இலங்கையின் அரசியலமைப்பின்படி, 2024 செப்டெம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அரசியலமைப்பின் காலவரம்பை சந்திக்க விரும்புவதாக ஜனாதிபதியே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா என்ற கருத்தாடல்கள் வலுவடைந்துள்ளன. அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பருக்குள் நடத்தப்பட வேண்டியிருந்தாலும், பொதுத்தேர்தல் என்னவோ அடுத்த வருடம் நவம்பர் வரை நடத்தப்படாமல் இருக்கலாம்.
எனினும், ஜனாதிபதி நினைத்தால் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலொன்றுக்குச் செல்வதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில் அனைத்துத் தேர்தல்களும் அதாவது ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல், மாகாணசபைகளுக்கான தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியுள்ளன.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் காலங்கள் முடிவடைந்து பலவருடங்கள் ஆகியுள்ளபோதும், அவற்றுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கின்றன. நாடு பொருளாதார ரீதியில் சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் சகல தேர்தல்களையும் ஒன்றன்பின் ஒன்றாக நடத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.
இலங்கை போன்ற பொருளாதார ரீதியில் நெருக்கடியான நாட்டில் தேர்தல் என்பது வெறுமனே ஒரு ஜனநாயக நடவடிக்கை அல்ல, மாறாக அதன் பொருளாதாரப் பாதையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான தருணமாகும். அரசியல் மாற்றங்களைச் சுற்றியுள்ள உள்ளார்ந்த நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அச்சங்கள் நிலவும் பொருளாதார பலவீனத்துடன் இணைந்து, விரிவான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு நுட்பமான தொடர்புகளை உருவாக்குகின்றன.
எனவே தேர்தல்கள் குறித்த முடிவுகளை எடுக்கும்போது வெறுமனே ஆட்சி, அதிகாரம், நிர்வாகம் என்பவற்றை மாத்திரம் கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுக்க முடியாது. எதுவாக இருந்தாலும், அரசியல் கட்சிகளோ தம்மைத் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தத் தொடங்கியுள்ளன. கூட்டணி அமைப்பது குறித்த ஆரம்பகட்டப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளன.
அரசியல் அரங்கத்தில் பொதுஜன பெரமுனவின் நிறுவுனரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் இலங்கை விஜயம் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. முன்னாள் நிதி அமைச்சராக இருக்கும் அவர் அமெரிக்கப் பிரஜாவுரிமை கொண்டவர் என்பதால் அடிக்கடி தனது நாட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்புவார்.
தேர்தல் குறித்த ஆரவாரங்கள் தொடங்கியிருப்பதால் கடந்த 5ஆம் திகதி இலங்கை திரும்பிய பசிலின் வருகை பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. பசில் நாடு திரும்பியதும் முக்கியமான தீர்மானங்களை பொதுஜன பெரமுன எடுக்கும் என்ற வகையிலான செய்திகள் வெளியாகியிருந்தன. விமான நிலையத்தை வந்தடைந்த பசில் ராஜபக்ஷவை அவருடைய வி.ஐ.பி ஆதரவாளர்கள் பலர் நேரில் சென்று வரவேற்றனர்.
அனைத்துத் தேர்தல்களும் தமக்கு சவால் மிக்கவை என்றும், சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அதற்கு பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியிருந்தார். கடந்த காலங்களில் சில விடயங்கள் தமக்குப் பிழைத்து விட்டதாகவும், பிழைகளைச் சரிசெய்து தேர்தலுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளைத் தான் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
பொதுஜன பெரமுன கட்சி ஆளும் அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கின்றபோதும் கடந்த பொதுத் தேர்தலில் குறித்த கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் பலர் அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீன உறுப்பினர்களாக அமர்ந்துள்ளனர். அவ்வாறு அமர்ந்துள்ளவர்களில் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவானவர்களாக இருப்பதுடன், சிலர் சுயாதீனமானவர்களாக இருக்கின்றனர்.
மறுபக்கத்தில் ஆளும் கட்சிக்குள் இருக்கும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலர் ஜனாதிபதிக்கு ஆதரவானவர்களாக இருப்பதுடன், சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான தனியான கூட்டணியொன்றையும் உருவாக்கியுள்னர். இவ்வாறு பொதுஜன பெரமுன பல்வேறு துண்டுகளாகப் பிரிந்திருக்கும் சந்தர்ப்பத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் அவர்களுக்கு சவால் மிக்கதாக இருக்கும் என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பாக உள்ளது.
மறுபக்கத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடுகள் அதிகமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள அனைவரும் கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மீண்டும் தாய் கட்சிக்கும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைப் பெரும்பாலானவர்கள் கொண்டிருப்பதாகவும், இதன் விளைவாகவே தலைமைத்துவத்துக்கும் அவர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
பொதுத்தேர்தலொன்றுக்குச் செல்வதைவிட ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டைப் பலர் எடுத்திருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம், கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுக்கு ஆதரவாக இருந்த முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் பலரையும் தன்னுடன் இணைக்கும் முற்சிகளை எதிர்க்கட்சித் தலைவர் மேற்கொண்டு வருகின்றார். முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை இணைத்த விவகாரம் சஜித் பிரேமதாசவுக்கும், பொன்சோக்காவுக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு வழிவகுத்தது.
இதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்கு எதிராக பொன்சேகா நீதிமன்றத்தை நாடியிருந்ததுடன், அதற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவையும் பெற்றிருந்தார். இவ்வாறான நிலையில் சிவில் பாதுகாப்புப் படையின் வன்னி பிரதேசத்துக்குப் பொறுப்பாக இருந்தவரும், மக்களின் மனங்களை வென்றவர் என்று பாராட்டப்பட்டவருமான கேணல் ரத்னப்பிரிய பந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டார்.
முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர்களை இணைத்துக் கொள்வதில் காணக்கூடிய அரசியல் கணக்கு எவ்வாறு உள்ளது என்பது புரியவில்லை.
இது இவ்விதமிருக்க, மக்கள் அனைவரும் தமது பக்கம் ஆதரவாக இருக்கின்றனர் என்று கணிப்பீட்டை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி தொடர்பிலான மக்களின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருப்பதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாகம் தொடர்பில் அனுபவம் இல்லாதவர்களை நம்பி மீண்டும் நாட்டைக் கையளிப்பதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருப்பதாகவும் தெரியவருகிறது. இருந்தபோதும் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியதும் மக்களின் நிலைப்பாடுகளும் தெளிவாகத் தெரியவரும்.
பி.ஹர்ஷன்