ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (10) பிற்பகல் 2.00 மணிக்கு குளியாப்பிட்டி மாநகர சபை மைதானத்தில் நடைபெறும்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், அவர் பங்கேற்கும் முதலாவது பொதுக்கூட்டம் இதுவென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தற்போது கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம், இறுதியில் அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.
‘உண்மை’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பொதுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.