இலங்கையில் அரசியல் ஊகங்கள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லை. அதுவும் இவ்வருடம் தேர்தல் ஆண்டு என்பதால் பல்வேறு விதமான ஊகங்கள் முன்வைக்கப்படுவதுடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாளுக்குநாள் புதுப்புது ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரசியலமைப்பின்படி இவ்வருடம் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டி இருக்கின்றபோதும், தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அதுவே தற்போதைய ஜனாதிபதிக்கு சாதகமாக இருக்கும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊகங்கள் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், அவ்வாறு செய்வதன் ஊடாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது பாராளுமன்றத்தின் ஊடாக மீண்டும் ஜனாதிபதி தனது பதவியில் நீடிக்கவிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
ஆனால் அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. அவையெல்லாம் புரளியைக் கிளப்புகின்ற செய்திகள்தான் என்பதில் சந்தேகமில்லை. இதனால் அது குறித்த பேச்சுக்கள் முடிவுக்கு வந்து தற்போது அரசியல் கட்சிகள் தம்மைத் தேர்தலுக்குத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளன.
இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்ற பேச்சு தற்போது மீண்டும் எழுந்துள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையென்றும், சிவில் சமூகங்களை முன்னிலைப்படுத்தி தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்வதாகவும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல குற்றஞ்சாட்டியிருந்தார்.
அவருடைய இந்தக் கருத்துக்கு அமைய அவ்வாறு செய்ய முடியுமா என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராயத் தொடங்கியுள்ளன. தேர்தலை ஒத்திவைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வரலாறு இலங்கைக்கு ஏற்கனவே இருப்பதால், அவ்வாறானதொரு முயற்சி மேற்கொள்ளப்படலாமா என்பது அரசியல் கட்சிகள் மத்தியில் காணப்படும் சந்தேகமாகும்.
இருந்தபோதும், அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றபோதிலும், நடைமுறையில் அதற்கான சாத்தியம் குறைவென்றே கூற வேண்டும்.
மறுபக்கத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதன் ஊடாக ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவியது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றபோதும், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஓர் உத்தியாக இதனைப் பயன்படுத்துவதற்கு அவர்களின் ஒத்துழைப்பு எந்தளவுக்கு இருக்கும் எனக் கூறமுடியாது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாயினும் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையுடன், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். எனவே, தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தியாக இதனைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளன.
இதுபோன்று மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலானது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைய இவ்வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
ஜனாதிபதித் தேர்லை நடத்துவதற்கான ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியும் என்றும் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேநேரம், பொதுத்தேர்தல் அடுத்தவருடம் நடத்தப்படும் என்றும், 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அத்தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. அது மாத்திரமன்றி, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்குக் கிடையாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லையென்பதாலேயே இவ்வாறான செய்திகளைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களை வீணாகக் குழப்பி வருவதாக அவர் கூறியிருந்ததுடன், முடிந்தால் தேர்தலை எதிர்கொண்டு காட்டுமாறும் அவர் சவால் விடுத்தார்.
தேர்தலுக்கான ஆயத்தங்களும் குழப்பங்களும்:
தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்ற கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்று வந்தாலும், தேர்தலொன்றுக்கான ஆயத்தப்படுத்தல்களில் கட்சிகள் இறங்கியிருப்பதையும் காணமுடிகிறது. தேர்தலை அடிப்படையாகக் கொண்ட கூட்டணி அமைப்பது தொடர்பில் பெரும்பாலான கட்சிகள் ஆரம்பகட்டக் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.
கூட்டணி குறித்த பேச்சுக்கள் ஒருபுறம் இருக்கையில், தேர்தலை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில கட்சிகளுக்குள் உள்முரண்பாடுகளும் வலுப்பெற்றுள்ளன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடு வலுவடைந்திருப்பதைக் காணமுடிகிறது. கட்சியின் தலைமைத்துவத்துக்கும், கட்சியின் தவிசாளருக்கும் இடையிலான முரண்பாடு நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் உள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தன்னைக் குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பெற்றுள்ளார்.
தேர்தல் நடைபெறவிருப்பதால் கட்சித் தாவல்கள் அதிகரித்துள்ளன. இந்த வரிசையில் கோட்டாபய ராஜபக்ஷவின் விசுவாசியாகவிருந்த முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். இவரை குறித்த கட்சியில் இணைத்தமைக்கு எதிராக அக்கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா போர்க்கொடி தூக்கியிருந்தார்.
கட்சியின் தவிசாளர் பதவியில் இருக்கும் தனக்குக் கூடத் தெரியாமல் தயா ரத்னாயக்க இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், இவ்வாறான நபர்களை இணைப்பது கட்சியைப் பலவீனப்படுத்தும் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் சிலரும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இருந்தபோதும், கட்சியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாச தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். கட்சியின் உள்ளக விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுவது தொடர்பிலும் அவர் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் தன்னை குறித்த கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கிவிடலாம் என்ற அச்சம் காரணமாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய இணைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க, பொருளாளர் ஹர்ஷ த சில்வா ஆகியோரும் இம்மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தற்பொழுது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் ஒரு சில விடயங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதாகவும், கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதில்லையென்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
பிரதான எதிர்க்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு எதிர்காலத்தில் மென்மேலும் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்திருந்தார்.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு வெளியேறுவதற்கான எந்த நோக்கமும் இல்லையென பொன்சேகா முன்னர் கூறியிருந்தார்.
இது விடயம் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்திருந்த ஜே.வி.பியின் முக்கியஸ்தரும், தொழிற்சங்கத் தலைவருமான வசந்த சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியே தற்பொழுது மக்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரேயொரு கட்சியென்றும், மக்களுடன் நிற்கும் கட்சி என்ற அடிப்படையில் பல்வேறு தரப்பினர் தம்முடன் இணைந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இது பற்றி சரத் பொன்சேகாவிடமிருந்து எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.
தமிழரக் கட்சிக்குள் குழப்பம்:
தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தென்னிலங்கைக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பது போன்று, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் தலைமைத்துவத்துக்குப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கட்சியின் ஒற்றுமையைக் குலைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அக்கட்சியின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மாநாட்டைத் தொடர்ந்தும் நடத்தவிடாமல் நீதிமன்றத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. இதன் பின்னணியிலும் சுமந்திரன் எம்.பி இருப்பதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி காணப்படும் சந்தர்ப்பத்தில் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடு எதிர்த்தரப்புக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதை அந்தக் கட்சிக்காரர்கள் புரிந்து கொள்ளவில்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இணைந்து தமிழ் மக்களுக்கான பேரம்பேசும் சக்தியாக உருவாவதை விடுத்து தமக்கிடையிலான அதிகாரப் போட்டிகளுக்குள் சிக்குண்டு ஒற்றுமையிழந்து நிற்கின்றன. தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் கட்சிக்குள்ளான இதுபோன்ற மோதல்கள் அதிகரிக்கலாம் என்பதே ஊகமாக உள்ளது.