2023 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டிலும், நான்காம் காலாண்டிலும், SLT குழுமத்தின் நிதிப் பெறுபேறுகள் எதிர்மறையான பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. நாட்டில் நிலவிய பெரும் பொருளாதார சவால்கள் நிறைந்த சூழலின் காரணமாக இந்தப் பெறுபேறுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக நிறுவனம் அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில், SLT குழுமம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வருமானத்தில் 7.5% வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. 2022 ஆம் ஆண்டில் 28 பில்லியன் ரூபாயாக காணப்பட்ட இந்தப் பெறுமதி கடந்த ஆண்டில் ரூ. 26 பில்லியனாக வீழ்ச்சியடைந்திருந்தது. குழுமத்தின் இலாபத்திலும் வீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன், செலவு செம்மையாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தொழிற்பாட்டு செலவுகளில் (Opex) 5.9% வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், நிறுவனத்தின் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதே போன்று, குழுமத்தின் தொழிற்பாட்டு இலாபத்திலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. காலாண்டில் வரிக்கு முன்னைய இலாபம் மற்றும் வரிக்கு பிந்திய இலாபம் ஆகியனவும் வீழ்ச்சியடைந்திருந்தன.
SLT ஐ பொறுத்தமட்டில், 2022ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் நாலாம் காலாண்டில் 3.6% Opex வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இதில் ஊழியர்களுக்கான செலவீனங்களை குறைப்பதில் முறையாக நிர்வாக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை முக்கிய பங்காற்றியிருந்தது.