இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காஸாவில் உடனடி மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை (20 ஆம் திகதி) செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்பிரேரணையை வலுவற்றதாக்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அல்ஜீரியா கொண்டு வந்த இப்பிரேரணைக்கு 13 நாடுகள் ஆதரவாகவும் அமெரிக்கா எதிராகவும் வாக்களித்தன. பிரித்தானியா வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறப்படவிருந்த இப்பிரேணைக்கு எதிராக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியது அமெரிக்கா.
அமெரிக்காவின் இச்செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, உலகளாவிய ரீதியில் பெரும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் யுத்தத்தைத் தொடங்கியது முதல் மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தி இற்றைவரையும் மூன்று தடவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பிரேரணைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த அனைத்து பிரேரணைகளுக்கு எதிராகவும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட மனிதாபிமான யுத்தநிறுத்தத்தையும் மனிதாபிமான உதவிகளை தங்குதடையின்றி அனுப்பி வைப்பதையும் வலியுறுத்தி அழைப்பு விடுத்த பிரேரணை, அதன் பின்னர் டிசம்பர் 08 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட மனிதாபிமான யுத்தநிறுத்தக் கோரிக்கை பிரேரணை என்பன ஏற்கனவே அமெரிக்க வீட்டோ அதிகாரத்தினால் செல்லுபடியற்றதாக்கப்பட்டவையாகும்.
அத்தோடு ஐ.நா பொதுசபையில் ஒக்டோபர் 27 திகதியும், டிசம்பர் 12 ஆம் திகதியும் கொண்டு வரப்பட்ட மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்திற்கு எதிராகவும் அமெரிக்கா வாக்களித்தது.
ஹமாஸ் கடந்த வருடம் (2023) ஒக்டோபர் மாதம் இஸ்ரேலினுள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து காஸா மீதான யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்தது. குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் என்பன காஸாவுக்குள் கொண்டு செல்லப்படுவதற்கு தடை விதித்த இஸ்ரேல் வான், தரை, கடல் ஆகிய மூன்று மார்க்கங்களின் ஊடாகவும் இப்போரை ஆரம்பித்தது.
இவ்வாறு தொடங்கிய இப்போர், 136 நாட்களையும் கடந்து நீடித்து வருகின்ற சூழலில், இற்றைவரையும் காஸாவில் 29 ஆயிரம் பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்களாவர். அத்தோடு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காஸாவில் 85 வீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற முகாம்களிலும் கூடாரங்களிலும் தங்கியுள்ளனர். அங்கு உணவு, குடிநீர், மருந்துப் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது.
இஸ்ரேலின் ஹரம் அபு சலம் நுழைவாயில் ஊடாக காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்லப்படுவதற்கு இஸ்ரேலியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். யுத்தம் நீடிப்பதால் ரபா எல்லை வழியாக மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குள் அனுப்பி வைக்கப்படுவதிலும் சீரின்மை ஏற்பட்டுள்ளது.
வடக்கு காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத சூழல் காணப்படுவதால் ஐ.நா. உலக உணவுத்திட்டம் அப்பிரதேசத்திற்கான மனிதாபிமான உதவித் திட்டங்களை நிறுத்தியுள்ளது. மனிதாபிமான உதவிகளை காஸா மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு யுத்தம் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதனை உலக உணவுத்திட்டம், ஐ.நா. மனிதாபிமான நிவாரண அமைப்பு, யூ.என்.ஆர்.டப்ளியு.ஏ உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்நிலையில் 18 மனிதாபிமான உதவி நிறுவனங்களின் தலைவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், தண்ணீர் உட்பட காஸாவில் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக எச்சரித்துள்ளனர். உணவு, குடிநீர், மருந்து பற்றாக்குறை என்பன காஸாவில் பெரும் பிரச்சினையாகியுள்ளன. மக்கள் பட்டினிக்கும் வறுமைக்கும் முகம்கொடுத்துள்ளனர்.
காஸாவின் இம்மனிதாபிமான நெருக்கடி நிலை உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளது. அதனால் இப்போரை நிறுத்தி மனிதாபிமான உதவிகளைத் தங்குதடையின்றி காஸாவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரி அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெறுகின்றன. இஸ்ரேலிய மக்களும் கூட யுத்தத்தை நிறுத்தி பணயக்கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த யுத்தம் காரணமாக 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள ரபாவுக்கு யுத்தத்தை விரிவுபடுத்தப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் இஸ்ரேல் அறிவித்ததோடு, ரபாவில் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் நூறு பேர் முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர். இடம்பெயர்ந்துள்ள மக்கள் செறிவாகத் தங்கியுள்ள பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த நிலையில் ரபா மீது யுத்தம் முன்னெடுக்கப்படக் கூடாது என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இவ்வாறான சூழலில் காஸாவில் உடனடி மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் இப்பிரேரணையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அல்ஜீரியா கொண்டு வந்தது. அதனையே அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து வலுவற்றதாக்கியுள்ளது.
முழுஉலகமும் காஸா மீதான யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தியும் அவற்றைக் கண்டுகொள்ளாத இஸ்ரேல், யுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதிலேயே குறியாக உள்ளது.
ஆனால் இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தத்தின் கடுமை, அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், அழிவுகள் குறித்து அமெரிக்கா அறியாததல்ல. அப்படியிருக்கையில் காஸா மீதான யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தும் பிரேரணையை அமெரிக்கா வீட்டோ மூலம் செல்லுபடியற்றதாக்கியது ஏன்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இந்நடவடிக்கை யுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்ட சமிக்ஞையாகவே அமையுமென சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஸா மீதான யுத்தத்தை நிறுத்த கோரும் பிரேரணை நிறைவேற்றப்படுவதை எதிர்க்கும் அதே அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல்_ -ஹமாஸுக்கு இடையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறது. இதன் நிமித்தம் மத்திய புலனாய்வு முகவரகத்தின் (சி.ஐ.ஏ) பணிப்பாளர் அமெரிக்க தரப்பில் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி வருகின்றார். இவ்வாரத்தின் நடுப்பகுதியில் எகிப்தில் நடைபெற்ற காஸா யுத்தநிறுத்தக் கலந்துரையாடல்களில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மத்திய கிழக்குக்கான விசேட பிரதிநிதி பிரட் மெக்குர்க் கலந்து கொண்டிருந்தார்.
இவை மாத்திரமல்லாமல் காஸா மீதான யுத்தத்தில் சிவிலியன்கள் பாதிக்கப்பட இடமளிக்கக்கூடாது என அடிக்கடி இஸ்ரேலை வலியுறுத்தும் அமெரிக்கா, சுதந்திரப் பலஸ்தீனை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் கூட முன்னெடுத்து வருகின்றது.
அதேநேரம், காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக் கோரி யெமனின் ஹுதிக் கிளர்ச்சியாளர்கள் முன்னெடுக்கும் தாக்குதல்களை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறவில்லை. இவை இவ்வாறிருக்க, இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதத் தளபாடங்களையும் நிதியுதவிகளையும் தாராளமாக வழங்கக்கூடிய நாடாகவும் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இச்செயற்பாடுகள் மக்களுக்கு ஆச்சரியமானதாகவும் புரியாத புதிராகவும் உள்ளது.
இவ்வாறான நிலையில் இந்த யுத்தநிறுத்த கோரிக்கைப் பிரேரணையை ஐ.நா. பாதுகாப்பு சபையில் மூன்றாவது தடவையாகவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக்கியுள்ளமைக்கு உலகின் பல நாடுகளும் ஆட்சேபனைகளையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.
அதேநேரம் சீனாவின் ஐ.நா. வுக்கான பிரதிநிதி ஜான் ஜுங், இப்பிரேரணையை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்படியற்றதாக்கியதன் ஊடாக தவறான செய்தி வழங்கப்பட்டிருக்கிறது. காஸாவின் நிலை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. காஸா போர் நிறுத்தத்திற்கு ஆட்சேபனை தெரிவிப்பது, தொடர் படுகொலைகளுக்கு பச்சைவிளக்கு கொடுப்பதில் இருந்து வேறுபட்டதல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய பிரதிநிதி, ‘அமெரிக்கா வீட்டோவை பாவித்தமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரலாற்றில் மற்றொரு கறுப்பு பக்கம் என்றும் பலஸ்தீனியர்களை அவர்களது பிரதேசங்களில் இருந்து வெளியேற்றி இஸ்ரேல் மனிதாபிமானமற்ற திட்டங்களை நிறைவேற்றவும் வகை செய்துள்ளது என்றுள்ளார். அத்தோடு பிரான்ஸ், சவுதி அரேபியா, கட்டார் உள்ளிட்ட பல நாடுகளும் அமெரிக்கா இப்பிரேரணைக்கு எதிராக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியமைக்கு ஆட்சேபனைகளையும் கவலைகளையும் வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், ‘உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது, ஹமாஸ் இடையே ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளை தடுக்கலாம்’ என்றும், முக்கியமான பேச்சுவார்த்தைகளை ஆபத்தில் ஆழ்த்தும் ஒரு தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்க முடியாது’ என்றும் கூறியுள்ளார்.
மர்லின் மரிக்கார்