இறைநேசக் கவி
அல்லாமா இக்பால்
உவமித்த
இரு முனையும் கூரான
இளம் பிறை
இளசுகள் ஆரவாரித்திட
அகமது குளிர்ந்திட
அந்தி வானில் அழகாய் தோன்றியது
ரமழானின் தலைப் பிறையாய்
விடியலைப் பெறுவதற்காய்
விழித்திருந்தே அமல் செய்து
இரு விழி ஓரங்களில்
ஈரம் கசிந்திட
ஆவலோடு ஆசையாய்
காத்திருந்தோம்
கண்ணியம் மிகு ரமழானே
உலக மாயைகளில் உந்தப்பட்டு
மனோ இச்சைகளுக்கு வழிபட்டு
வாழ்வு இழந்து தவிக்கின்றோம்
வல்லோனின் மகிமை மிகு ரமழானே
முழுமதியாம் நபி (ஸல்)
கைற உம்மத்தாய் நாம்
விட்டில் பூச்சிகளாய்
வீணில் அழிகின்றோம்
விரக்தியில் வாடுகின்றோம்
அராஜகத்தின் உச்சியில்
அவலங்களின் மத்தியில்
ஈமானிய சொந்தங்கள்
இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு
இல்லாது ஒழிக்கப்படுகின்றனர்
பண பலம் படை பலம் பலவிருந்தும்
பலன்கள் ஏதும் இல்லை
லாயங்களில் ஆழ்ந்த நித்திரையில்
அரேபியக் குதிரைகள்
நீண்ட வரிசையில்
நிராயுதபாணிகளாய்
நெஞ்சுறுதியோடு
சுவனப் பயணத்திற்காய்
காத்திருக்கும்
சாம் தேசத்து மைந்தர்கள்
வானில் நாளும்
வலம் வரும்
பத்றுடைய மலக்குள்
படையணி கொண்டு
பாலஸ்தீன் விசுவாசிகளை
பாதுகாத்திட யாசிக்கின்றோம்
யா ரமழானே
கரங்களைப் பலப்படுத்தி
கால்களை ஸ்திரப்படுத்தி
வெற்றியை அளித்திடச் செய்
யா! ரமழானே
கண்சிமிட்டும்
வானகத்து தாரகையாய்
நாளும் மாறும்
வையகத்து தாரகைகளாம்
பலஸ்தீனத்தின்
பால்மணம் மாறாப் பாலகர்கள்
மேன்மைக்கு உரிய ரமழானே
உள்ளம் உருகியதாய்
உனதான பொருட்டால்
மறையோனிடத்தில்
மன்றாடுகின்றோம்
ஆதரவற்ற அநாதைகளாய்
தவிக்கும் இந்த
பாலஸ்தீன அப்பாவிகள் மீது
உனதருளைச் சொரிந்திடு
யா ரமழானே
பாலஸ்தீன தியாகிகளுக்கு
விரைவாய் விடியலைத் தந்திடு
யா ! ரமழானே
சுதந்திர காற்றை
சுவாசித்திடும் பாக்கியத்தை
வெகு சீக்கிரத்தில் தந்திடு
யா ! ரமழானே