இஸ்லிம்களின் ரமழான் நோன்பு காலம் ஆரம்பிக்க முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்தநிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, எகிப்து, கட்டார், இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய தரப்புக்கள் இப்பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றன.
இதன் நிமித்தம் பிரான்ஸ், கட்டார் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் திகதி முதல் எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஆனாலும் முதல் மூன்று நாட்களிலும் இப்பேச்சுவார்த்தைகளில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அதேநேரம் காஸாவில் இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீன சிறுவர்கள் ரமழான் நோன்புக்கு முன்னர் யுத்தநிறுத்தத்தை நடைமுறைக்கு கொண்டுமாறு கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடாத்தியுள்ளனர்.
இதேவேளை இஸ்ரேல் காஸாவின் மீது தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. வடக்கு காஸாவில் மனிதாபிமான நிவாரணப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்த மக்கள் மீது கடந்த 29 ஆம் திகதி இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டதோடு, 700 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று காஸா சுகாதாரத் தரப்பினர் குறிப்பிட்டிருந்தனர்.
மனிதாபிமான உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு உலகளாவிய ரீதியில் கடும் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில், அவர்கள் சனநெரிசலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஆனால் இதேபோன்ற தாக்குதல்கள் அதன் பின்னரும் இடம்பெற்றுள்ளன.
இவை இவ்வாறிருக்க, காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்வதில் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதால் வடக்கு காஸா உட்பட காஸாவின் அனைத்துப் பிரதேசங்களிலும் வறுமையும், பட்டினியும் தலைதூக்கியுள்ளன. போஷாக்கின்மை காஸாவில் அதிகரித்துள்ளது. இற்றைவரையும் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மை, உடலில் நீரிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காஸாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு ஜோர்தான், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் மாத்திரமல்லாமல் அமெரிக்காவும் கூட விமானங்கள் மூலம் மனிதாபிமானப் பொருட்களை காஸாவில் கொட்டி வருகின்றது.
உலகின் கவனத்தை ஈர்த்துள்ள காஸாவின் மனிதாபிமான பேரவலம் உடனடி யுத்தநிறுத்தத்தை உலகம் வலியுறுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் நிமித்தம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் கடும் இராஜதந்திர அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
இருந்த போதிலும் காஸாவின் 14 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் ரபா மீது தரைவழி யுத்தத்தை முன்னெடுப்பதில் இஸ்ரேல் கவனத்தை குவித்துள்ளது.
பிராந்திய நாடுகளினதோ, உலக நாடுகளினதோ கோரிக்கைகளையும் வேண்டுகோள்களையும் பொருட்படுத்தாது இஸ்ரேல் செயற்படுவதால் உலகின் சில நாடுகள் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளன.
குறிப்பாக முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட துருக்கியே (1949 இல்) இஸ்ரேலை அங்கீகரித்த முதல் முஸ்லிம் நாடாகும். ஆனாலும் துருக்கி-இஸ்ரேல் இராஜதந்திர உறவில் அண்மைக் காலமாக நெருக்கடிகள் ஏற்பட்டு வந்த சூழலில் காஸா மீதான யுத்தம் துருக்கி- இஸ்ரேல் உறவு வீழ்ச்சியடைய வழிவகுத்துள்ளது. அத்தோடு துருக்கி அதிபர் தையிப் எர்துகான் ‘இஸ்ரேல் ஒரு பங்கரவாத நாடு’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவை இவ்வாறிருக்க, காஸா மீதான யுத்தம் காரணமாக 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள ரபா பிரதேசத்தின் மீது தரைவழி யுத்தத்தை முன்னெடுக்க இஸ்ரேல் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு எகிப்து ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
அத்தோடு எகிப்தை காஸாவில் இருந்து பிரிக்கும் ஒரு குறுகிய நடைபாதையான பிலடெல்பி நுழைவாயிலின் கட்டுப்பாட்டை தாம் விரும்புவதாக கடந்த டிசம்பரில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார். இதனால் கோபமடைந்த எகிப்து, ’14 கிலோமீட்டர் (சுமார் 8.7 மைல்) நீளமும் 100 மீட்டர் அகலம் (328 அடி அகலம்) கொண்ட நடைபாதையின் ஆக்கிரமிப்பு முயற்சி எகிப்தின் இறைமையை மீறும் செயலாக அமையும்’ என்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் ஏற்பாட்டில் 1979 இல் எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் செய்து வைக்கப்பட்ட கேம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கை வீழ்ச்சியடைந்து விடக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையானது எகிப்து-இஸ்ரேல் சமாதான உடன்படிக்கைக்கான நிபந்தனைகளையும், 1967 இல் ஆறு நாள் போரின் போது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து இஸ்ரேலை திரும்பப் பெற அழைப்பு விடுத்த ஐ.நா தீர்மானம் 242 ஐப் பயன்படுத்தி இஸ்ரேல்–பலஸ்தீனிய அமைதிக்கான ஒரு கட்டமைப்பையும் உருவாக்க வழிவகுத்தது. இதன் ஊடாக இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்து இராஜதந்திர உறவை ஆரம்பித்த முதல் நாடானது எகிப்து.
அதனைத் தொடர்ந்து 1994 இல் ஜோர்தான் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தன. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிங்கடன் தலைமையில் ஜோர்தானுக்கும் இஸ்ரேலுக்குமிடையில் சமாதான உடன்படிக்கை செய்து வைக்கப்பட்டதோடு தூதரக உறவும் ஆரம்பிக்கப்பட்டன.
மேலும் இஸ்ரேலுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி வைக்கும் நோக்கில் ஐக்கிய அமெரிக்கா ஆபிரகாம் உடன்படிக்கையை 2020 இல் அறிமுகப்படுத்தியது. அன்றைய ஜனாதிபதி ட்னால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய இந்த சமாதான உடன்படிக்கையில் 2020 செப்டம்பர் 15 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸும், பஹ்ரெய்னும் கையெழுத்திடப்பட்டன. அதனைத் தொடர்ந்து சூடானும் மொரோக்கோவும் இஸ்ரேலுடனான இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார். என்றாலும் 2020 நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆபிரகாம் உடன்படிக்கை ட்ரம்ப் காலத்தைப் போன்று வேகமாக முன்னெடுக்கப்படாவில்லை. ஆனாலும் சவுதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளைத் தொடக்கி வைப்பதற்காக அமெரிக்க தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியா, பலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத வரை இஸ்ரேலுடன் இயல்பு நிலையை ஏற்படுத்தத் தயாரில்லை எனத் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. இந்தச் சூழலில் காஸா மீதான யுத்தம் சவுதியின் இந்நிலைப்பாட்டுக்கு வலு சேர்த்துள்ளது. 1967 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பலஸ்தீன இராச்சியத்தை ஸ்தாபிக்குமாறும் அதன் ஊடாக பலஸ்தீனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது சவுதி அரேபியா.
மேலும் காஸா மீதான யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு அரபு நாடுகள் உட்பட உலக நாடுகள் மாத்திரமல்லாமல் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைப் கொண்டுள்ள பிராந்திய நாடுகளும் கேட்டும் கூட அதற்கும் இஸ்ரேல் செவிசாய்ப்பதாக இல்லை.
அதனால் ஜோர்தான், பஹ்ரெய்ன் போன்ற நாடுகள் தமது தூதுவர்களைத் திருப்பி அழைத்துக் கொண்டுள்ளன. இஸ்ரேலுக்கான எமிரேட்ஸ் விமான சேவையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடைநிறுத்தியுள்ளது.
ரபாவானது எகிப்துக்கு அருகிலுள்ள ஒரு பிரதேசம். அங்கு முட்கம்பிகளைக் கொண்டு எகிப்து வேலி அமைத்துள்ளது. அதனால் சனநெரிசல் மிக்க ரபா மீது தரைவழி யுத்தத்தை இஸ்ரேல் முன்னெடுத்தால் அதிக உயிரிழப்புக்களும் காயங்களும் ஏற்படும். மக்கள் எகிப்துக்குள் தஞ்சமடையக்கூடிய அபாயமுள்ளது. அதனால் அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மற்ற உறுப்பினர்கள் திட்டமிட்ட இஸ்ரேலிய தாக்குதலை எதிர்த்துள்ளனர்.
மேலும் காஸாவில் இருந்து பலஸ்தீன மக்கள் வெளியேறினால் அவர்கள் மீளக்குடியேற இஸ்ரேல் அனுமதிக்காது என்ற அச்சமும் பல நாடுகளிடம் காணப்படுகிறது. அதனால் ரபா மீது யுத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று எகிப்து இஸ்ரேலிடம் கூறியுள்ளது. அதற்கும் இஸ்ரேல் செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. அதனால் ரபா எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திவரும் எகிப்து, 40 இற்கும் மேற்பட்ட கவச வாகனங்களை அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.
இந்த யுத்தம் எகிப்துடனான இஸ்ரேலின் இராஜதந்திர உறவையும் சீர்குலைக்கக்கூடிய அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சூழலில் எகிப்துக்கு விஜயம் செய்த துருக்கிய ஜனாதிபதி, காஸா மக்கள் வெளியேற்றப்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்று எகிப்த்திய அதிபருடன் இருந்தபடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹமாஸ் ஆயுதங்களைக் கடத்துவதற்கு எகிப்தின் நிலத்தைப் பயன்படுத்துவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ள கருத்துக்களை கடுமையாக சாடியுள்ள எகிப்து, காஸா மீதான யுத்தம் காரணமான அழிவு மற்றும் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராகவும் எகிப்திய ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். அதனால் ரபா மீது யுத்தத்தை விரிவுபடுத்தினால் 1979 இல் கைச்சாத்திடப்பட்ட கேம்ப் டேவிட் உடன்படிக்கை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகெவ், ‘உத்தேச ரஃபா தாக்குதல் தொடர்பான எகிப்தின் கவலைகளை தனது நாடு அறிந்திருப்பதாகவும் கெய்ரோ மற்றும் டெல் அவிவ் பேச்சுவார்த்தை மூலம் இவ்விஷயத்தை தீர்க்க முடியும்’ என்றுள்ளார்.
ஆக, காஸா மீதான யுத்தம் இஸ்ரேலின் பிராந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திர உறவுகளில் பாதிப்புக்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஆரோக்கியமான நிலைமை அல்ல. அதனால் ரமழானுக்கு முன்னர் இரு தரப்பினருக்கும் இடையில் மனிதாபிமான யுத்தநிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் சர்வதேச நிபுணர்களின் கருத்தாகும்.
மர்லின் மரிக்கார்