- குறைந்தபட்ச சம்பளம் 07 இலட்சம் ரூபா
- நிர்மாணத்துறை, விவசாயத்துறையில் அதிக வாய்ப்பு
இஸ்ரேலில் இந்த ஆண்டு சுமார் 40,000 வேலைவாய்ப்புகளை இலங்கையருக்கு பெற்றுக்கொடுக்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய கிழக்கு அல்லாத ஒரு நாட்டிலிருந்து தொழில்சார் அங்கீகாரமாக இவ்வளவு பாரியளவிலான வேலைவாய்ப்புகள் நாட்டுக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வேலைவாய்ப்புகளில் நிர்மாணத்துறையில் 20,000 வேலைவாய்ப்புகள் மற்றும் விவசாயத்துறையில் 10,000 வேலைவாய்ப்புகளும் அடங்குகின்றன.
இதற்கு மேலதிகமாக தற்போதுள்ள தாதியர் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நிர்மாணத்துறையை பொறுத்தவரையில் இயந்திரங்கள் மற்றும் கனரக போக்குவரத்து போன்ற துறைகளில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை பெறவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அடுத்த வாரம் இஸ்ரேல் செல்லவுள்ளார். நிர்மாணத்துறை மற்றும் விவசாயத்துறைகளுக்கு துறைசார் அனுபவமும் நிபுணத்துவமும் மட்டுமே தேவை எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வேலைவாய்ப்பைப் பெற்றுச் செல்பவர்களுக்கு சகல வசதிகளுடனான இந்த வேலைவாய்ப்புகளுக்கான குறைந்தபட்ச சம்பளம் இலங்கை ரூபாவில் 07 இலட்சம் ரூபாவை விட அதிகமாகவே கிடைக்கும்
விவசாயத்துறையில் வேலைவாய்ப்புக்கு ஏற்கனவே குழுக்கள் புறப்பட்டு சென்றுள்ளன. நிர்மாணத்துறையில் வேலைவாய்ப்புகளுக்கு தேவையான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளன.
இஸ்ரேலிலிருந்து அதிகாரிகள் இலங்கை வந்து வேலைவாய்ப்புக்காக செல்லவுள்ளவர்களின் தகுதிகளை பரீட்சித்தனர்.
நிர்மாணத்துறை மற்றும் விவசாயத்துறை வேலைவேய்ப்புக்காக செல்லும் 30,000 பேரூடாக நாட்டுக்கு குறைந்தது 25,000 கோடி ரூபா (250 பில்லியன் டொலர்) அந்நியச் செலாவணியைப் பெற முடியுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.