மானம் காத்த மாதரசிகள்…
வீட்டிற்காகவும் நாட்டிற்காகவும்
உன்னத சேவை செய்யும்
உயர்ந்தவர்கள் பெண்கள்…
தாயாக தாரமாக தாதியாக-
சமூகத்திற்காக விழிப்போடும்
தன்னலம் பாராத
பறந்து விரிந்த தாராளமானதோடு
அரிய சேவை செய்யும்
பெண்கள் நாட்டின் கண்கள்…
பெண்கள் அடக்கப்பட்டவர்களாகவும்….
ஒடுக்கப்பட்டவர்களாகவும்….
உள்ளக் குமுறல்களையும்
வேதனைகளையும்
மெல்லவும் முடியாமல்
சொல்லவும் முடியாமல்
பல சுமைகளை தாங்கியவர்களாக…..
பெண்களின் தேவையே சேவை தான்…
ஊதியம் இல்லா சேவைகள்…
பரந்து விரிந்த மனதோடு
குடும்பத்திற்காக ஓயாத
அலைகள் போல
தாயாகச் சேவை செய்யும் பெண்கள்…
மதிக்கப்படவேண்டியவர்கள்!
உடலாலும் உடையாலும்
அலங்கரிக்கப்பட்டு
அநாகரீக – அசையும் பொம்மைகளாக
வீதி உலா வருவதல்ல பெண் சுதந்திரம்!
தன் உரிமைகளை விட்டுக் கொடுக்காது..
தட்டிக் கொடுத்து அன்பாலும் பணிவாலும்
சாதிப்பதே வீரம்!
பொய் களவு கொலை கொள்ளை
சூது வஞ்சனை மது மாது ஏமாற்றம்….
இந்த பட்டியலிலிருந்து
பிரித்தெடுத்து படித்தெடுத்து
வருங்கால சந்ததிகளை உருவாக்குவதே
பெண்களின் உயரிய சாதனை!!
தன்னந்தனியாக
குடும்ப பாரத்தை சுமக்கும்
சுமைதாங்கிகள் மீது
கட்டவிழ்த்து விடப்படும்
கறுப்புப் புள்ளிகள்
வெறுப்புப் புள்ளிகளாக…
வேதனை கீறல்களாக…
காயப்படுகின்ற போது
நோய்ப்படும் ஊமைகள் எத்தனையோ….
வியர்வை சிந்தி இரத்தம் சிந்தி
சம்பாதிக்கும் ஊதியங்களின் சுரண்டல்கள்…
கூலியை பெறுவதில் எதிர்கொள்ளும்
மிரட்டல்கள்…
இல்லத்து வன்முறைகள்…
பாலியல் துன்புறுத்தல்கள்…!
உடலாலும் உள்ளத்தாலும்
நாகரிகமாகவும் அநாகரிகமாகவும்
நகைச்சுவையாகவும் துன்புறுத்தும்
செயற்பாடுகள்…
இவற்றை கண்டும் காணாமலும்
கண்களுக்குள்ளே…
கண்களுக்கு வெளியே…
முற்றுப்பெறாத முடிவுரையாக….
பதாகைகள் ஏந்துவதும்
பகல் விளக்கு எரிவதும்
கூட்டங்கள் கூடுவதும்
கூச்சலிட்டு பேசுவதும்
ஊடகங்களில் உலா வருவதும்
உப்பில்லா உணவு போல்தான்….
அகதியாய் அநாதையாய்
உள்ளக்கிடக்கையை
வெளியே சொல்ல
முடியாமல் தவிக்கும்
ஊமைக்கிளிகள்தான் எத்தனை….??
விடியாத இரவுகளாக…..