தெருவிலும் பொது இடங்களிலும் ஒய்யார நடைபோடும் பெண்களைக் காணும் ஆண்கள், ஆஹா என தன்னிலை மறக்கலாம். ஆனால் இப் பெண்களில் சிலர் நெஞ்சம் கொள்ளாத சோகங்களையும், பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிகளை தேடிக் கொண்டுமிருக்கின்றார்கள் என்பதை அவர்களது வெளித்தோற்றம் ஆண்களுக்கு புலப்படுத்துவதுமில்லை.
பெண் என்றால் கணவனுக்கு அடங்கியும், அவனைத் திருப்திப்படுத்தியும், குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டும் இருக்க வேண்டும். பின்னணியில் இருந்தே செயல்படவேண்டும். மற்றும் பெட்டிப் பாம்பாக இருந்தாலே போதும் என நினைக்கும் ஆண்களே அனேகர். ஆனால் அந்நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது என்பதே உண்மை.
வன்னிச் சமரின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களில் மகளிரே அதிக எண்ணிக்கையானோர் என்பது தெரிய வந்தது. போராளிகளாக பாதிக்கப்பட்ட பெண்கள், கணவரை இழந்து விதவையான பெண்கள், பிள்ளைகளை இழந்த தாய்மார், சார்ந்து வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள், நிர்க்கதியாகி நடுத்தெருவுக்கு வந்த பெண்கள், தமது குடும்பத்தவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அவர்களை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் என அடுத்த அடியை எங்கே வைப்பது, எப்படி வைப்பது என்பது தெரியாமல் அல்லாடும் பெண்கள் அனேகர்.
பெண்கள் அபலைகளாவது யுத்தத்தினால் மட்டுமல்ல. குடும்பத்தை அம்போவெனக் கைவிடும் கணவன் (தந்தை)மார், கட்டிய மனைவியை வேறொருத்தி மீதான ஈர்ப்பால் கைவிடும் கணவன்மார், குடும்ப வறுமை காரணமாக கல்வி வசதி கிடைக்காமல், சொற்ப வருமானத்துக்காக கடுமையாக உழைத்தும் தன் வாழ்வைத் தொலைக்கும் பெண்கள் எனக் குமுறும் இதயங்களை நாட்டின் எல்லா பகுதிகளிலும் காணலாம்.
மார்ச் எட்டாம் திகதி அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இலங்கையிலும் மகளிர் விழா நடத்தப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். சங்க காலத்தில் புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீர மங்கை முதல், வேலு நாச்சியார், வரையிலும், துப்பாக்கி ஏந்தி சுதந்திரத்துக்காக போராடும் பெண் போராளிகள் வரை இத்தினத்தில் நினைவுகூரப்படுவது வழமை, ஆணாதிக்க உலகில் பெண்கள் சமூக மட்டத்திலும், அரசியல், பொருளாதார மட்டங்களிலும் எவ்வளவு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. எவ்வாறெல்லாம் அவர்கள் புறக்கணிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் மேடைகள் மிகக் குறைவு. இத்தனை ஆண்டுகளாக மகளிர் தினத்தை கொண்டாடி வந்தாலும், இலங்கையில் பெண்களின் சமூக நிலை, அங்கீகாரம் ஆண்கள் அளவுக்கு உயர்ந்துள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அமங்கலி என்ற சொல் பெண்கள் மீது மட்டுமே பிரயோகிக்கப்படுகிறது. சத்தான உணவுகள் தொடர்ச்சியாகக் கிடைக்காத சிறுமியர் வயதுக்கு வருவது முன்னர் 17, 18 வயதுவரை நடப்பதில்லை. இப்படித் தாமதமாகும் போது அச் சிறுமியை ‘இருளி’ என அழைக்கும் ஒரு காலம் இருந்தது. இருளி என்றால் விடியலை காணாதவர் என்று பொருள். ஒரு பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போகும்போது அப் பெண் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்படுகிறார். மூளி என்ற பட்டம் பெண்ணுக்கு மட்டும்தான்.
கணவனை இழந்தவள் மிக மோசமாக, மனிதத் தன்மையற்ற வகையில் நடத்தப்படுவது தமிழ்ச் சமூகத்தில்தான். மங்கள நிகழ்வுகளில் அவளுக்கு இடமில்லை. மாதவிடாய் அசுத்தமும் அசூசையும் கொண்டதாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.
இவ்வாறு சமூக, சமய ரீதியாகக் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை நீக்க எந்த முயற்சியும் செய்யாமல் மகளிர் தினம் கொண்டாடுவதில் என்ன அர்த்தம்? அலுவலகங்களில் மகளிருக்கு சம அந்தஸ்து என்கிறார்கள். அலுவலகத்தில் ஒரு வைபவம் நடக்கிறது என்றால் பெண்களை ‘மங்கள’கரமாக வரச் சொல்வார்கள். சிற்றுண்டித் தட்டுகளை ஏந்தி பரிமாறுவது பெண் ஊழியர்கள்தான். வரும் விருந்தினர்களை திலகமிட்டு பன்னீர் தெளித்து வரவேற்க அழகிய பெண்களைத்தான் நிறுத்துவார்கள். அங்காவது, எச்சந்தர்ப்பத்திலாவது, மகளிர் தின வைபவத்திலாவது இவற்றை ஆண்கள் செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?
பெண்கள் கல்வித்தரம், விசேட சித்திகள் அடிப்படையில் உயர் பதவிகளைப் பெறுகிறார்கள், தொழில் அடிப்படையில் ஆண்கள் பெண் அதிகாரிகளுக்கு பணிந்து போகிறார்களே தவிர, பெண் இரண்டாம் தரம்தான் என்ற மனப்பான்மை மட்டும் அவர்களிடம் அப்படியே தான் இருக்கும்.
இந்த மனப்பான்மையை மாற்ற எடுத்துக் கொள்ளும் முயற்சி தொடர்ச்சியாக நடைபெற வேண்டிய ஒன்று. ஒரு தினத்தில் மட்டும் நினைவு கூரப்பட வேண்டியவள் அல்ல. ஆணாதிக்க சமூகத்தில் ஆண்களின் கொடுமைகளை எதிர்த்து போராடும் பெண்களை சமூகம் பாராட்டி கௌரவம் தர வேண்டும். சாதனைப் பெண்களைத் தேடி அவர்களது சாதனை வரலாற்றை எடுத்துச் சொல்லி ஏனைய பெண்களுக்கும் முன்மாதிரியாக நிறுத்த வேண்டும்.
கொக்குவில்லை பிறப்பிடமாகக் கொண்ட தர்மலக்ஷ்மி கிளிநொச்சியில் வாழ்ந்தவர். வறுமைச் சூழல். அங்கு அவருக்கும் சில்லறைக் கடை முதலாளியான இளைஞனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. திருமணமும் நடைபெற்றது. மூன்று பெண் குழந்தைகள். தொழில் விஷயமாக அடிக்கடி கிளிநொச்சி நகருக்கு சென்ற வரும் கணவர் அங்கே ஒரு பெண்ணை சந்தித்தார். அவருடன் காதல் வயப்பட்டார். அதைப்பற்றிக் கேட்டால் தர்மலக்ஷ்மிக்கு தர்மஅடி, உதை கிடைக்கும். ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறி அப் பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தத் தொடங்கினார். அந்த ஆண் சிங்கம்! கூடவே தன் மூத்த மகளையும் தன்னுடன் கூட்டிச் சென்றுவிட்டார். வருமானமின்றி தவித்த தர்மலக்ஷ்மி கிளிநொச்சி ஹோட்டல் ஒன்றில் தினசரி இரண்டாயிரம் இடியப்பம் அவித்துத்தர ஒப்புக்கொண்டு அதை மாலை வேளையில் செய்யத் தொடங்கினார். பகல் பொழுதில் தையலில் ஈடுபட்டார். சில சமயம் ஹோட்டலின் சமையல் கட்டுக்கே வரும் கணவர் இடியப்பம் பிழியும் தன் மனைவியைப் பார்த்து நக்கல் புன்னகையை வீசிவிட்டு செல்வாராம்!
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய தர்மலக்ஷ்மி, நீதிமன்றத்தின் ஊடாக தன் மூத்த மகளை தன்னுடன் இருத்திக் கொண்டார். அப்பாவினால் அழைத்துச் செல்லப்பட்ட மூத்த மகளிடம் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார்கள். அடி உதை வேறு. ஒரு முறை அடித்த அடியில் தோள்பட்டை எலும்பு முறிந்துபோனது. இன்றளவும், பல சிகிச்சைகளின் பின்னரும், மூத்த மகள் முழுமையாக சுகமடையவில்லை.
தற்போது ஐம்பது வயதான தர்மலக்ஷ்மி உரும்பிராயில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார் தன் மூன்று மகள்மாருடன். காளான், மாட்டிறைச்சி, மரக்கறி, கடலுணவுகள் எனப் பல்வகையான ஊறுகாய்களையும்,மாசிச் சம்பல், மூலிகை கோப்பி போன்ற பல உணவுப் பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இவை ஏற்றுமதியாகின்றன. கலைந்த குடும்பம், வாழ வழியற்ற வறுமைச் சூழல், வியர்த்தமான முயற்சிகள் எனப் பல சோதனைகளைத் தாண்டிய தர்மலக்ஷ்மி என்ற சாதனைப் பெண் இன்று சொந்தக் காலில் நின்று வசதிகளுடன் வாழ்கிறார். சொந்த வீட்டில் வாழ வேண்டும். தனித் தொழிலகம் அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற அவரது கனவுகள் நனவாகட்டும்.
வவுனியா கன்னாதிட்டியில் சந்தித்த நிஷாந்தன் ஷோபனாவுக்கு 35 வயதாகிறது. ஒன்றரை மற்றும் இரண்டரை வயதில் இரண்டு குழந்தைகளின் தாயார். எடுப்பான தோற்றத்தில் தைரியமும் நம்பிக்கையும் தென்படுகிறது. வசீகரிக்கும் குரல், யுத்த காலத்தில் குடும்பத்துடன் தமிழகம் சென்றவர்கள் மீள்குடியேறியிருக்கிறார்கள். அப்பா தினக்கூலி வேலைகள் செய்ய, தமிழகத்தில் தான் பயின்ற வாழைநார் உற்பத்திகளை இங்கே செய்து பார்த்தால் என்ன என்று ஷோபனாவுக்கு தோன்றியிருக்கிறது. தொப்பி, மேசை விரிப்பு போன்றவற்றை வாழைநாரைப் பயன்படுத்தி உருவாக்கி விற்க முனைந்ததில் தோல்வியே கிட்டியது. பின்னர் வந்த கொரோனா, பொருளாதார சரிவு, பணப் புழக்கம் குறைந்து போனமை எனப் பல இன்னல்கள். வாழைநார் பொருட்கள் தாக்குப் பிடிக்காமல் சுருங்கி பொலிவிழந்துவிடும் என்ற மக்களின் மனப்பான்மையை உடைத்தெறிவது சிரமமாக இருந்தது ஷோபனாவுக்கு.
கொவிட் தொற்று முடிவுக்கு வந்த பின்னர்தான் இயற்கை பொருட்களினால், இரசாயன கலப்பற்றதாக தயாரிக்கப்படும் பக்க விளைவுகளற்ற பொருட்களின் மகிமையை மக்கள் உணரத் தலைப்பட்டனராம். தான் உற்பத்தி செய்யும் பொருட்களை இன்னொருவர் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இவருக்கு சமீபத்தில் காமினி
கொரயா நிதியம் நடத்திய ஒரு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசான நான்கு லட்ச ரூபாவைப் பெற முடிந்திருக்கிறது. வறுமையில் இருந்து மீள வேண்டும் என்பதற்காகவே தான் விடா முயற்சியுடன் செயல்பட்டு வருவதாக சொல்லும் ஷோபனாவுடன் அவர் கணவர் இல்லை. தன் சோகத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு தொழிலில் முன்னேறிச் செல்ல முழு மூச்சுடன் செயல்படுகிறார் ஷோபனா! ஐயோ கடவுளே! என மூலையில் உட்கார்ந்து புலம்பும் பெண்களுக்கு இச் சாதனைப் பெண் ஒரு முன்மாதிரி. பிரச்சினைகளில் மூழ்காமல் அவற்றை வெற்றி கொண்டு முன்னேறிச் செல்லுங்கள் என்கிறார் ஷோபனா.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சதுஸ்டார்ஸ் என்ற நிறுவனத்தையும் தொழிலகத்தையும் நடத்திவரும் சாஜிராணி என்ற பெண்மணி ஒரு சமயத்தில் தேக்கு மரத்தடியில் கச்சான் விற்றவர் என்றால் நம்ப முடிகிறதா? யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, போராளியான கணவரை இழந்து அடுத்ததாக என்ன செய்வது என்று விழி பிதுங்கி நின்ற இப் பெண்மணி இன்று பத்து கோடிக்கும் அதிக முதலீட்டுடன் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
அகதி முகாமில் இருந்து வெளியே வந்தபோது சில பொருட்களை கையில் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அவற்றை கடையில் கொடுத்து 1300 ரூபாவை பெற்ற அவர், அப்ப மா மற்றும் அப்பத் தயாரிப்புக்கான பொருட்களை வாங்கி வரும் அவருடைய அம்மாவும் மரத்தடியில் அமர்ந்து அப்பம் தயாரித்து விற்றிருக்கிறார்கள். முதல் நாள் வியாபாரத்தில் அவருக்கு ஐயாயிரம் ரூபா கிடைத்திருக்கிறது. ஆயிரத்து 300 ரூபா முதலீட்டில் ஐயாயிரமா என்று வியந்து போன அவர், கோவில், திருவிழா, விசேஷங்கள் என பல்வேறு இடங்களுக்குச் சென்று கச்சான் விற்கத் தொடங்கியிருக்கிறார். பின்னர் மிளகு, பட்டை, உள்ளிமாவு, இஞ்சிமாவு, ஏலக்காய் போன்ற பண்டங்களை மரத்தடியில் வியாபாரமாக செய்து வந்திருக்கிறார்.
தவறுகள் மூலம் சரியானதை கற்கும் வழிமுறையில் அனுபவப் பாடங்களைப் பெற்ற சாஜிராணி, மூலிகை பப்படங்களை தயாரித்து விற்கத் தொடங்கியிருக்கிறார். கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்ட கண்காட்சியில் கலந்து கொண்ட அவருக்கு, இயற்கை பொருட்களைக் கொண்டு இரசாயனம் கலக்காத உணவுப் பண்ட தயாரிப்பில் இரண்டாம் இடம் கிடைத்திருக்கிறது. கூடவே அமெரிக்க சுற்றுப் பயணத்துக்கான வாய்ப்பும் வாய்த்திருக்கிறது.
அந்தப் பயணத்தை மறுத்த இவர், பதிலாக பாதையோரமாக ஒரு காணித்துண்டைப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். காணி கிடைத்தது. அவர் பரிசு பெற்றதை அறிந்த பலரும் அவரிடம் வந்து ஏராளமான ஓடர்களைத் தர ஆரம்பித்தார்களாம். இவ்வாறு ஆரம்பித்த அவரது ஏறுமுகம், இன்று அவரை நிறுவன அதிபராக்கி இருக்கிறது.
இது மட்டுமல்ல, பெருந் தொழிலதிபர் அம்பானியியன் அழைப்பை ஏற்று முப்பை சென்று அம்பானியின் விருந்தினராக உபசரிக்கப்பட்டுள்ளார். கீழ் மட்டத்திலிருந்து உழைப்பினால் மேலே வந்தவர் என்ற வகையில், சுய தொழிலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த தன்னைப் பற்றி எங்கேயோ கேள்விப்பட்டு கூறிய அம்பானி, இந்தியத்தரத்துக்கு பொதியிடல், இந்திய வார்த்தைகள் என்பன இல்லாததால் பப்படத்தை மொத்தமாக வாங்கி இந்தியாவில் தானே சந்தைப்படுத்த விரும்புவதாக கூறியதாக பெருமைப்படுகிறார் சாஜிராணி.
மூன்றாவது சாதனைப் பெண் மட்டக்களப்பு தளவாய் கிராமத்தைச் சேர்ந்த விஜயநிலா. இவருக்கு இரண்டு சகோதரர்கள். இவரது இளமையில் தந்தையார் குடும்பத்தைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். இரு சகோதரர்கள் உழைப்பில் குடும்பம் நடந்து கொண்டிருந்தபோது க.பொ.த. சாதாரணதர தேர்வின் பின்னர், பனம்பொருள் அபிவிருத்தி சபை நடத்திய ஒரு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பனை ஓலையைப் பதப்படுத்தி, சாயமேற்றி எவ்வாறு ஓலைப் பெட்டிகள், தட்டுகள் போன்றவற்றை உருவாக்குவது என்ற கலையைக் கற்றுக் கொண்டார். சரியாகச் சொன்னால் யாழ்ப்பாணத்தில் விற்பனையாகும் பனையோலைகளால் தயாராகும் பொருட்களின் தரத்துக்கு இவரது தயாரிப்புகள் அமைந்திருந்தன. இதையடுத்து வீட்டிலேயே பனையோலைப் பெட்டிகளைத் தயாரிக்கத் தொடங்கினார். ஒரு இந்தியப் பெண்மணி தானாகவே முன்வந்து உதவிகள் செய்து விற்பனைக்கு வழிவகுத்ததாகக் கூறும் இவர், இரண்டு நபர்கள் தனக்கு தொடர்ச்சியாக ஒர்டர்களை அளித்து வருவதாகவும் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதாகவும், வருமானம் மகிழ்ச்சி அளிப்பதாகவும் சொல்கிறார். முதல் முறையாக இவரைத் தொடர்புகொண்ட போது, அழைப்புக்கு காது கொடுக்காமல் வையுங்கள் போனை என்று அதட்டலாகச் சொன்னார் விஜயநிலா. இந்தப் பெண் இப்படி முசுடாக இருந்தால் எப்படி சுயதொழிலில் வெற்றி பெறுவார் என்ற சந்தேகத்துடன் மீண்டும் அழைப்பை எடுத்து நான் யார், ஏன் பேசுகிறேன் என்பதை சுருக்கமாகச் சொன்ன பின்னர்தான் மன்னிப்பு கேட்டுக் கொண்டு சுமுகமாகப் பேசத் தொடங்கினர்.
அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்று வருவதை சகிக்காத சில ஆண்கள் அழைப்பை எடுத்து கண்டபடி போசுவார்களாம். அப்படியான அழைப்போ என எண்ணிய கடுமையான தொனியில் பேசி விட்டதாக காரணம் சொன்னார் விஜயநிலா. மகளிர் சொந்தக் காலில் நிற்பதை சில ஆண்கள் விரும்புவதில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம். நாற்பதை எட்டிப் பிடிக்கும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தந்தை ஏற்படுத்திச் சென்ற வடு காரணமாக இருக்கலாம். திருமணம் பற்றிக் ேகட்டபோது, சிறு புன்னகையுடன் ஆமாம் செய்து கொள்ளலாம் தான் என்றார்.
அருள் சத்தியநாதன்