாத்திரையினை மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களில் நான்காவதும் கடைசியுமான குழு (16-.03-.2024) சனிக்கிழமையுடன் தனது பயணத்தினை முடித்துக்கொண்டது.
புனித ரமழான் மாதத்தின் சில தினங்களையும் புனித மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் கழிப்பதற்கான பெரும் பேறு இந்நான்காம் குழுவுக்கு மாத்திரமே கிட்டியது என்பது உண்மையில் ஒரு அதிர்ஷ்டமேயாகும்.
உலகளாவிய ரீதியில் 1000 யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அரிய வாய்ப்பில் நான்காவது குழுவினராக 16 நாடுகளைச் சேர்ந்த 250 யாத்திரிகர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களில் இலங்கையிலிருந்து 10 சமூக முன்னோடிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இக்குழுவில் அங்கம் வகித்த 16 நாடுகளுமாவன: ரஷ்யா, பங்களாதேஷ், தஜிகிஸ்தான், அவுஸ்திரேலியா, இலங்கை, மாலைதீவு, இந்தியா, கசகஸ்தான், பாகிஸ்தான், அசர்பைஜான், நேபாளம், துருக்கி, கொசோவோ, கிர்கீஸ்தான், துருக்மானிஸ்தான், நியூசீலாந்து என்பனவாகும்.
இவர்களின் பயணத்தில் இவர்கள் மதீனா மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் குபா, புனித அல்-குர்ஆனுக்கான மன்னர் பஹத் (ரஹ்) அச்சகம், உட்பட மதீனாவின் பிரசித்திபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களைத் தரிசிக்கும் வாய்ப்பினைப் பெற்றனர். அதேபோன்று புனித மஸ்ஜிதுன் நபவியின் பிரதம இமாம்களில் ஒருவரான கலாநிதி அஷ் ஷேய்க்அஹ்மத் பின் அலீ அல்-ஹுதைபி யுடனான ஒரு பிரத்தியேக சந்திப்பிலும் கலந்துகொண்டனர். பின்னர் புனித மக்கமா நகரை அடைந்த இவர்கள் புனித உம்ராக் கடமையினை முடித்துவிட்டு, புனித ரமழானில் சில நாட்களை மஸ்ஜிதுல் ஹராமில் கழிக்கும் வாய்ப்பினையும் பெற்றனர். இலங்கையிலிருந்து இந்த வாய்ப்பினைப் பெற்று உம்ரா யாத்திரையினை நிறைவு செய்த 10 அதிர்ஷ்ட சாலிகளில் பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர், அமைச்சுக்களின் செயலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரபுக் கல்லூரி அதிபர்கள், புத்தி ஜீவிகள், சமூகத் தொண்டர்கள் என பல தரப்பினரும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கையிலிருந்து யாத்திரையினை மேற்கொண்ட பலரும் அவர்களுக்கு சவூதி அரசினால் வழங்கப்பட்ட மட்டில்லா வரவேற்பினையும் ஏற்பாடுகளையும் மிகவும் நன்றியுடன் நினைவுகூர்ந்து மன்னர் சல்மானுக்கும் சவூதி அரசின் பொறுபாளர்களுக்கும் நன்றி கூறி சவூதி அரேபிய ஊடகங்களுக்கு தமது கருத்துரைகளை வழங்கியது இங்கே குறிப்பிடத்தக்க விடயமாகும்.
“இரு புனிதஸ்தலங்களின் சேவகர் மன்னர் சல்மானின் விருந்தாளிகள்” என்ற திட்டத்தின் கீழ் வருடாவருடம் குறிப்பிட்ட எண்ணிக்கையான யாத்திரிகர்கள் உலகளாவிய மட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டு இலவசமாக புனித ஹஜ் மற்றும் உம்ராக் கடமைகளை செய்யும் வாய்ப்பினை சவூதி அரேபிய அரசு தொய்வின்றி மேற்கொண்டு வருகின்றது. உலகளாவிய இஸ்லாமிய உம்மத்திற்கு சவூதி அரேபியா செய்யும் சேவைகளில் ஒரு அங்கமாகவே இதுவும் கணிக்கப்படுகின்றது. இப்பெரும் பேற்றினை வல்ல அல்லாஹ்வின் உதவியுடன் வழங்குவதற்கான உத்தரவினைப் பிறப்பிக்கும் மன்னர் சல்மானுக்கும், முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கும் மற்றும் அனைத்து சவூதி அரேபிய அரசின் பொறுப்பாளர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.
கலாநிதி MRM அம்ஜத் ராஸிக்.